ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக சதமடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் – பட்டியல் இதோ

- Advertisement -

ஐபிஎல் என்றாலே பவுலர்களை விட அதிரடி சரவெடியாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு ரன் மழை பொழியும் பேட்ஸ்மேன்களையே ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள். அந்த வகையில் பெரும்பாலான போட்டிகளில் பவுலர்களை புரட்டி எடுக்கும் பேட்ஸ்மேன்கள் ரன்களை அதிரடியாக குவித்தாலும் அனைத்து நேரங்களிலும் சதமடிப்பது என்பது அவர்களுக்கு சவாலானதாகும். அப்படி எப்போதாவது சதமடிக்கும் பேட்ஸ்மென்கள் அதைவிட எப்போதாவது அரிதான தருணங்களில் தான் வழக்கத்திற்கு மாறான இருமடங்கு அதிரடியை வெளிப்படுத்தி அதிவேகமாக ரன்களை குவிக்க முடியும். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதங்கள் அடித்த டாப் 5 வீரர்களை பற்றி பார்போம்.

warner

- Advertisement -

5. டேவிட் வார்னர்: ஐபிஎல் தொடரில் கடந்த பல வருடங்களாக கோலோச்சி வரும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக கொல்கத்தாவுக்கு எதிரான ஒரு போட்டியில் கேப்டனாகவும் தொடக்க வீரராக களமிறங்கி பட்டையை கிளப்பினார். வெறும் 59 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் உட்பட சதமடித்து 126 ரன்கள் விளாசியதால் 20 ஓவர்களில் அந்த அணி 206/3 ரன்கள் எடுத்தது.

அதை சேசிங் செய்த கொல்கத்தா 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் அப்போட்டியில் வெறும் 43 பந்துகளில் சதத்தை பதிவு செய்த டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை வென்று இந்தப் பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார். இதுபோன்ற எத்தனையோ வெற்றிகளை பெற்றுக் கொடுத்த போதிலும் அவரை நன்றி இல்லாமல் ஹைதராபாத் நிர்வாகம் கழற்றிவிட்டது வேறு கதை.

abd

5. ஏபி டி வில்லியர்ஸ்: கடந்த 2016 ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் கிறிஸ் கெயில் அவுட்டான பின் கைகோர்த்த ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி கருணையே இல்லாமல் அந்த அணி பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார்கள். தொடர்ச்சியாக பட்டைய கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 229 ரன்கள் பிரம்மாண்ட பார்ட்னர்ஷிப் அமைத்து ஐபிஎல் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற வரலாற்றை படைத்தது.

- Advertisement -

இந்த ஜோடியில் 5 பவுண்டரி 8 சிக்சருடன் சதமடித்த விராட் கோலி 109 (55) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் குஜராத்தை பந்தாடிய ஏபி டி வில்லியர்ஸ் 10 பவுண்டரி 12 மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு 129* (52) ரன்களை விளாசினார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 249 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் 104 ரன்களுக்கு சுருண்டதால் 144 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு 43 பந்துகளில் சதமடித்து அசத்திய ஏபி டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்று இந்த பட்டியலில் 5-வது இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

Rohit Sharma Deccan Chargers

4. ஆடம் கில்கிறிஸ்ட்: கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடரில் அணியின் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அப்போதைய சச்சின் தலைமையிலான மும்பையை எதிர்கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை வெறும் 154/7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அதை துரத்திய டெக்கான் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கி மின்னலாக விளையாடிய கில்கிறிஸ்ட் 9 பவுண்டரி 10 சிக்சர் உட்பட வெறும் 42 பந்துகளில் சதத்தை தொட்டு இறுதி வரை ஆட்டமிழக்காமல் 109* (47) ரன்கள் விளாசி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொடுத்து இந்த பட்டியலில் 4-வது இடத்தை பிடிக்கிறார்.

- Advertisement -

3. டேவிட் மில்லர் : 2013 ஐபிஎல் தொடரில் மொகாலியில் நடைபெற்ற பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 190/3 ரன்கள் எடுத்த நிலையில் அதை துரத்திய பஞ்சாப் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 64/4 என மோசமான தொடக்கத்தை பெற்றது.

Miller

அப்போது களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் அதிரடி சரவெடியாக 8 பவுண்டரி 7 சிக்சர் உட்பட வெறும் 38* பந்துகளில் சதமடித்து 106 ரன்கள் குவித்து மிரட்டலான பினிஷிங் கொடுத்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த இன்னிங்சாக பார்க்கப்படும் அதில் வெறும் 38 பந்துகளில் சதமடித்த மில்லர் அந்த நாளில் தனி ஒருவனாக பஞ்சாப்புக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்து இந்த பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

2. யூசுப் பதான்: கடந்த 2010 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சச்சின் தலைமையிலான மும்பை 212/6 ரன்கள் குவித்த நிலையில் அதை துரத்திய ராஜஸ்தானுக்கு கிரேம் ஸ்மித் போன்ற முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 66/4 என ஆரம்பத்திலேயே அந்த அணி தடுமாறியது.

Yusuf 1

அப்போது களமிறங்கிய முன்னாள் இந்திய வீரர் யூசுப் பதான் போருக்கு மத்தியில் பூகம்பத்தை போல விக்கெட் விழுந்தாலும் பயமே இல்லாமல் 9 பவுண்டரி 8 சிக்சருடன் வெறும் 37 பந்துகளில் மிரட்டலான சதமடித்து 100 ரன்கள் எடுத்தபோது துரதிஸ்டவசமாக ரன் அவுட்டானார். அவரின் மிகச்சிறந்த ஆட்டத்தால் வெற்றியின் விளிம்பு வரை சென்ற ராஜஸ்தான் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இருப்பினும் அந்த போட்டியில் 37 பந்தில் சதத்தை தெறிக்கவிட்ட யூசுப் பதான் இப்பட்டியலில் 2-வது இடம் பிடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதமடித்த இந்திய பேட்ஸ்மேனாக சாதித்துள்ளார்.

1. கிறிஸ் கெயில்: கடந்த 2013-ஆம் ஆண்டு சின்னசாமி மைதானத்தில் கிறிஸ் கெயில் என்னும் புயல் வீசியதை எவராலும் என்றும் மறக்க முடியாது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு தொடக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் முதல் பந்திலிருந்தே சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 13 பவுண்டரி 17 இமாலய சிக்சர்கள் உட்பட 66 பந்துகளில் 175* ரன்களைக் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் நின்றார். அன்றைய நாளில் அவரின் ஆட்டத்தை உலகமே திரும்பி பார்த்த நிலையில் பெங்களூரு நிர்ணயித்த 264 ரன்கள் இலக்கை துரத்திய புனே 130 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.

Gayle 1

அந்த போட்டியில் விஸ்வரூபம் எடுத்த கிறிஸ் கெயில் வெறும் 30 பந்துகளில் சதமடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதமடித்த பேட்ஸ்மேன் என்ற சரித்திரத்தை படைத்துள்ளார். அதைவிட ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து உலக சாதனையும் படைத்தார்.

Advertisement