16 ரன்ஸ்.. சொந்த மண்ணில் கெத்து காட்டிய வெஸ்ட் இண்டீஸ்.. தெ.ஆ அணிக்கு எதிராக புதிய சாதனை

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. விரைவில் துவங்கும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி மே 25ஆம் தேதி கிங்ஸ்டன் நகரில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜான்சன் சார்லஸ் 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் பிரண்டன் கிங் அதிரடியாக 36 ரன்கள் எடுத்தார். அதே போல 3வது இடத்தில் களமிறங்கிய கெய்ல் மேயர்ஸ் 32 (16) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சாதனை:
அடுத்ததாக வந்த ரோஸ்டன் சேஸ் அதிரடியாக 7 பவுண்டரி 2 சிக்சருடன் 67* (38) ரன்கள் குவித்து அசத்தினார். அவர்களுடன் ஆண்ட்ரே பிளட்சர் 29 (18) ரோமரியா செபார்ட் 26* (13) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 207/7 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நெகிடி, பீட்டர், ஆண்டிலோ பெலுக்வியோ தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 208 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு 5 ஓவரில் 81 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த குயிண்டம் டீ காக் 41 (17) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அதிரடி காட்டிய ரீசா ஹென்றிக்ஸ் 34 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அதற்கடுத்ததாக வந்த ரியான் ரிக்கல்ட்டன் 19 (17), மேத்யூ பிரேட்ஸ்க்கே 12 (16) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

அதற்கடுத்ததாக வந்த கேப்டன் வேன் டெர் டுஷன் 30 (22) ஆண்ட்டிலோ பெலுக்வியோ 3 (6) வியன் முல்தர் 9 (8) போர்ட்சுன் 9* (12) பீட்டர் 10* (7) ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் தென்னாப்பிரிக்காவை 191/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்ட அந்த அணிக்கு அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையும் படிங்க: ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் கடைசி இடம்.. இப்போ இதுவேறயா – குடும்ப பிரச்சனையில் சிக்கினாரா பாண்டியா?

அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ளது. சொல்லப்போனால் கடைசியாக கடந்த 2023 மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. தற்போது இந்த தொடரையும் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்த 2 தொடர்களில் வெற்றிகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் வரலாற்றில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக எந்த வகையான ஃபார்மெட்டிலும் வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்த 2 தொடர்களை வென்றது கிடையாது.

Advertisement