நடப்பு 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதிலும் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த அந்த அணி ஹோம் கிரவுண்டிற்கு திரும்பியதும் பெற்ற வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் ஓவர் கிங்.. டிரென்ட் போல்ட் நிகழ்த்திய சாதனை :
அந்த வகையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே குவித்தது.
பின்னர் 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 121 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாகர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தனர்.
அதேவேளையில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் 4 ஓவர்களை வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த ஒரு விக்கெட் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் :
நேற்றைய போட்டியின் முதல் ஓவரை வீசிய டிரென்ட் போல்ட் நான்காவது பந்திலேயே சுனில் நரேனை கிளீன் போல்ட்டாக்கி வெளியேற்றினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் முதல் ஓவரிலேயே 30 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார். பவர்பிளேவில் இருபுறமும் ஸ்விங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவரான டிரென்ட் போல் நேற்றைய போட்டியின் முதல் ஓவரிலேயே தனது அந்த மேஜிக்கை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையும் படிங்க : தோனி, ரோஹித், விராட் ஆகிய ஜாம்பவான்களோடு 4 ஆவது வீரராக வரலாற்று பட்டியலில் இணைந்த – மனிஷ் பாண்டே
இதுவரை 96 போட்டிகளில் முதல் ஓவரை வீசியுள்ள அவர் அதில் 30 முறை விக்கெடுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து 126 போட்டிகளில் முதல் ஓவரை வீசியுள்ள புவனேஸ்வர் குமார் 27 முறை முதல் ஓவரில் விக்கெட் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



