163 ரன்ஸ்.. 7 மைதானங்களில் தனித்துவ சாதனை.. இங்கிலாந்தை பந்தாடி வார்னருக்கு பின் சாதனை படைத்த ஹெட்

Travis Head 2
- Advertisement -

ஆஷஸ் 2025/26 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டி ஜனவரி 4ஆம் தேதி சிட்னி மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து 384 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் சதமடித்து 160, ஹாரி ப்ரூக் 84, ஜேமி ஸ்மித் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நீசர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு 57 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜேக் வெதர்லேண்ட் 21 ரன்களில் அவுட்டானார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் இங்கிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு அரை சதத்தை அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஸ்ஷேன் 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதத்தை நெருங்கிய போது 48 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

7 மைதானங்களில் சதம்:

அப்போது களமிறங்கிய நைட் வாட்ச்மேன் மைக்கேல் நீசர் முடிந்தளவுக்கு இங்கிலாந்தை கடுப்பேற்றும் வகையில் விளையாடி 24 (90) ரன்கள் குவித்து அவுட்டானார். இந்தப் பக்கம் தொடர்ந்து இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய ஹெட் சிட்னி மைதானத்தில் முதல் முறையாக தன்னுடைய டெஸ்ட் சதத்தை அடித்து அசத்தினார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் (4), காபா (2), கான்பெரா (1), ஹோபார்ட் (1), மெல்போர்ன் (1), பெர்த் (1) ஆகிய இதர 6 மைதானங்களிலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் ஒரு சதத்தை அடித்துள்ளார்.

இதன் வாயிலாக ஆஸ்திரேலியா மண்ணில் அதிக (7) மைதானங்களில் சதங்கள் அடித்த வீரர் என்ற தனித்துவமான சாதனையை ஹெட் சமன் செய்துள்ளார். இதற்கு முன் ஸ்டீவ் வாக், மேத்தியூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர், டேவிட் வார்னர் ஆகியோரும் ஆஸ்திரேலியாவில் உள்ள 7 மைதானங்களில் சதம் அடித்துள்ளார்கள்.

- Advertisement -

21ஆம் நூற்றாண்டில்:

அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக விளையாடினார். மறுபுறம் தொடர்ந்து அதிரடியாகவே விளையாடிய ஹெட் 24 பவுண்டரி 1 சிக்ஸருடன் 163 (166) ரன்களை விளாசி அவுட்டானார். இதையும் சேர்த்து நடப்பு ஆஷஸ் தொடரில் டிராவிஸ் ஹெட் 600 ரன்களை கடந்துள்ளார். அந்த 600 ரன்களில் 500 ரன்களை அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அடித்துள்ளார்.

இதையும் படிங்க: 6, 6, 4, 6, 6, 6.. ஒரே ஓவரில் 34 ரன்ஸ்.. மஹாராஜை பொளந்த பேர்ஸ்டோ.. எஸ்ஏ20 தொடரில் சரவெடி சாதனை

இதன் வாயிலாக 21ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு ஆஷஸ் தொடரில் 500+ ரன்கள் குவித்த 2வது ஆஸ்திரேலியா ஓபனிங் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2013/14 ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னரும் 500+ ரன்கள் குவித்துள்ளார். அவருடைய நல்ல ஆட்டத்தால் சற்று முன் வரை ஆஸ்திரேலியா 350 ரன்களை கடந்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றது.

Advertisement