ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வருடங்கள் விளையாடிய டாப் 5 நட்சத்திர ஜாம்பவான்களின் பட்டியல்

Sachin 1
- Advertisement -

கிரிக்கெட் உட்பட எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் அதில் நாட்டுக்காக சர்வதேச அளவில் விளையாடி பெருமை சேர்ப்பதே ஒரு வீரரின் மிகப்பெரிய லட்சியமாக இருக்கும். அதை சிறுவயதிலேயே கனவுகன்டு பள்ளி வயதில் அதற்கான முதல் படிகளை தொட்டு உள்ளூர் அளவில் நிறைய வருடங்கள் தங்களது மிகச் சிறப்பான செயல்பாடுகளால் தேர்வு குழுவினரின் கதவை சத்தமாக தட்டி முதல் முறையாக நாட்டுக்காக தேர்வாவதே அந்த மிகப்பெரிய லட்சியத்தின் முதல் வெற்றியாகும். இருப்பினும் ஏற்கனவே மிகச்சிறப்பாக செயல்பட்டு தங்களுக்கென்று நிலையான இடத்தைப் பிடித்துள்ள நட்சத்திர வீரர்களையும் தரமான வீரர்களையும் தாண்டி விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடிப்பது மிகவும் கடினமான.

அவை அனைத்தையும் தாண்டி ஒருவழியாக சர்வதேச அரங்கில் அறிமுகமாகும் வீரர்கள் ஆரம்பத்தில் கிடைக்கும் வாய்ப்புகளிலேயே மிகச் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் மேற்கொண்டு தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பை பெற முடியும் இல்லையேல் வந்த வாக்கிலேயே காணாமல் போய்விட வேண்டியதுதான். அப்படி சிறப்பாக செயல்பட்டு தொடர்ச்சியான நிலையான இடத்தை பிடிக்கும் வீரர்கள் நாளடைவில் நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்து உலகின் எந்த இடத்திலும் தரமான எதிரணிகளையும் அற்புதமாக எதிர்கொண்டு நாட்டுக்கு வெற்றியைத் தேடித்தருவார்கள்.

- Advertisement -

அதிக வருடங்கள்:
இருப்பினும் நிரந்தர இடத்தைப் பிடித்து மாபெரும் வெற்றிப் பயணத்தை நோக்கி நடக்கும் வீரர்களுக்கு ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சவால்களும் தடைகளும் காத்திருக்கும். ஏனெனில் கிரிக்கெட் வீரர்களும் மெஷின்கள் கிடையாது மனிதர்களே என்பதால் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட முடியாமல் அவ்வப்போது பார்ம் இழக்க நேரிடும். அதுபோக காயம் என்ற பெயரில் விதியும் சற்றே விளையாடிப் பார்க்கும். இந்த இரண்டையும் தாண்ட முடியாமல் 90% வீரர்கள் தங்களது பயணத்தை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் ஓய்ந்து விடுவார்கள்.

ஆனால் தரத்தையும் மன தைரியத்தையும் வைராக்கியத்தையும் கொண்ட 10% வீரர்கள் மட்டுமே காயங்கள், பார்ம் என்ற அனைத்தையும் தாண்டி காலம் கடந்த காவியத் தலைவனாக நிறைய வருடங்கள் விளையாடி நாட்டுக்காக பெருமை சேர்த்து காலத்தால் அழிக்கமுடியாத ஜாம்பவான்களாக போற்றப்படுவார்கள். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வருடங்கள் நாட்டுக்காக விளையாடி 5 வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. சோயப் மாலிக்: கடந்த 1999இல் அறிமுகமான இவர் கடந்த தனது சிறப்பான செயல்பாடுகளால் பாகிஸ்தான் மிடில் ஆர்டரில் முக்கிய பேட்ஸ்மேனாக 287 போட்டிகளில் 7534 ரன்களை 34.50 என்ற நல்ல சராசரியில் குவித்து நிறைய வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றினார்.

2007 – 2009 வரையிலான காலகட்டத்தில் கேப்டனாகவும் செயல்பட்ட இவர் 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அந்த வகையில் 19 வருடங்கள் 245 நாட்கள் பாகிஸ்தானுக்காக விளையாடிய கௌரவத்தையும் பெருமையையும் பெற்றுள்ள இவர் இந்த பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

4. கிறிஸ் கெயில்: ஜமைக்காவை சேர்ந்த இவர் சர்வதேச அரங்கில் மேற்கிந்திய தீவுகளுக்காக கடந்த 1999இல் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்ப காலம் முதல் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்த இவர் ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்து 10,480 ரன்களை விளாசி ஜாம்பவனாக கடந்த 2019ஆம் ஆண்டு அதே இந்தியாவுக்கு எதிராக விடைபெற்றார்.

அதிலும் 2015 உலக கோப்பையில் இரட்டை சதமடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாதனை படைத்த இவர் 19 வருடங்கள் 337 நாட்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி அதிக வருடங்கள் வெஸ்ட் இண்டீஸ்க்காக விளையாடிய வீரர் என்ற பெருமையுடன் இப்பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

3. ஜாவேத் மியாண்டட்: 80 மற்றும் 90களில் பாகிஸ்தானின் முக்கிய நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த இவர் கேப்டனாக வழி நடத்தும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டார்.

1975இல் அறிமுகமாகி 1996இல் ஓய்வுபெற்ற இவர் பாகிஸ்தானுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 20 முழுமையான வருடங்கள் மற்றும் 272 நாட்கள் விளையாடி அதிக வருடங்கள் விளையாடிய வீரராக சாதனையுடன் ஓய்வு பெற்றார்.

2. சனாத் ஜெயசூர்யா: 90களில் அற்புதமான சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக இலங்கைக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இவர் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற கலையை இலங்கைக்கு கற்றுக் கொடுத்தவர் என்றால் மிகையாகாது.

பகுதிநேர சுழல் பந்து வீச்சாளராக சச்சின் போன்றவர்களையும் திணறடித்த இவர் 1989இல் அறிமுகமாகி 2011 வரை 13430 ரன்களையும் 323 விக்கெட்களையும் எடுத்த ஒரு மகத்தான ஆல்-ரவுண்டராகவே போற்றப்படுகிறார். 21 வருடங்கள் 184 நாட்கள் விளையாடிய இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வருடங்கள் விளையாடிய இலங்கை வீரராக இன்றும் சாதனை படைத்துள்ளார்.

1. சச்சின் டெண்டுல்கர்: 1989இல் 16 வயது பிஞ்சு கால்களுடன் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற தரமான பவுலர்களை ஆரம்பத்திலேயே எதிர்கொண்டு அவர்களைவிட உலகத்தரம் வாய்ந்த வீரராக உருவெடுத்த இவர் நாளடைவில் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக உருவெடுத்து ஓய்வு பெறும் வரை அதை தனது தோளில் சுமந்தார். 90களில் இவர் அடித்தால்தான் இந்தியா வெற்றி இல்லையேல் தோல்வி என்ற நிலைமையே இவரின் தரத்திற்கு சான்று. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடவே முடியாது என்று கருதப்பட்ட 200 ரன்களை முதல் முறையாக எட்டிப்பிடித்த இவர் யாராலும் சுலபமாக எட்ட முடியாத 18,426 ரன்களையும் 49 சதங்களையும் அடித்து மாபெரும் உலக சாதனை படைத்துள்ளார்.

1992 முதல் 5 உலக கோப்பைகளை வெல்லமுடியாத அவர் கடைசி முயற்சியில் சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து இந்தியா உலக கோப்பையை வெல்ல அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக முக்கிய பங்காற்றி 2011 உலக கோப்பையை வென்று 2012இல் ஓய்வு பெற்றார். பார்ம் மற்றும் காயங்கள் என அனைத்தையும் கடந்த காவியத் தலைவனாய் 22 வருடங்கள் 91 நாட்கள் விளையாடிய இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வருடங்கள் விளையாடிய வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார்.

Advertisement