ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டக் அவுட்டாகாமல் அதிக இன்னிங்ஸ்களில் விளையாடிய டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

Dravid
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக விளையாடும் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு போட்டியையும் 0 ரன்களில் இருந்து தொடங்குவதால் அதில் சதமடிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே களமிறங்குகின்றனர். அதற்காக நல்ல முயற்சியும் பயிற்சியும் செய்து களத்தில் முழு திறமையை வெளிப்படுத்தும் அவர்கள் பெரும்பாலான போட்டிகளில் எதிரணி பவுலர்களின் திறமையான பந்துகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சதமடிக்க முடியாமல் ஆட்டமிழந்து விடுவார்கள். இருப்பினும் களமிறங்கும் அத்தனை போட்டிகளிலும் ஒரு பேட்ஸ்மேன் சதமடிக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது.

மாறாக 30, 50, 70, 90 போன்ற நல்ல ரன்களை எடுப்பதும் வெற்றிக்கு பங்காற்றலாம். ஆனால் தரமான பவுலர்களிடம் தாக்கு பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானால் அதுவே அணிக்கு பின்னடைவையும் ஏற்படுத்தும். அதுவும் சதமடிக்கலாம் என்ற எண்ணத்துடன் களமிறங்கி விட்டு ஒரு ரன் கூட எடுக்காமல் களமிறங்கிய உடனேயே வந்த வாக்கிலேயே டக் அவுட்டாகி செல்வது ஒரு பேட்ஸ்மேனை பொருத்தவரை அவமானமாகும்.

- Advertisement -

அதிலும் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அதிரடி காட்ட வேண்டிய டி20 கிரிக்கெட்கும் மத்தியில் பொறுமையும் அதிரடியும் காட்டவேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் ரன்னை எடுப்பதற்கு அழுத்தமும் அவசரமும் ஏற்படாது என்பதால் அந்த வகையான கிரிக்கெட்டில் டக் அவுட்டாவதற்கு அவசியமும் கிடையாது. அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக இன்னிங்ஸ்களில் டக் அவுட்டாகாமல் விளையாடிய டாப் 5 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்:

5. ஜாவேத் மியாண்டட் 96: பாகிஸ்தானைச் சேர்ந்த மகத்தான முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் ஜாவேத் மியாண்டட் கடந்த 1975இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி 218 இன்னிங்சில் 7381 ரன்களை 41.47 என்ற நல்ல சராசரியில் குவித்து அந்த காலத்தில் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார்.

- Advertisement -

அதில் 1986 முதல் 1992 வரையிலான காலகட்டங்களில் அவர் களமிறங்கிய 96 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக அவுட்டாகாமல் ரன்களை எடுத்த அவர் இதர பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு முன்னோடியாக இந்தப் பட்டியலில் 5-வது இடத்தை பிடிக்கிறார்.

4. சிகண்டர் ராஜா 96*: கடந்த 2013இல் அறிமுகமாகி நவீன கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியின் நம்பிக்கை நட்சத்திர ஆல்-ரவுண்டராக வலம் வரும் இவர் இது வரை 109 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 3231 ரன்களை எடுத்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

கடந்த 2014இல் தனது 14-வது இன்னிங்ஸில் டக் அவுட்டான அவர் அதன்பின் இதுவரை விளையாடி வரும் 96 இன்னிங்ஸ்களில் ஒருமுறைகூட டக் அவுட்டாகாமல் தொடர்ச்சியாக நல்ல ரன்களை எடுத்து ஜிம்பாப்வே அணிக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

3. கெப்ளர் வெசல்ஸ் 105*: 80 மற்றும் 90களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரராக வலம் வந்த இவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து தனது சர்வதேச கிரிக்கெட்டை 1982 – 1985 வரை ஆஸ்திரேலியாவுக்கு விளையாடினார். அதன்பின் தனது சொந்த நாட்டிற்கு 1991 – 1994 வரை விளையாடிய அவர் 105 ஒருநாள் இன்னிங்சில் 3367 ரன்களை 34.35 என்ற பேட்டிங் சராசரியில் எடுத்து ஓய்வு பெற்றார்.

- Advertisement -

ஆச்சரியப்படும் வகையில் அந்த 105 இன்னிங்ஸ்களிலும் ஒருமுறைகூட அவர் டக் அவுட்டே ஆகாமல் தனது கேரியர் முழுவதும் களமிறங்கிய அத்தனை போட்டிகளிலும் ஏதோ ஒரு கணிசமான ரன்களை எடுத்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரராக போற்றப்படும் அளவுக்கு தனித்துவமான சாதனை படைத்து இப்பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

2. மார்ட்டின் க்ரோ 119: 90களில் நியூசிலாந்தின் நம்பிக்கை நாயகனாக வலம் வந்த இவர் 1982 – 1995 வரை அந்நாட்டிற்காக 140 இன்னிங்ஸ்சில் 4704 ரன்களை 38.24 ரன்களை எடுத்து ஓய்வு பெற்றார். காயங்களால் இடையிடையே நிறைய பாதிப்புகளை சந்தித்த இவர் அதனாலேயே தொடர்ச்சியாக நிறைய போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.

இருப்பினும் 1984 – 1993 வரையிலான 9 வருட காலகட்டத்தில் களமிறங்கிய 119 ஒருநாள் இன்னிங்ஸ்களில் ஒருமுறைகூட டக் அவுட்டாகாத அவர் தனது கேரியரில் முக்கால்வாசி போட்டிகளில் 0 ரன்களில் ஆட்டமிழக்காமல் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக விளையாடி இந்த பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

1. ராகுல் டிராவிட் 120: இந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான பேட்ஸ்மேனாக போற்றப்படும் ராகுல் டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமையின் சிகரமாகவும் ஒருநாள் கிரிக்கெட்டில் தேவைப்படும்போது அதிரடியாகவும் விளையாடி அந்த 2 வகையான கிரிக்கெட்டிலும் 10000+ ரன்களை குவித்த அற்புதமான பேட்ஸ்மேன் ஆவார்.

குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் 318 இன்னிங்சில் 10889 ரன்களை 39.17 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ள இவர் 1999 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் களமிறங்கிய 120 இன்னிங்சில் தொடர்ச்சியாக டக் அவுட்டே ஆகாமல் அசத்தலாக பேட்டிங் செய்துள்ளார். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக இன்னிங்ஸ்களில் டக் அவுட்டாகாமல் விளையாடிய பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையையும் அவர் இன்றும் தன் வசம் வைத்துள்ளார்.

Advertisement