டி20 உலக கோப்பை வரலாற்றில் மிகவும் இளம் வயதில் விளையாடிய 5 வீரர்களின் பட்டியல் இதோ

Rashid
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் 8வது சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. பொதுவாக இதுபோன்ற டி20 உலக கோப்பைகள் சாம்பியன் அணியையும் சாம்பியன் வீரர்களையும் அடையாளம் காட்டுவது மட்டுமில்லாமல் வருங்கால சூப்பர் ஸ்டார் வீரர்களையும் அடையாளம் காட்டிச் செல்லும். ஏனெனில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை விட அதிரடியாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெறக்கூடிய டி20 கிரிக்கெட்டில் துடிப்புடன் செயல்படக்கூடிய இளம் வீரர்கள் தான் அதிகமாக விளையாடுவார்கள். காரணம் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய டி20 கிரிக்கெட்டில் பீல்டிங் போன்ற துறைகளில் அதிவேகமாக செயல்படுவதற்கு மூத்த வீரர்களை விட பயமறியாத காளைகளாக சீறிப்பாயக் கூடிய இளம் வீரர்கள் அவசியமானவர்கள்.

இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பதால் முதலில் அதை சமாளிக்க கற்றுக்கொள்ளும் வகையில் சாதாரண இருதரப்பு தொடர்களில் மட்டுமே பெரும்பாலான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதில் ஓரளவு சிறப்பாக செயல்படும் இளம் வீரர்கள் மட்டுமே உலக கோப்பை போன்ற மிகப்பெரிய அழுத்தம் நிறைந்த தொடருக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் இளம் வீரர்களாக இருந்தாலும் குறைந்தது 20 வயதைக் கடந்த வீரர்கள் தான் பெரும்பாலான அணிகளில் 90% தேர்வு செய்யப்படுவார்கள்.

- Advertisement -

இளம் வீரர்கள்:
ஆனால் சில வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டிலும் அதற்கு முந்தைய வாய்ப்புகளிலும் அற்புதமாக செயல்பட்டு தங்களால் சாதிக்க முடியும் என்று நிருபித்துக் காட்டுவதால் டீன் ஏஜ் பருவத்தை தாண்டாமலேயே திறமைக்கு மதிப்பளித்து உலக கோப்பையில் விளையாட தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் மிகவும் இளம் வயதில் விளையாடிய டாப் 5 கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்:

5. ஜார்ஜ் டாக்ரெல் (17 வருடம் 282 நாட்கள்): அயர்லாந்து அணிக்காக கடந்த 2010 உலகக் கோப்பையில் 17 வருடம் 282 நாட்களில் விளையாடிய சுழல் பந்து வீச்சாளரான இவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை எடுத்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அந்த வகையில் டி20 உலக கோப்பையில் இளம் வயதில் விளையாடிய அயர்லாந்து வீரராக அசத்திய அவர் இன்று முக்கிய வீரராக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பையிலும் விளையாடி வருகிறார்.

4. அஹமத் சேஷாத் (17 வருடம் 196 நாட்கள்): 2009 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக 17 வருடம் 196 நாட்கள் வயதுடன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய இவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் அடுத்த போட்டியிலேயே அதிரடியாக நீக்கப்பட்ட அவர் அந்த உலகக் கோப்பையில் சுமாராக செயல்பட்டாலும் 2014 தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக சதமடித்தார்.

- Advertisement -

அதன் வாயிலாக டி20 உலக கோப்பையில் சதமடித்த ஒரே பாகிஸ்தான் பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள அவர் இந்தியாவின் விராட் கோலி சாயலில் இருப்பதால் அவரை போல பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாளடைவில் சுமாராக செயல்பட்டதால் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.

3. ரசித் கான் (17 வருடம் 170 நாட்கள்): 2016இல் இந்திய மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் 17 வருடம் 170 நாட்கள் வயதுடன் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கி 2 விக்கெட்டுகளை சாய்த்த இவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடிய இளம் ஆப்கானிஸ்தான் வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

அப்போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவிய இவர் இன்று ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் உலக அளவில் நம்பர் ஒன் டி20 ஸ்பின்னராக திகழ்கிறார்.

2. முகமத் அமீர் (17 வருடம் 55 நாட்கள்): கடந்த 2009 உலக கோப்பையில் 17 வருடம் 55 நாட்கள் வயதில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கிய இவர் அந்த உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தலாக செயல்பட்டார். அதனால் டி20 உலக கோப்பையில் விளையாடிய இளம் பாகிஸ்தான் வீரராக சாதனை படைத்த அவர் பின்னர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடைபெற்று தற்போது மீண்டும் விளையாடி வருகிறார்.

1. ஆயன் அப்சல் கான் (16 வருடம் 335 நாட்கள்): இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் ஐக்கிய அரபு நாடுகள் அணிக்காக வெறும் 16 வருடம் 335 நாட்களில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய இவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிகவும் இளம் வயதில் விளையாடிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார்.

அவரது அணி இந்த உலக கோப்பையில் ஆரம்பத்திலேயே வெளியேறியுள்ள நிலையில் 3 போட்டிகளில் பங்கேற்ற அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து வருங்கால நட்சத்திரமாக தன்னை அடையாளப் படுத்தியுள்ளார்.

Advertisement