- Advertisement -
ஐ.பி.எல்

வயது வெறும் நம்பர் – ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் சதம் விளாசிய டாப் 5 நட்சத்திரங்கள் – லிஸ்ட் இதோ

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பொதுவாகவே கிரிக்கெட் மட்டுமல்லாது எந்த ஒரு விளையாட்டிலும் விளையாடும் தரமான திறமை வாய்ந்த வீரர்களுக்கு வயது என்பது தடை கிடையாது.

வயது வெறும் நம்பர்:
சொல்லப்போனால் வயது ஆகஆக ஒரு சில வீரர்கள் தங்களின் இளம் வயதில் செயல்பட்டதை விட அபாரமாக செயல்பட்டு வயது வெறும் நம்பர் என நிரூபித்த தருணங்கள் ஏராளமாக உள்ளது. அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வயதில் சதமடித்த டாப் 5 வீரர்களின் பட்டியல் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

5. ஷேன் வாட்சன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் ராஜஸ்தான் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார். அதன்பின் பெங்களூரு போன்ற அணிகளுக்காக விளையாடி வந்த அவர் தனது கடைசி கட்ட நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனியின் கீழ் விளையாடினார். குறிப்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு தடையில் இருந்து மீண்டு வந்த சென்னை அணி லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவர்களில் 178/6 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து 179 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் ஆரம்பம் முதலே அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஆனால் மறுபுறம் டு பிளேஸிஸ், சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் பெரிய ரன்கள் அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தாலும் தொடர்ந்து நங்கூரமாக ஹைதராபாத் அணியை வெளுத்து வாங்கிய அவர் வெறும் 57 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர் உட்பட சதம் அடித்து 117* ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

மொத்தத்தில் பைனலில் அபாரமாக செயல்பட்ட அவர் சென்னை அணிக்கு 3-வது கோப்பையை தனி ஒருவனாக வாங்கி கொடுத்தார் என்றே கூறலாம். அதனால் ஆட்டநாயகன் விருது பெற்ற அவருக்கு அந்த சதம் அடித்தபோது வயது 36 வருடம் 244 நாட்களாகும். மொத்தமாக 4 ஐபிஎல் சதங்கள் அடித்துள்ள அவர் இதன் வாயிலாக இந்த பட்டியலில் 5வது இடத்தையும் பிடித்துள்ளார்.

4. சச்சின் டெண்டுல்கர்: சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்து இந்தியாவிற்கு எத்தனையோ வெற்றிகளை வாங்கிக் கொடுத்த சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரிலும் தனது சொந்த ஊரான மும்பைக்கு விளையாடி தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். ஆரம்ப காலங்களில் அந்த அணியின் கேப்டனாக விளையாடிய அவர் கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொச்சி அணிக்கு எதிரான போட்டியில் 66 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட சதமடித்து 100* ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அந்த போட்டியில் மும்பை தோற்ற போதிலும் 37 வருடம் 356 நாட்கள் வயதில் சதமடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் சதம் அடித்த இந்திய கேப்டன் மற்றும் இந்திய வீரர் ஆகிய சாதனைகளை படைத்து இந்தப் பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளார்.

3. கிறிஸ் கெயில்: வெஸ்ட் இண்டீசை தேர்ந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரசிகர்கள், அதிகபட்ச ஸ்கோர் உள்ளிட்ட பல சாதனைகளைப் படைத்த ஒரு ஜாம்பவான் என கூறலாம். மொத்தம் 6 சதங்களை அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ள அவர் கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 63 பந்துகளில் 104 ரன்கள் விளாசி சதம் அடித்தார். அதன் காரணமாக அவர் விளையாடிய பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது 38 வருடம் 210 நாட்கள் வயதை கடந்திருந்த அவர் இந்தப் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

2. சனாத் ஜெயசூரியா: இலங்கை அணியின் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட முதல் வருடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 157 ரன்கள் இலக்கை மும்பை துரத்தியது.

அப்போது அவருடன் ஜோடியாக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் அவுட்டானாலும் மறுபுறம் அனல் தெறிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 48 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 11 சிக்சர்கள் உட்பட சதம் விளாசி 114* ரன்கள் எடுத்து மும்பையை வெற்றி பெறச் செய்தார். அந்த சதம் அடித்த போது அவரின் வயது 38 வருடம் 319 நாட்கள் என்பதால் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார்.

1. ஆடம் கில்கிறிஸ்ட் : கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களின் அடிப்படை இலக்கணத்தை மாற்றிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிரிஸ்ட் ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட காலங்களில் கேப்டனாக விளையாடினார். குறிப்பாக டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் செய்த அவர் கடந்த 2009-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து தன்னை ஒரு சிறந்த கேப்டன் எனவும் நிரூபித்தார்.

அதன்பின் கடந்த 2011-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அவர் தரம்சாலாவில் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்து 55 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் உட்பட சதமடித்து 106 ரன்கள் விளாசினார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 111 ரன்கள் வித்யாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தனது 39 வருடம் 184 நாட்கள் வயதில் இந்த அபார சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்ற அவர் ஐபிஎல் கிரிக்கெட் மிக அதிக வயதில் சதம் அடித்த வீரர் மற்றும் கேப்டன் என்ற 2 பெருமைகளுடன் சாதனைகளைப் படைக்க வயது ஒரு தடையல்ல என நிரூபித்தார்.

- Advertisement -
Published by