ஐபிஎல் வரலாற்றில் 35 வயதுக்கு பின் அதிக ரன்கள் எடுத்த டாப் 6 பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

Sachin
- Advertisement -

ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் அதிரடி என்ற ஒரே தாரக மந்திரம்தான் வெற்றியை பெற்று தரும். இதுபோன்ற டி20 தொடர்களில் 50 பந்துகளுக்கு 50 ரன்கள் அடிப்பது கூட அணிக்கு தோல்வியை பெற்றுத் தந்துவிடும். அதனால் எதிரணி பவுலர்கள் எவ்வளவு கடினமாக பந்து வீசினாலும் வேறு வழியே இல்லாமல் ஒன்று அதிரடி காட்ட வேண்டும் இல்லையேல் அவுட்டாக வேண்டும். மேலும் ஒரு பேட்ஸ்மேன் என்பவர் மெஷினை போல அதிரடியான பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு வேக வேகமாக ஓடி சிங்கிள், டபுள் ரன்களை எடுக்க வேண்டும்.

sachin 2

- Advertisement -

அதன் காரணமாகவே இதுபோன்ற தொடர்களில் விளையாடுவதற்கு நல்ல இளமையும் உடற்கட்டும் தேவைப்படுகிறது. அந்த வகையில் பொதுவாகவே வயதான வீரர்களுக்கு இது போன்ற தரமான டி20 தொடரில் ஈடுகொடுத்து விளையாடுவது சற்றுக் கடினமாகும். ஏனெனில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பந்துக்கும் இடையே ஏற்படும் பரபரப்பும் விறுவிறுப்பும் ஏற்படுத்தும் அதிகப்படியான அழுத்தம் வயதானவர்களுக்கு இயற்கையாகவே மனதளவிலும் உடலளவிலும் களைப்பை ஏற்படுத்தக்கூடியது.

ஆனால் அனுபவமே சிறந்த ஆசான், வேகத்தைவிட விவேகம் சிறந்தது என்பதற்கேற்ப அதே வயதால் விலை மதிப்பில்லா அனுபவத்தைப் வைத்து பல மூத்த வீரர்கள் இளம் வீரர்களால் கூட முடியாத அளவுக்கு மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சொல்லப்போனால் ஒரு சில வீரர்கள் வயதான பின்பு தான் இளம் வயதில் செயல்பட்டதை விட அபாரமாக செயல்படுவார்கள். சர்வதேச அரங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்ட தங்களுக்கு வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பது போல பல ஜாம்பவான்கள் தங்களது மூத்த வயதிலும் அபாரமாக செயல்பட்டு ஐபிஎல் தொடரிலும் சாதித்துக் காட்டியுள்ளனர். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் 35 வயதுக்கு மேல் அதிக ரன்கள் குவித்த டாப் 6 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்.

Hats Off MS Dhoni

6. எம்எஸ் தோனி: ஒரு கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் அதிரடி பேட்ஸ்மேனாகவும் பல பரிணாமங்களை கொண்ட எம்எஸ் தோனி தனது இளம் வயதில் எப்படி செயல்பட்டாரோ அதேபோல் தற்போது 40 வயதை கடந்த போதிலும் 2022 தொடரில் அசத்தலாக செயல்பட்டு வருகிறார். 2020, 2021 ஆகிய 2 அடுத்தடுத்த சீசன்களில் அரைசதமடிக்க முடியாமல் தவித்த அவரை முடிந்துபோன பினிஷர் என பலரும் கிண்டல் அடித்தனர்.

- Advertisement -

ஆனால் இந்த வருடம் முதல் போட்டியிலேயே 50* (38) ரன்கள் எடுத்து பார்முக்கு திரும்பிய அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது அதிரடியாக திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்து என்றுமே தன்னை மிகச்சிறந்த பினிஷெர் என நிரூபித்தார். அந்த வகையில் 35 வயதை கடந்தபின் 1674* ரன்களை குவித்துள்ள அவர் இந்தப் பட்டியலில் 6-வது இடம் பிடித்து வருகிறார்.

5. மைக் ஹசி: 3 வகையான கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியாவுக்கு அசத்தலாக பேட்டிங் செய்து மிஸ்டர் கிரிக்கெட் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜாம்பவான் மைக் ஹசி ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக விளையாடி தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். தற்போது அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவர் மொத்தமாக அடித்த 1977 ரன்களில் 1772 ரன்களை 35 வயது கடந்த பின் எடுத்ததாகும்.

- Advertisement -

4. ஆடம் கில்கிறிஸ்ட்: 90களில் அறிமுகமாகி விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட அதிரடியை புகுத்திய ஆஸ்ட்ரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் 35 வயதை கடந்த பின்பு தான் ஐபிஎல் தொடரில் கால்தடம் பதித்தார்.

Adam Gilchrist Deccan

ஆனால் அந்த வயதிலும் பட்டாசாக வெடித்த அவர் 2069 ரன்களை விளாசி இந்த பட்டியலில் 4-வது இடம் பிடிப்பதுடன் 2009இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனாக சாம்பியன் பட்டத்தை வென்று காட்டினார்.

- Advertisement -

3. ராகுல் ட்ராவிட்: இந்தப் பட்டியலில் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனெனில் பொதுவாகவே பொறுமையின் சிகரமாக அதிக பந்துகளை எதிர்கொண்டு எதிரணி பவுலர்களை களைப்படைய வைத்து ரன்களைக் குவிப்பதில் பெயர் போன அவர் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக கருதப்படுபவர்.

Dravid

ஆனாலும் தம்மை போன்ற உலகத்தரம் வாய்ந்த கிளாஸ் பேட்ஸ்மேனால் டி20 கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும் என்ற வகையில் ஐபிஎல் தொடரில் 35 வயதுக்கு பின்பும் 2174 ரன்களை எடுத்துள்ள அவர் இந்தப் பட்டியலில் 3-வது இடத்தை பிடிக்கிறார்.

2. கிறிஸ் கெயில்: வெஸ்ட் இண்டிஸ் சூறாவளி புயல் கிறிஸ் கெயில் 42 வயதை கடந்தும் அடுத்த 2023 ஐபிஎல் தொடரில் விளையாடப் போவதாக அறிவித்துள்ளார். அந்த அளவுக்கு வயது ஆகஆக இளமையை உணரும் அவர் 2008இல் எப்படி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அடித்தாரோ அதேபோலத்தான் தனது கடைசி தொடரான 2021 சீசனிலும் அதே வேகத்துடன் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி பட்டையை கிளப்பினார். மொத்தம் 4965 ரன்களை அடித்துள்ள அவர் 2257 ரன்களை 35 வயதை கடந்த பின் எடுத்ததாகும்.

Sachin-Tendulkar-with-his-wife-and-children

1. சச்சின் டெண்டுல்கர்: 16 வயதிலேயே கிரிக்கெட்டில் காலடி வைத்து வாசிம் அக்ரம் போன்றவர்களை புரட்டி எடுத்து 30000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி காலத்தில் இருக்கும்போதுதான் ஐபிஎல் தொடங்கப்பட்டது.

அப்போதும்கூட அசத்தலாக செயல்பட்ட அவர் ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை (2010) வென்ற முதல் இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் மொத்தமாக அடித்த 2334 ரன்களுமே 35 வயதுக்கு பின் என்ற நிலையில் இப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து இன்றும் ஜொலிக்கிறார். ஒருவேளை அவரின் காலத்தில் ஐபிஎல் தொடங்கப்பட்டிருந்தால் நிச்சயமாக 10000 ரன்களை அசால்டாக அடித்திருப்பார் என்றே கூறலாம்.

Advertisement