ஐசிசி டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 7 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

Gayle-2
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐசிசி டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 8வது முறையாக வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக திகழும் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களுக்கு முன்னோடியாக கடந்த 2007இல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்தொடர் டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதால் எப்போதுமே இதற்கு ரசிகர்களிடம் தனி மதிப்பும் மரியாதையும் உள்ளது. பொதுவாகவே டி20 கிரிக்கெட் என்றால் ஓவருக்கு ஓவர் அனல் பறக்கும் திரில்லர் தருணங்களையும் அதிரடி சரவெடியாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு மிரட்டலாக ரன்களை சேர்க்கும் பேட்ஸ்மேன்களையே ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள்.

ICC T20 World Cup

- Advertisement -

அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் போட்டியை பார்க்க வரும் ரசிகர்களை ரன் மழையில் நனைத்து தங்களது அணியை வெற்றி பெற வைப்பது பேட்ஸ்மேன்களின் கடமையாகும். ஆனால் உலகக் கோப்பை போன்ற உலகத்தரம் வாய்ந்த தொடரில் தங்களுக்கு சவால் கொடுப்பதற்காகவே உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்களை சமாளித்து ரன்கள் குவிப்பது பேட்ஸ்மேன்களுக்கு கடினமான ஒன்றாகும். அந்த வகையில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்:

7. ஏபி டீ வில்லியர்ஸ் 717: 360 டிகிரியிலும் சுழன்றடித்து டி20 கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை உருவாக்கிய இவர் 2007 – 2016 வரை 29 இன்னிங்சில் 5 அரை சதங்கள் உட்பட 717 ரன்களை 29.87 என்ற சராசரியிலும் 143.40 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டிலும் குவித்து டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனாக சாதனை படைத்து இப்பட்டியலில் 7வது இடம் பிடித்துள்ளார்.

warner

6. டேவிட் வார்னர் 762: அதிரடி தொடக்க வீரரான இவர் 2009 முதல் இதுவரை 762 ரன்களை 27.21 என்ற என்ற சராசரியில் குவித்து உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரராக சாதனை படைத்துள்ளார். அதிலும் கடந்த வருடம் தொடர் நாயகன் விருதை வென்ற இவர் ஆஸ்திரேலியா முதல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

5. விராட் கோலி 845: 2012 முதல் இதுவரை பங்கேற்ற 4 உலகக்கோப்பையில் வெறும் 19 இன்னிங்சில் 845 ரன்களை இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள இதர வீரர்களைக் காட்டிலும் அதிகபட்சமாக 76.81 என்ற அபார சராசரியில் குவித்துள்ள இவர் வரலாற்றிலேயே மற்ற வீரர்களை காட்டிலும் அதிகபட்சமாக 10 அரை சதங்களையும் அடித்துள்ளார்.

Virat-Kohli 2014 WOrld Cup

மேலும் 2014, 2016 ஆகிய அடுத்தடுத்த உலக கோப்பைகளின் தொடர் நாயகன் விருதை வென்ற ஒரே வீரராகவும் சாதனை படைத்துள்ள அவர் சமீபத்திய ஆசிய கோப்பையில் பார்முக்கு திரும்பியுள்ளதால் விரைவில் 1000 ரன்களை கடப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

4. ரோஹித் சர்மா 847: 2007 முதல் இப்போது வரை நடைபெறும் அத்தனை உலக கோப்பைகளிலும் பங்கேற்ற ஒரே வீரராக சாதனை படைத்துள்ள இவர் இதுவரை 30 இன்னிங்சில் 847 ரன்களை 38.50 என்ற சராசரியிலும் 131.52 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் குவித்து உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். 8 அரை சதங்களையும் அடித்துள்ள அவர் 2007 உலகக் கோப்பை பைனலில் எடுத்த ரன்கள் இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

3. திலகரத்னே தில்ஸான் 897: இலங்கையின் அதிரடி தொடக்க வீரரான இவர் 2007 – 2016 வரையிலான உலக கோப்பைகளில் பங்கேற்ற 34 இன்னிங்சில் 6 அரை சதங்கள் உட்பட 897 ரன்களை 30.93 என்ற நல்ல சராசரியிலும் 124.06 என்ற ஸ்டிரைக் ரேட்டிலும் குவித்து இப்பட்டியலில் 3வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

2. கிறிஸ் கெயில் 965: டி20 உலகக் கோப்பை இன்று உலகப்புகழ் பெறுவதற்கு கடந்த 2007இல் நடைபெற்ற முதல் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை பந்தாடி அபார சதம் விளாசி இவர் கொடுத்த தொடக்கமே முக்கிய காரணமாகும்.

Gayle 1

ஐபிஎல் உட்பட ஆல் ஏரியாவிலும் கில்லியாக சொல்லி அடித்த இவர் 2007 – 2021 வரை 31 இன்னிங்ஸ்சில் 965 ரன்களை 34.46 என்ற சராசரியிலும் 142.75 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டிலும் குவித்து உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேனாக இந்த பட்டியலில் 2வது இடம் பிடிக்கிறார். மேலும் 7 அரை சதங்களை அடித்துள்ள அவர் உலக கோப்பை வரலாற்றில் 2 சதங்களை அடித்த ஒரே பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்துள்ளார்.

1. மகிளா ஜெயர்வர்தனே 1016: இலங்கையின் முன்னாள் கேப்டன் மற்றும் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர் 2007 முதல் டி20 உலக கோப்பையில் விளையாடி 2014இல் சாம்பியன் பட்டம் வென்று ஓய்வு பெற்றார்.

Jayawardene

அந்த காலகட்டத்தில் 31 போட்டிகளில் 1 சதம் 6 அரை சதங்கள் உட்பட 1016 ரன்களை 39.07 என்ற சராசரியில் 134.74 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த அவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 1000 ரன்களை எடுத்த ஒரே பேட்ஸ்மேனாகவும் அதிக ரன்களை எடுத்த வீரராகவும் உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisement