டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் சேர்ந்து விளையாடிய டாப் 5 ஜோடி வீரர்களின் பட்டியல்

Dravid 1
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தங்களது அபார திறமையால் நாட்டுக்காக வெற்றிகளை தேடிக் கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கும் நட்சத்திர வீரர்கள் எப்போதும் ஒரு அணியில் நீண்ட வருடங்களாக நிலையான இடத்தைப் பிடித்து விளையாடுவார்கள். மேலும் ஒரு அணியில் உலகின் எந்த இடத்திலும் எப்பேர்ப்பட்ட தரமான எதிரணி வீரர்களையும் திறமையாக எதிர்கொண்டு வெற்றிகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வீரர்கள் நிச்சயமாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பார்கள்.

அது போன்ற வீரர்கள் மட்டுமே தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு நீண்ட வருடங்கள் நாட்டுக்காக விளையாடி காலப்போக்கில் ஜாம்பவான்களாக ரசிகர்களாலும் வல்லுனர்களாலும் போற்றப்படுவார்கள். மேலும் எந்த ஒரு அணியிலும் முதுகெலும்பாகவும் எவ்விதமான சூழல்களையும் எதிர்கொள்ளும் தூண்களாகவும் கருதப்படும் அவர்களில் நிச்சயமாக 2 வீரர்கள் பெரும்பாலான தருணங்களில் ஜோடி போட்டு எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வெற்றியைத் தேடி கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

- Advertisement -

காயங்களை தாண்டி காலங்களைத் தாண்டி வெவ்வேறு கேப்டன்களைத் தாண்டி ஓய்வு பெறும் வரை ஒன்றாகவே தோள்கொடுக்கும் தோழனாக நண்பனாக இணைந்தே விளையாடும் அவர்களை எத்தனை வருடங்கள் கழிந்தாலும் ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி சரித்திரங்களை எழுதி இருப்பார்கள். அந்த வகையில் நூற்றாண்டு சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் இணைந்து விளையாடிய டாப் 5 ஜோடிகளை பற்றி பார்ப்போம்.

5. மஹிளா ஜெயவர்தனே – குமார் சங்கக்காரா 126: 21-ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் இலங்கையின் மகத்தான 2 ஜாம்பவான்களாக வலம் வந்த இவர்கள் நாட்டிற்காக எத்தனையோ போட்டிகளில் இக்கட்டான சூழ்நிலைகளில் ஒன்றாகக் ஜோடி சேர்ந்து பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் போட்டு ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

- Advertisement -

சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களை (624 ரன்கள்) இந்த ஜோடி தான் எடுத்து உலக சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் இலங்கைக்காக 126 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக இணைந்து விளையாடிய இவர்கள் இப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கின்றனர்.

4. அல்ஸ்டர் குக் – ஜேம்ஸ் ஆண்டர்சன் 130: டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் 10000 ரன்களை குவித்த முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள அலஸ்டேர் குக் அந்நாட்டின் கேப்டனாகவும் நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2018இல் அவர் ஓய்வு பெற்றாலும் அவரது தலைமையில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக விளையாடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 650+ விக்கெட்டுக்களுடன் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்து இன்னும் எதிரணிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் 130 போட்டிகளில் சேர்ந்து விளையாடிய இவர்கள் இங்கிலாந்துக்காக அதிக போட்டிகளில் சேர்ந்து விளையாடிய ஜோடி என்ற பெருமையுடன் இப்பட்டியலில் 4-வது இடம் பிடிக்கின்றனர்.

3. ராகுல் டிராவிட் – விவிஎஸ் லக்ஷ்மண் 132: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான 2 மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக கருதப்படும் இந்த ஜோடி “கதை முடிந்தது” என்று கருதப்பட்ட போட்டிகளிலும் நங்கூரமாக நின்று மூழ்கிய இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தி பெற்றுக்கொடுத்த வெற்றிகளை மறக்கவே முடியாது.

- Advertisement -

குறிப்பாக 2001இல் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு பாலோ-ஆன் கொடுத்த ஆஸ்திரேலியாவை ஒருநாள் முழுக்க ஜோடி சேர்ந்து கதறகதற அடித்து சரித்திர வெற்றியை பெற்றுக்கொடுத்த இவர்களின் பார்ட்னர்ஷிப்பை இந்திய ரசிகர்கள் தங்களது வாழ்நாளில் மறக்கவே முடியாது. தங்களுக்குள் நல்ல புரிதலை கொண்ட இவர்கள் இந்தியாவுக்காக 132 போட்டிகளில் ஒன்றாக விளையாடி இப்பட்டியலில் 3-வது இடம் பிடிக்கின்றனர்.

2. மார்க் பவுச்சர் – ஜேக் காலிஸ் 137: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் மகத்தான ஆல்-ரவுண்டரும் மகத்தான விக்கெட் கீப்பரும் தங்களது அணியில் விளையாடியதற்கு தென்னாப்பிரிக்கா கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

விக்கெட் கீப்பராக 998 டிஸ்மிஸல்ஸ் செய்த மார்க் பவுச்சருடன் தனது அபார பேட்டிங் மற்றும் பந்து வீச்சு திறமையால் பல சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய ஜாம்பவான் ஜேக் காலிஸ் 137 போட்டிகளில் இணைந்து விளையாடி தென் ஆப்பிரிக்காவுக்கு அற்புதமான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இப்பட்டியலில் 2-வது இடம் பிடிக்கின்றனர்.

1. சச்சின் டெண்டுல்கர் – ராகுல் டிராவிட் 146: கிரிக்கெட்டில் இந்தியா கண்ட மாணிக்கம் சச்சின் டெண்டுல்கரும் தூணாக தாங்கிப் பிடித்த பெருஞ்சுவர் ராகுல் டிராவிட்டும் பல போட்டிகளில் சேர்ந்து அற்புதமாக பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவுக்கு பல சரித்திர வெற்றி பெற்று கொடுத்துள்ளார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 2 இந்திய பேட்ஸ்மேன்களாக சாதனை படைத்துள்ள இவர்கள் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க ஜோடியாகவும் உலக சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவுக்காக மொத்தம் 146 போட்டிகளில் இணைந்து விளையாடிய இவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் இணைந்து விளையாடிய ஜோடி என்ற மேலும் ஒரு உலக சாதனையை படைத்து இப்பட்டியலில் முதலிடம் பிடிக்கின்றனர்.

Advertisement