ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 6 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

Advertisement

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. ஆசிய கண்டத்தின் கிரிக்கெட் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடர் வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு 20 ஓவர் தொடராக நடைபெற உள்ளது. கடந்த 1984 முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வரும் இந்த தொடரில் வரலாற்றில் இதுவரை 14 தொடர்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. அதில் 7 கோப்பைகளை வென்றுள்ள இந்தியா வெற்றிகரமான ஆசிய அணியாக சாதனை படைத்துள்ளது. இலங்கை 5 கோப்பைகளையும் பாகிஸ்தான் 3 கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது.

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்த அணிகள் ஒவ்வொரு ஆசிய கோப்பையிலும் முழு திறமையை வெளிப்படுத்தி கோப்பையை வெல்வதற்கு கடுமையாக போராடுவது வழக்கமாகும். ஏனெனில் இந்த அனைத்து அணிகளுமே இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் போன்ற காலச் சூழ்நிலைகளுக்கு பழக்கப்பட்டவர்கள் என்பதால் முழுமையான திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்த கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலைமை உள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளை மிஞ்சும் வகையில் சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன் என உலகத்தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கிய இந்த ஆசிய அணிகள் ஒன்றுக்கொன்று மோதும்போது அதில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.

- Advertisement -

டாப் பேட்ஸ்மேன்கள்:
அதேபோல் உலகின் இதர நாடுகளுக்கு இணையாக ரன்களை மெஷின் போல குவித்து ஏராளமான சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு இந்த ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை உருவாக்கிக் கொடுத்து கொண்டே வருகின்றன. அந்த வகையில் வரலாற்றில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடர்களில் அதிக ரன்களை அடித்த டாப் 6 பேட்ஸ்மேன்களைப் பற்றிப் பார்ப்போம் (ஒருநாள்+டி20 சேர்ந்த பட்டியல்):

6. விராட் கோலி 766: ஜாம்பவான் சச்சினுக்கு பின் இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக வலம் வரும் இவருக்கு பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய அணிகளுக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்படுவதென்றால் கொள்ளை பிரியமாகும்.

- Advertisement -

குறிப்பாக இலங்கையை பார்த்தாலே புரட்டி எடுக்கும் குணத்தைக் கொண்ட இவர் 2010 முதல் இதுவரை பங்கேற்ற ஆசிய கோப்பையில் வெறும் 16 போட்டிகளில் 14 இன்னிங்சில் 766 ரன்களை 63.83 என்ற நல்ல சராசரியில் குவித்து இந்த பட்டியலில் 6வது இடம் பிடிக்கிறார். 3 சதங்களையும் 2 அரை சதங்களையும் அடித்துள்ள இவர் தனது அதிகபட்ச ஸ்கோரான 183 ரன்களை கடந்த 2012இல் மிர்புரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பதிவு செய்துள்ளார்.

5. ரோஹித் சர்மா 883: 2010க்குப்பின் மிகப்பெரிய எழுச்சி கண்ட இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதம், ஒரே உலக கோப்பையில் 5 சதங்கள் போன்ற சாதனைகளை அசால்டாக படைத்ததை போல ஆசிய கோப்பை வரலாற்றிலும் 2008 முதல் இதுவரை பங்கேற்ற 27 போட்டிகளில் 883 ரன்களை 42.04 என்ற நல்ல சராசரியில் குவித்து இந்த பட்டியலில் 5வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

1 சதமும் 7 அரை சதங்களையும் விளாசியுள்ள இவர் 2018இல் கேப்டனாகவும் இந்தியாவுக்கு 7-வது ஆசிய கோப்பையை வென்று கொடுத்த பெருமைக்குரியவர்.

4. சோயப் மாலிக் 907: பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் இந்த வருட ஆசிய கோப்பையில் பங்கேற்காத நிலையில் 2000 – 2018 வரை பங்கேற்ற 21 போட்டிகளில் 19 இன்னிங்சில் 907 ரன்களை 64.78 என்ற மிகச் சிறப்பான சராசரியில் எடுத்து இந்தப் பட்டியலில் 4வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

மேலும் ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்துள்ள அவர் 3 சதங்களையும் 4 அரை சதங்களையும் அடித்து அசத்தியுள்ளார்.

3. சச்சின் டெண்டுல்கர் 971: சச்சின் இல்லாத சாதனை பேட்டிங் பட்டியலா என்ற வகையில் 24 வருடங்கள் இந்திய பேட்டிங்கை தோள் மீது சுமந்து இந்த நம்பிக்கை நாயகன் 1990 முதல் 2012 வரை 23 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி 21 இன்னிங்சில் 971 ரன்களை 51.10 என்ற சிறப்பான சராசரியில் குவித்து இந்த பட்டியலில் 3வது இடம் பிடிக்கிறார்.

மேலும் ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மென் என்ற சாதனையை படைத்துள்ள அவர் 4 சதங்களையும் 8 அரை சதங்களையும் அடித்துள்ளார். அதைவிட கடந்த 2012 ஆசிய கோப்பையில் தனது 100வது சதத்தை வங்கதேசத்துக்கு எதிராக பதிவு செய்து உலக சாதனை படைத்ததை ரசிகர்கள் மறக்க முடியாது.

2. குமார் சங்ககாரா 1075: சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுக்கு பின் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள இவர் ஆசிய கோப்பையில் அவரையும் மிஞ்சும் வகையில் 2004 – 2014 வரை 24 போட்டிகளில் களமிறங்கிய 21 இன்னிங்சில் 1075 ரன்களை 48.86 என்ற நல்ல சராசரியில் குவித்து இந்தப்பட்டியலில் 2வது இடம் பிடிக்கிறார். இதில் 4 சதங்களும் 8 அரை சதங்களும் அடங்கும்.

1. சனாத் ஜெயசூரியா 1220: வரலாற்றில் இலங்கை கண்ட மகத்தான அதிரடி பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராக போற்றப்படும் இவர் 1990 – 2008 வரை களமிறங்கிய 25 ஆசிய கோப்பை போட்டிகளில் 24 இன்னிங்சில் 1220 ரன்களை 53.04 என்ற நல்ல சராசரியில் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ள இதர பேட்ஸ்மேன்களை காட்டிலும் 102.52 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளார்.

இதன் வாயிலாக ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ள அவர் அதிக சதங்கள் (6) அடித்த வீரராகவும் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

Advertisement