மின்னல்வேகம் – சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் செய்த டாப் 5 விக்கெட்கள் கீப்பர்களின் பட்டியல்

MS Dhoni Stumping
- Advertisement -

கிரிக்கெட் என்பது 11 பேர் கொண்ட விளையாட்டு என்பதை பேட்டிங் செய்வதைவிட பந்து வீசும்போது தெளிவாக உணரமுடியும். ஏனெனில் குறைவான ரன்களைக் கொடுத்து எதிரணி பேட்ஸ்மேன்களை அவுட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பந்துவீசும் பவுலர்கள் அனைத்து நேரமும் அவரை போல்ட் வகையில் அவுட் செய்ய முடியாது. மாறாக பெரும்பாலான தருணங்களில் களத்தில் இருக்கும் எஞ்சிய 10 பீல்டர்களும் பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் கேட்ச்களை கச்சிதமாக பிடித்தால் தான் பவுலருக்கு விக்கெட் கிடைக்கும். அதுவும் சுழல் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுப்பதற்கு 9 பீல்டர்களை விட விக்கெட் கீப்பர்களின் உதவி அதிகமாக தேவைப்படுகிறது.

ஏனெனில் தங்களது விரல்களை பயன்படுத்தி செய்யும் மாயாஜால சுழலால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர்கள் எடுக்கும் விக்கெட்டுகளில் கால்வாசி கேட்ச், ஸ்டம்பிங் என விக்கெட் கீப்பர்களின் உதவியால் எடுக்கக் கூடியதாகும். குறிப்பாக பெரிய ஷாட் ஆட வைக்க முயற்சித்து ஏமாற்றும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு இறையாக க்ரீஸ் எனப்படும் வெள்ளை கோட்டை தாண்டும் பேட்ஸ்மேன்கள் மீண்டும் உள்ளே வருவதற்குள் பருந்து போல பந்தை பிடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பில் அடித்து ஸ்டம்பிங் செய்து விக்கெட்டை முழுமைப்படுத்தி கொடுப்பது ஒரு விக்கெட் கீப்பரின் இன்றியமையாத கடமையாகும்.

- Advertisement -

ஸ்டம்பிங் நாயகன்கள்:
ஆனால் அதை செய்வது விக்கெட் கீப்பர்களுக்கு அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஏனெனில் நொடிப்பொழுதில் தாறுமாறாக சுழன்று வரும் பந்தை பதற்றமடையாமல் கச்சிதமாக பிடித்து ஏமாந்து விட்டோமே என்பதை அறிந்து வேகவேகமாக வெள்ளைக்கோட்டை தொடுவதற்கு பேட்ஸ்மேன்கள் வருவதற்கு முன்பாக கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்களை அடித்து பெயில்சை தூக்கினால் மட்டுமே ஸ்டம்பிங் முழுமை அடையும்.

அதேசமயம் ஆர்வக்கோளாறில் அவசரப்பட்டு பந்து ஸ்டம்ப்பை தாண்டுவதற்கு முன்பாக பிடித்து அடித்தாலும் அடிப்படை விதிமுறைப்படி அம்பயர் அவுட் கொடுக்க கொடுக்க மாட்டார். அப்படி ஸ்டம்பிங் செய்வதில் ஏராளமான கடினமும் நுணுக்கங்களும் யுக்தியும் உள்ள நிலையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங்களை செய்த டாப் 5 விக்கெட் கீப்பர்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. ஆடம் கில்கிறிஸ்ட் 92: கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாக விளையாட முடியும் என்று உலகிற்கு நிரூபித்து அவர்களின் இலக்கணத்தை மாற்றிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிரிஸ்ட் விக்கெட் கீப்பிங் செய்வதிலும் கில்லாடியாக திகழ்ந்தார்.

இவர் விளையாடிய கடைசி காலகட்டத்தில் தான் டி20 போட்டிகள் வந்தது என்ற நிலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 55 டெஸ்ட் போட்டிகளில் 37 என மொத்தம் 92 ஸ்டம்பிங்களை செய்துள்ள அவர் ஆஸ்திரேலியாவின் மகத்தான விக்கெட் கீப்பராக இப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

4. மொய்ன் கான் 93: 90களில் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் விக்கெட் கீப்பராக வலம் வந்த இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 73 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 20 என மொத்தமாக 93 ஸ்டம்பிங்களை செய்து வரலாற்றின் மிகச்சிறந்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பராக சாதனை படைத்து இப்பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

3. ரோமெஷ் கழுவித்திரனா 101: 90களின் இறுதியில் இலங்கையின் நம்பர் 1 விக்கெட் கீப்பராக வலம் வந்த இவர் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டாலும் அதை தனது விக்கெட் கீப்பிங்கில் பல முறை ஈடு செய்யும் வகையில் அபாரமாக செயல்பட்டு நீண்ட நாட்கள் விளையாடிய பெருமைக்குரியவர்.

- Advertisement -

அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 75 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 26 என மொத்தமாக 101 ஸ்டம்ப்களை செய்துள்ள இவர் இந்த பட்டியலில் 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

4. குமார் சங்ககாரா 139: ஆரம்ப காலங்களில் பேட்ஸ்மேனாக விளையாடிய இவர் அணியின் நலன் கருதி பெரும்பாலான போட்டிகளில் விக்கெட் கீப்பராக அற்புதமாக செயல்பட்டார்.

சர்வதேச அரங்கில் சச்சினுக்கு பின் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனைக்கு சொந்தக்காரரான இவர் விக்கெட் கீப்பிங்கிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 20, ஒருநாள் கிரிக்கெட்டில் 99, டி20 கிரிக்கெட்டில் 20 என மொத்தம் 139 ஸ்டம்ப்களை செய்துள்ள இவர் இப்பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

1. எம்எஸ் தோனி 195: பள்ளி வயதிலிருந்தே விக்கெட் கீப்பராக உருவாகி கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமான இவர் ஓய்வு பெறும் வரை நம்பர் ஒன் விக்கெட் கீப்பராகவே இருந்தார். அந்த அளவுக்கு விக்கெட் கீப்பிங்கில் பல புதிய பரிணாமங்களை கொண்டு வந்த இவர் அதிரடியாக ரன்களை குவித்து இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டும் இருக்கக்கூடாது என்ற மாபெரும் புரட்சியை கொண்டு வந்தவர்.

அதேபோல் கேப்டனாகவும் 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று சரித்திர சாதனை படைத்துள்ள இவர் உலகின் மிகச் சிறந்த ஒரே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேப்டன் என்றால் மிகையாகாது. அதிலும் பேட்ஸ்மேன்கள் ஒருசில இன்ச்கள் காலை நகர்த்தினாலோ அல்லது தூக்கினாலோ கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து பெவிலியனுக்கு திருப்பி அனுப்பி வைக்கும் இவருக்கு நிகராக இந்த உலகில் யாருமே இல்லை என்பதே நிதர்சனம். டெஸ்ட் போட்டிகளில் 38, ஒருநாள் கிரிக்கெட்டில் 123, டி20 கிரிக்கெட்டில் 34 என மொத்தமாக 195 ஸ்டம்பிங்களை செய்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங்களை செய்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனை படைத்துள்ளதே அதற்கு சாட்சியாகும்.

Advertisement