பவுலிங் பார்ட்னர்கள் – டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த டாப் 5 பவுலிங் ஜோடிகள்

- Advertisement -

கிரிக்கெட்டில் தங்களது நாட்டின் வெற்றிக்காக 11 பேர் இணைந்து விளையாடும் சூழ்நிலையில் அதில் வெற்றி பெறுவதற்கு குறைந்தது 3 – 4 வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் நிறைய வீரர்கள் இணைந்து விளையாடினால் வெற்றி மிகவும் சுலபமாக கிடைக்கும். ஆனால் எதிரணியின் ஆட்டத்திற்கு சரணடைந்து பெரும்பாலான வீரர்கள் சொதப்பும் போது ஒருவர் தனி ஒருவனாக போராடும் 99% போட்டிகள் தோல்வியில் முடிவதையே அதிகமாக பார்க்க முடியும். அப்படி சர்வதேச அரங்கில் வெற்றிக்காக இணைந்து செயல்படுவது இன்றியமையாததாக அமையும் நிலையில் பேட்டிங்கில் களத்தில் ஒரே நேரத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைப்பது வெற்றிக்கு முக்கியமான ஒன்றாகும்.

அந்த வகையில் ஓப்பனிங் முதல் மிடில் ஆர்டர் வரை களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் விதவிதமாக பார்ட்னர்ஷிப் அமைப்பதை ஏறக்குறைய அனைத்து போட்டிகளிலும் ரசிகர்களால் பார்க்க முடியும். ஆனால் பந்து வீச்சாளர்கள் பார்ட்னர்ஷிப் அமைப்பதெல்லாம் அரிதினும் அரிதான ஒன்றாகும். அது என்ன பந்துவீச்சு பார்ட்னர்ஷிப் என்று கேட்கிறீர்களா. வேறொன்றுமில்லை பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த கிரிக்கெட்டில் தங்களது அபார திறமையால் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுத்து ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுக்கும் சில தரமான பவுலர்கள் நிறைய வருடங்கள் ஒன்றாக இணைந்து நாட்டின் வெற்றிக்காக பந்து வீசுவார்கள்.

- Advertisement -

பவுலிங் பார்ட்னர்கள்:
அதிலும் பேட்ஸ்மேன்களை போல எப்போதாவது 2 தரமான பவுலர்களும் பந்துவீச்சில்  நிறைய போட்டிகளில் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் போட்டு எதிரணிகளை திணறடித்து தங்களது அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார்கள். ஆனால் பவுலர்கள் பார்ட்னர்ஷிப் போடுவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில் முதலில் அந்த குறிப்பிட்ட இரு பவுலர்களும் நீண்ட நாட்கள் விளையாடும் அளவுக்கு தரமானவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் இருவருமே காயம் மற்றும் பார்ம் ஆகிய இரண்டையும் கடந்து நீண்ட நாட்கள் விளையாட வேண்டும். அந்த வகையில் நூற்றாண்டு சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பார்ட்னர்ஷிப் போட்டு அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 ஜோடிகளைப் பற்றி பார்ப்போம்.

5. வக்கார் யூனிஸ் – வாசிம் அக்ரம் 559: 90களில் தங்களது அபாரமான வேகப்பந்துகளால் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையும் திணறடித்த இந்த ஜோடியில் வக்கார் யூனிஸ் தனது அதிரடியான வேகப்பந்துகளால் வலதுகை பவுலராக மிரட்டுவார். மறுபுறம் இடதுகை பவுலரான வாசிம் அக்ரம் 2 திசைகளிலும் ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களை திணறிடிப்பார்.

- Advertisement -

அந்த வகையில் பாகிஸ்தானுக்காக 61 போட்டிகளில் சேர்ந்து விளையாடியுள்ள இவர்கள் 559 விக்கெட்டுகளை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான பாகிஸ்தான் பந்துவீச்சு ஜோடியாக அசத்தி இப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கின்றனர்.

4. கர்ட்லீ ஆம்ப்ரோஸ் – கோர்ட்னி வால்ஷ் 762: 80களின் இறுதியில் ஜோடி சேர்ந்து 90களில் உலகில் இருந்த அத்தனை பேட்மேன்களையும் தெறிக்கவிட்ட இவர்கள் வெறித்தனமாக மண்டையை உடைக்கும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களின் கடைசி பரம்பரையாக இருந்தார்கள் என்றே கூறலாம்.

- Advertisement -

இதில் சற்று அதிகப்படியான உயரத்துடன் பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை பறக்க விடும் வகையில் ஆம்ப்ரோஸ் பந்துவீசினால் அதிரடியான பவுன்சர்களை வீசி பேட்ஸ்மேன்களை எகிறவைத்து வால்ஷ் விக்கெட்டுகளை சாய்ப்பார். மொத்தம் 95 போட்டிகளில் இணைந்து விளையாடிய இவர்கள் 795 விக்கெட்டுகளை எடுத்து ஏராளமான வேகப்பந்து வீச்சாளர்களை உலகிற்கு கொடுத்த வெஸ்ட் இண்டீசின் சிறந்த வேகப்பந்து வீச்சு ஜோடியாக இப்பட்டியலில் 4-வது இடம் பிடிக்கின்றனர்.

3. முத்தையா முரளிதரன் – சமீந்தா வாஸ் 895: இலங்கையின் மகத்தான வேகப்பந்து வீச்சாளர் வாஸ் தனது அதிரடியான வேகத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்க அவரை விட வரலாற்றின் மகத்தான சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன் தனது அற்புதமான சுழலால் பேட்ஸ்மேன்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து ஏராளமான விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

வேகம் மற்றும் சுழல் என ஒரே நேரத்தில் 2 முற்றிலும் மாறுபட்ட பந்துகளை இவர்களிடமிருந்து எதிர்கொண்ட பேட்ஸ்மென்கள் அதை எளிதில் கணிக்க முடியாமல் அவுட்டாவார்கள். அந்த வகையில் இலங்கைக்காக 895 விக்கெட்டுகளை இணைந்து எடுத்துள்ள இவர்கள் ஆசியாவின் மிகச் சிறந்த பந்துவீச்சு கூட்டணியாக சாதனை படைத்துள்ளனர்.

2. ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்டுவர்ட் பிராட் 944*: இங்கிலாந்தின் மகத்தான 2 வேகப்பந்து வீச்சாளர்களான இவர்கள் இந்த பட்டியலில் இப்போதும் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரே ஜோடியாக இடம் பிடித்துள்ளார்கள்.

இதில் கடந்த பல வருடங்களாக சச்சின் உட்பட உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை அதிகமுறை அவுட் செய்த பெருமை கொண்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஸ்விங் பந்துகளால் எதிரணியை திணறடிக்க அவருக்கு சமமான ஜோடியாக ஸ்டூவர்ட் பிராட் தனது வேகப்பந்துகளால் விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். இதுவரை 126 போட்டிகளில் இணைந்து விளையாடி வரும் இவர்கள் 944* விக்கெட்டுகளை எடுத்து அனுபவத்தை காட்டி வருகிறார்கள்.

1. ஷேன் வார்னே – கிளேன் மெக்ராத் 1001: ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற பவுலர்கள் ஸ்விங்க்கு கை கொடுக்கக்கூடிய கால சூழ்நிலைகள் நிறைந்த மைதானங்களில் தான் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். அதேபோல் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் முத்தையா முரளிதரன் எதிரணிகளை மண்ணைக் கவ்வ வைத்து விடுவார்.

ஆனால் வேகத்திற்கு கை கொடுக்காத ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் சுழலுக்கு கை கொடுக்க கூடிய இந்திய ஆடுகளங்கள் என உலகின் அனைத்து வகையான மைதானங்களிலும் தனது திறமையால் மிரட்டிய வேகப்பந்து வீச்சாளர் கிளன் மெக்ராத் என்றால் சுழலுக்கு கைகொடுக்காத ஆஸ்திரேலிய, இங்கிலாந்து மைதானங்களிலும் சுழலுக்கு கை கொடுக்க கூடிய ஆசிய மைதானங்களிலும் மாயாஜாலம் நிகழ்த்திய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆவார்.

அதாவது கால சூழ்நிலைகளையும் மைதானங்களையும் கடந்து அனைத்து இடங்களிலும் அற்புதமாக செயல்பட்ட இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு 104 டெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே அதிகபட்சமாக 1001 விக்கெட்களை ஜோடியாக எடுத்த அபாரமான பந்து வீச்சு ஜோடியாக உலக சாதனை படைத்து இப்பட்டியலில் முதலிடம் பிடிக்கின்றனர்.

Advertisement