
உலகம் முழுவதிலும் 2025 ஆங்கில வருடம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து 2026 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகியுள்ளார்கள். இந்த நிலைமையில் 2025ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணி பெற்ற மறக்க முடியாத மகத்தான வெற்றிகளைப் பற்றி பார்ப்போம்:
1. சாம்பியன்ஸ் ட்ராபி: கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் தோல்வியே சந்திக்காமல் இந்தியா கோப்பையை வென்று சாதனை படைத்தது.
பாகிஸ்தானில் நடைபெற்ற அத்தொடரில் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது. அங்கே ஒரு முறை கூட இந்தியா டாஸ் வெல்லவில்லை. இருப்பினும் டாஸ் அதிர்ஷ்டம் இல்லாமலேயே சிறப்பாக விளையாடிய இந்தியா இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து 2013க்குப்பின் சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று சாதனை படைத்தது.
2. இங்கிலாந்தில் வரலாறு: இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட், ரோஹித் இல்லாமல் இந்தியா படுதோல்வியை சந்திக்கும் என்று பலரும் கணித்தார்கள். இருப்பினும் ஆரம்பம் முதலே சவாலைக் கொடுத்த சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. குறிப்பாக கடைசி போட்டியில் நிச்சயம் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கிள் வெற்றி பெற்றது.
அதனால் சீனியர்கள் இல்லாமல் தொடரை சமன் செய்தது இந்தியாவுக்கு வெற்றி என்றும், சொந்த மண்ணில் இளம் இந்தியாவிடம் தொடரை சமன் செய்தது இங்கிலாந்துக்கு தோல்வி என்றும் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் வர்ணித்தார்.
3. ஆசியக் கோப்பை: துபாயில் நடைபெற்ற அத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 8வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
குறிப்பாக ஃபைனல் உட்பட பரம எதிரி பாகிஸ்தானை 3 முறை எதிர்கொண்ட இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. வரலாற்றில் வேறு எந்த ஆசிய அணியும் 7 முறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது ஸ்பெசலாகும்.
4. மகளிர் உலகக் கோப்பை: சொந்த மண்ணில் நடைபெற்ற அத்தொடரில் முதல் பகுதியில் சொதப்பிய இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் வென்ற இந்தியா செமி ஃபைனலில் அசுரன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது.
அப்போட்டியில் ஐசிசி உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் 300+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணியாகவும் இந்திய சிங்கப்பெண்கள் சாதனை படைத்தனர். அதே வேகத்தில் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த இந்தியா முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்று புதிய சரித்திரம் படைத்தது.
இதையும் படிங்க: ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம்.. பி.சி.சி.ஐ அதிகாரி – வெளியிட்ட தகவல்
5. பார்வையாற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை: பார்வையற்றோர்களுக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை 2025இல் முதல் முறையாக நடைபெற்றது. அந்தத் தொடரிலும் இந்திய சிங்கப்பெண்கள் அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டியில் நேபாளை தோற்கடித்து கோப்பையை வென்று வரலாறு படைத்தது. அதனால் சாதிப்பதற்கு பார்வை ஒரு தடையல்ல என்பதை இந்தியம் சிங்கப்பெண்கள் நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.