- Advertisement -
உலக கிரிக்கெட்

10 ரன்ஸ் 6 விக்கெட்ஸ்.. சிஎஸ்கே வீரர் முஸ்தபிசூர் உலக சாதனை.. அமெரிக்காவுக்கு எதிராக வங்கதேசம் ஆறுதல் வெற்றி

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. விரைவில் துவங்கும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வங்கதேசத்தை வீழ்த்திய அமெரிக்கா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதனால் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று அமெரிக்கா புதிய சாதனையும் படைத்தது.

மறுபுறம் அமெரிக்காவிடம் அவமான தோல்வியை சந்தித்ததால் வங்கதேசம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. அந்த நிலையில் இந்தத் தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி மே 25ஆம் தேதி ஹவுஸ்டன் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்கா ஆரம்பம் முதலே சுமாராக பேட்டிங் செய்து 20 ஓவரில் 104/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ஆறுதல் வெற்றி:
குறிப்பாக முஸ்தஃபிசூர் ரஹ்மான் வேகத்தில் திணறிய அந்த அணி பேட்ஸ்மேன்கள் யாருமே 30 ரன்கள் தாண்டவில்லை. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆண்ட்ரீஸ் கவுஸ் 27 (15) ரன்கள் எடுத்தார். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக முஸ்தஃபீஸூர் ரஹ்மான் 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட வெறும் 10 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்தார். குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடிய அவர் அதே ஃபார்மில் இப்போட்டியில் அமெரிக்காவை திணறடித்தார்.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் சிறந்த (6/10) பந்து வீச்சை பதிவு செய்த வீரர் என்ற புதிய உலக சாதனையும் அவர் படைத்தார். இதற்கு முன் இதே 2024ஆம் ஆண்டு கோஸ்டா ரிக்கா அணிக்கு எதிராக மெக்சிகோ அணி வீரர் பிராத்திக் சிங் பேய்ஸ் 14 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் என்ற சாதனையும் முஸ்தபிசூர் ரஹ்மான் படைத்தார். அதைத் தொடர்ந்து 105 என்ற சுலபமான இலக்கை துரத்திய வங்கதேசத்துக்கு சௌமியா சர்க்கார் 43* (28) தன்சித் ஹசன் 58* (42) ரன்கள் அடித்தனர். அதனால் 11.4 ஓவரிலேயே 108/0 ரன்கள் எடுத்த வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்த்து ஆறுதல் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: 16 ரன்ஸ்.. சொந்த மண்ணில் கெத்து காட்டிய வெஸ்ட் இண்டீஸ்.. தெ.ஆ அணிக்கு எதிராக புதிய சாதனை

மறுபுறம் தோல்வியை சந்தித்தாலும் 2 – 1 (3) என்ற கணக்கில் அமெரிக்கா தங்களுடைய சொந்த மண்ணில் கோப்பையை வென்று அசத்தியது. குறிப்பாக கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அந்த அணி ஐசிசி முழு அந்தஸ்து பெற்ற வங்கதேச அணியை தோற்கடித்து வரலாற்று வெற்றி பெற்றது. அந்த வகையில் இந்த வெற்றி அமெரிக்காவின் வரலாற்றில் மறக்க முடியாததாக அமைந்தது.

- Advertisement -