ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் அதிக சதங்கள் – அடித்த டாப் 6 பேட்ஸ்மேன்கள்

- Advertisement -

கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என எந்த வகையான போட்டியாக போட்டியாக இருந்தாலும் முதலில் பேட்டிங் செய்யும் அணி நிர்ணயிக்கும் இலக்கை 2-வதாக பேட்டிங் செய்யும் அணி வெற்றிகரமாக எட்டிப்பிடித்து வெற்றி வாகை சூடுவது கடினமான ஒன்றாகும். அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகப்படியான ஓவர்கள் இருக்கும், டி20 கிரிக்கெட்டில் குறைவான பந்துகள் இருக்கும் என்ற நிலைமையில் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒருநாள் கிரிக்கெட்டில் எதிரணி நிர்ணயிக்கும் இலக்கை பொறுமையாகவும் அடிக்க முடியாமல் வேகமாகவும் அடிக்காமல் சீராக துரத்திக் கொண்டே சென்றால் தான் வெற்றி இலக்கைத் தொட முடியும்.

ஏனெனில் குறைவான இலக்காக இருந்தாலும் ரன்ரேட்டை எகிற விடாமல் சீராக ரன்கள் குவிப்பது அவசியமான நிலையில் ஏதேனும் ஒரு தருணத்தில் கொஞ்சம் பதற்றமடைந்து ஒரு விக்கெட் இழந்தால் கூட போட்டியே தலைகீழாக மாறிவிடும். அதுவே இலக்கு பெரிதாக இருந்தால் சேசிங் செய்யும் அணிக்கு வெற்றி என்பது மிகப்பெரிய சவாலாகும்.

- Advertisement -

அதற்கு காரணம் 300 போன்ற இலக்கைத் துரத்தும் போது முதலில் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் குறைந்தது 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளமிட்டு தர வேண்டும். அத்துடன் அடுத்து வரும் பேட்ஸ்மேன்களில் குறைந்தது ஒருவர் அரைசதம் அடிக்க வேண்டும் ஒருவராவது சதமடிக்க வேண்டும் அப்போது தான் வெற்றி சாத்தியமாகும். இது எல்லா சமயங்களிலும் எல்லா போட்டிகளிலும் சேசிங் செய்யும் அணிகளுக்கு அமையாது.

சேஸ் மாஸ்டர்கள்:
ஏனெனில் அணியில் 6 – 7 பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் அவர்கள் அனைவராலும் சேசிங்கின் போது ஏற்படும் அழுத்தத்தை தாங்கி தேவையான ரன்களை குவித்து வெற்றி பெறும் அளவுக்கு திறமையானவர்களாக இருக்க முடியாது. இருப்பினும் ஒரு அணியில் ஒருசில பேட்ஸ்மேன்கள் மட்டுமே இலக்கை துரத்துவதை மிகவும் அதிகமாக விரும்பி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து சதமடித்து வெற்றிக்காக போராடி வெற்றி வாகை சூடிக் கொடுப்பார்கள். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சவாலான சேசிங்கில் வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த டாப் பேட்ஸ்மேன்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

6. சனாத் ஜெயசூரியா 9: 90களில் தெறிக்கவிடும் ஓபனிங் பேட்ஸ்மேனாக எதிரணி பவுலர்களை பல போட்டிகளில் பந்தாடிய இவர் இலங்கைக்காக 107 போட்டிகளில் சேசிங் செய்த போது களமிறங்கிய 103 இன்னிங்சில் 3633 ரன்களை 39.92 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார்.

அதில் 9 சதங்களை அடித்து இந்தப் பட்டியலில் 4-வது இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் இவர் கடந்த 2006இல் லீட்ஸ் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 5-வது ஒரு நாள் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 322 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது 20 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 152 (99) ரன்களை அடித்து நொறுக்கினார். அதனால் தனது அணிக்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக் கொடுத்த இவர் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.

- Advertisement -

5. திலகரத்னே டில்ஷன் 9: 1999இல் அறிமுகமாகி இலங்கையின் மிகச்சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக வலம் வந்த இவர் சேசிங் செய்தபோது விளையாடிய 75 போட்டிகளில் 60 இன்னிங்சில் களமிறங்கி 2614 ரன்களை 62.23 என்ற நல்ல சராசரியில் எடுத்து 9 சதங்களை அடித்து இப்பட்டியலில் 4-வது இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

குறிப்பாக 2009இல் இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 302 ரன்கள் இலக்கை சதமடித்து 123 (113) ரன்கள் குவித்த அவர் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையின் சூப்பர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

4. சயீத் அன்வர்: 90களில் சரவெடி ஓபனிங் பேட்ஸ்மேனாக எதிரணிகளை பந்தாடிய இவர் பாகிஸ்தானுக்காக சேசிங் செய்த 61 போட்டிகளில் களமிறங்கிய வெறும் 59 இன்னிங்சிலேயே 2837 ரன்களை 63.04 என்ற சிறப்பான சராசரியில் எடுத்து இப்பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

அதில் 9 சதங்கள் அடித்துள்ள இவரும் கடந்த 1993இல் சார்ஜாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 261 ரன்கள் இலக்கை சதமடித்து 131 (141) ரன்கள் விளாசி பாகிஸ்தானின் 5 விக்கெட் வித்தியாச வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

3. ரோகித் சர்மா 11: ஆரம்ப கட்டங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்த இவரின் திறமையை உணர்ந்து ஓபனிங் பேட்ஸ்மேனாக அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி கொடுத்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய இவர் 2010க்கு பின் அசால்ட்டாக 3 இரட்டை சதங்களை அடித்து விஸ்வரூபம் எடுத்தார் என்றே கூறலாம். இந்தியாவுக்காக சேசிங் செய்த 85 போட்டிகளில் களமிறங்கிய 82 இன்னிங்சில் 3736 ரன்களை 63.32 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ள இவர் 11 சதங்களையும் அடித்து இந்தப் பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

குறிப்பாக 2018இல் கௌகாத்தி நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 321 ரன்கள் மெகா இலக்கை இந்தியா துரத்தும்போது 15 பவுண்டரி 8 சிக்சருடன் 152* (117) ரன்கள் விளாசிய இவர் கடைசி வரை அவுட்டாகாமல் இந்தியாவுக்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது குறிப்பிடத்தக்கது.

2. சச்சின் டெண்டுல்கர் 14: ஆரம்ப காலத்தில் 70 போட்டிகளுக்கு மேல் மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்த இவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியது முதல் அந்நியனாக மாறி இறுதியில் 18,426 ரன்களை குவித்து மாபெரும் உலக சாதனை படைத்தார். 90களில் ஒட்டுமொத்த இந்திய பேட்டிங்கை தனது தோள் மீது சுமந்து இவர் அடித்தால்தான் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலைமையெல்லாம் மறக்கவே முடியாது.

அப்படி இந்தியாவுக்காக 127 சேசிங் செய்த போட்டிகளில் 124 இன்னிங்சில் களமிறங்கிய அவர் 5490 ரன்களை 55.45 என்ற சராசரியில் எடுத்து 14 சதங்களை விளாசி இந்த பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார். குறிப்பாக 1998இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சார்ஜாவில் நடந்த கோக்கோ கோலா கப் இறுதிப் போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 273 ரன்கள் இலக்கை சதமடித்து 134 (131) ரன்கள் குவித்து தனி ஒருவனாக 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அதுவும் தனது பிறந்த நாளில் இந்தியாவுக்கு கோப்பையை பரிசளித்த அவருக்கு சிறிய பரிசாக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது ரசிகர்கள் மறக்க முடியாது.

1. விராட் கோலி: கிரிக்கெட்டில் ஒருசில பேட்ஸ்மேன்களுக்கு மட்டும்தான் கண்ணுக்கு தெரிந்த இலக்கை எட்டி பிடிக்காமல் விடமாட்டேன் என்று அடம் பிடித்து எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வெற்றிகரமாக சேசிங் செய்வது மிகவும் பிடிக்கும். அந்த வகையில் சச்சினுக்கு பின் இந்தியாவின் ரன் மெஷினாக கருதப்படும் இவர் பல தருணங்களில் அவரை விடச் சிறந்தவன் என்று நிரூபித்த தருணங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்தியாவுக்காக இவர் சேசிங் செய்ய களமிறங்கிய 90 போட்டிகளில் 87 இன்னிங்சில் 5396 ரன்களை 94.66 என்ற வெறித்தனமான சராசரியில் குவித்து பல சரித்திர வெற்றிகளுக்கு பங்காற்றியுள்ளார். குறிப்பாக சச்சினையே மிஞ்சி 22 சதங்களை அடித்துள்ள இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமான சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்துள்ளார்.

2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளாசிய 183 ரன்கள், ஹோபார்ட் நகரில் இலங்கையை பந்தாடி தெறிக்கவிட்ட 133* (86) ரன்கள் போன்ற இன்னிங்ஸ் ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த சேசிங் இன்னிங்ஸ்களாக போற்றப்படுகிறது.

Advertisement