ஐசிசி டி20 உ.கோ வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் விளாசிய டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

Kohli-2
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 8வது முறையாக வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா, உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட உலகின் டாப் 16 அணிகள் 45 போட்டிகளில் கோப்பையை வெல்வதற்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. சாதாரண ஐபிஎல் போன்ற டி20 தொடர்களிலேயே தங்களது முழு திறமையை வெளிப்படுத்தும் வீரர்கள் தங்களது நாட்டுக்காக கோப்பையை வெல்ல முழுமூச்சுடன் போராடுவார்கள் என்பதால் இத்தொடரில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று நம்பலாம்.

ICC T20 World Cup

- Advertisement -

பொதுவாகவே இதுபோன்ற ஐசிசி தொடர்கள் வரும்போது அதில் அதிக ரன்கள் குவித்து தங்களது நாட்டுக்கு கோப்பையை வென்று கொடுக்கப்போகும் பேட்ஸ்மேன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்படும். அந்த நிலையில் ஒரு உலகக் கோப்பையின் போது அந்த சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்களே அதிக ரன்கள் குவித்து தங்களது அணியின் வெற்றிக்காக போராடுவார்கள். அந்த வகையில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்:

5. தமீம் இக்பால் 295: கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் 2வது கோப்பையை வென்றாலும் வங்கதேசத்தின் வெற்றிக்காக அந்த அணியின் தொடக்க வீரராக போராடிய இவர் களமிறங்கிய 6 போட்டிகளில் ஒரு சதம் ஒரு அரைசதம் உட்பட 295 ரன்களை 73.75 என்ற சிறப்பான சராசரியிலும் 142.51 என்ற ஸ்டிரைக் ரேட்டிலும் குவித்து அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தினார்.

Tamim 1

இருப்பினும் வங்கதேசம் நாக்-அவுட் சுற்றுக்கு கூட செல்லாத நிலையில் அவரை விட 136.50 என்ற அபாரமான சராசரியில் 273 ரன்களைக் குவித்த இந்தியாவின் விராட் கோலி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

4. மகிளா ஜெயவர்தனே 302: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 1000 ரன்களையும் அதிக ரன்களையும் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள இவர் கடந்த 2010ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் களமிறங்கிய 6 இன்னிங்சில் 1 சதம் 2 அரை சதங்கள் உட்பட 302 ரன்களை 60.40 என்ற சராசரியிலும் 159.78 என்று அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார். இருப்பினும் அவரது போராட்டத்தின் பயனாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற இலங்கை அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.

Rizwan

3. பாபர் அசாம் 303: கடந்த 2021ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை கேப்டனாக முன்னின்று வழி நடத்திய இவர் களமிறங்கிய 6 போட்டிகளில் 303 ரன்களை 60.60 என்ற சராசரியிலும் 126.25 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் குவித்து அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

- Advertisement -

குறிப்பாக 4 அரை சதங்களை அடித்த அவர் பரம எதிரியான இந்தியாவை வரலாற்றில் முதல் முறையாக தோற்கடிக்க முக்கிய பங்காற்றிய போதிலும் பாகிஸ்தான் அரையிறுதியில் வெளியேறியது. மேலும் 289 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய டேவிட் வார்னர் தொடர்நாயகன் விருதை வென்றார்.

2. திலகரத்னே தில்சன் 317: இலங்கையின் அதிரடி தொடக்க வீரரான இவர் கடந்த 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் களமிறங்கிய 7 போட்டிகளில் 3 அரை சதங்கள் உட்பட 317 ரன்களை 52.83 என்ற சராசரியிலும் 144.74 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் குவித்து அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்தார். ஆனாலும் முக்கியமான பைனலில் டக் அவுட்டானதால் பாகிஸ்தானிடம் தோற்ற இலங்கை முதல் கோப்பையை முன்னதாகவே வெல்லும் வாய்ப்பை தவற விட்டது.

1. விராட் கோலி 319: 2016 ஐபிஎல் தொடரில் 973 ரன்கள் குவித்ததற்கு முன்பாகவே கடந்த 2014ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆரம்பம் முதலே அற்புதமாக செயல்பட்ட இவர் 6 போட்டிகளில் 4 அரைசதங்கள் உட்பட 319 ரன்களை 106.33 என்ற அபாரமான சராசரியில் 129.14 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்து உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக வரலாற்றுச் சாதனை படைத்தார்.

Virat-Kohli 2014 WOrld Cup

குறிப்பாக இலங்கைக்கு எதிரான மாபெரும் பைனலில் தனி ஒருவனாக இந்தியா எடுத்த 130/4 ரன்களில் 77 ரன்கள் குவித்த அவர் முழுமூச்சுடன் வெற்றிக்கு போராடிய போதிலும் இதர வீரர்களின் சொதப்பலால் வெற்றியை காண முடியவில்லை. இருப்பினும் அவரது அற்புதமான ஆட்டத்திற்கு தொடர் நாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது.

Advertisement