நோ பால் நாயகர்கள் ! ஐபிஎல் வரலாற்றில் அதிக நோ பால்களை வீசிய டாப் 5 பவுலர்கள் இதோ

Bumrah-1
Advertisement

ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் தொடர்களில் பெரும்பாலான நேரங்களில் பவுலர்களை பவுண்டரிகளும் சிக்சர்களுமாக புரட்டி எடுக்கும் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்து வெற்றியைத் தேடித்தர முயற்சிப்பார்கள். மேலும் பவர்பிளே, ஓவருக்கு 2 பவுன்சர் மட்டுமே அனுமதி என ஒருசில அடிப்படை கிரிக்கெட் விதிமுறைகளே பவுலர்களுக்கு எதிராக அமைந்துள்ளதால் முரட்டுத்தனமான பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் ஒவ்வொரு போட்டியிலும் பவுலர்களின் நிலைமை படாத பாடாக இருந்து வருகிறது. இதை அனைத்தையும் தாண்டி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் வகையில் ஒருசில சமயங்களில் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வெள்ளை கோட்டை (க்ரீஸ்) முழுமையாக பயன்படுத்தி பந்துவீச முயற்சிப்பார்கள்.

IPL 2022 (2)

இருப்பினும் அதையே ஒருசில தருணங்களில் கட்டுப்பாட்டை இழந்து வெள்ளைக் கோட்டை தாண்டி வீசி விடுவார்கள். அத்துடன் எதிரணி பேட்ஸ்மேன்கள் பவுண்டரி சிக்சர்களை அடித்தாலும் கூட அந்த பதட்டத்தில் நோ பால் வீசும் நிலையும் ஏற்படும். இறுதியில் அதை நோ பால் என அறிவிக்கும் அம்பயர்கள் அதற்கு தண்டனையாக பிரீ ஹிட் கொடுத்து மீண்டும் அந்த பந்தை வீச சொல்வார்கள். அந்த பந்தில் பேட்ஸ்மேன் அவுட்டானால் கூட ரன் அவுட் தவிர எஞ்சிய வகையான அவுட் இல்லை என்பது பவுலரை பொறுத்தவரை ஒரு கொடுமையாகும்.

- Advertisement -

அதைவிட கொடுமையான தண்டனை என்னவெனில் ஒருசில நேரங்களில் அது போன்ற பந்துகளில் அவுட்டானால் அதிலிருந்து தப்பும் பேட்ஸ்மேன் அதன்பின் சரமாரியாக ரன்களை அடித்து போட்டியை தலைகீழாக மாற்ற வாய்ப்புள்ளது. எனவே நோ பால் என்பது வெற்றியை தலைகீழாக மாற்றக்கூடியது என்ற நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக நோ பால் பந்துகளை வீசிய டாப் 5 பவுலர்களை பற்றி பார்ப்போம்.

5. இஷாந்த் சர்மா: ஆரம்பகாலங்களில் நீண்ட முடியுடன் எதிரணிகளை அச்சுறுத்தும் ஒரு பவுலராக வலம் வந்த இந்தியாவின் இஷாந்த் சர்மா சமீப காலங்களில் சிறப்பாக பந்து வீச தவறியதால் ஐபிஎல் தொடரிலும் இந்திய அணியிலும் இடத்தை இழந்து நிற்கிறார். இருப்பினும் 93 ஐபிஎல் போட்டிகளில் 72 விக்கெட்களை 8.11 என்ற எக்கனாமியில் எடுத்துள்ள அவர் 21 நோ பால்களை வீசி இந்த பட்டியலில் 5-வது இடத்தை பிடிக்கிறார்.

- Advertisement -

4. அமித் மிஸ்ரா: பொதுவாக கிரிக்கெட்டில் சுழல் பந்துவீச்சாளர்கள் நோபால் வீசுவது வெளிப்படையான குற்றமென்று என்று ஜாம்பவான்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் வேகப்பந்து வீச்சாளர்கள் கூட வேகமாக ஓடிவந்து பந்து வீசுவதால் கட்டுப்பாட்டை இழப்பார்கள் என்பதால் ஒரு நியாயம் உள்ளது.

Amith

ஆனால் குறைந்த அளவு தூரமே அதுவும் மெதுவாக ஓடி வந்து பந்துவீசும் சுழல் பந்துவீச்சாளர்கள் நோ-பால் வீசுவதில் எந்த நியாயமும் கிடையாது. அந்த வகையில் இந்தியாவின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 154 போட்டிகளில் 21 நோ பால்களை வீசி இப்பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

3. ஸ்ரீசாந்த்: ஒரு நல்ல திறமை தவறான வழியில் சென்றால் வீணாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கருதப்படும் கேரளாவின் நட்சத்திர வீரர் ஸ்ரீசாந்த் 2007 டி20 உலககோப்பை, 2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய இடம் வகித்தவர்.

Sreesanth

ஐபிஎல் தொடரிலும் அசத்தலாக செயல்பட்டு வந்த அவர் 2013இல் சூதாட்ட புகாரில் சிக்கி தடைபெற்று சமீபத்தில் ஓய்வும் பெற்றார். மொத்தம் 44 ஐபிஎல் போட்டிகளில் 23 நோ பால்களை வீசிய அவர் இந்த பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார். 44 போட்டிகளிலேயே இவ்வளவு நோ பால் என்பது சற்று அதிகம் என்றே கூறலாம்.

- Advertisement -

2. உமேஷ் யாதவ்: இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சமீப காலங்களாக சுமாராக பந்து வீசியதால் ஐபிஎல் தொடரிலும் இந்திய அணியிலும் தனக்கான இடத்தை இழந்தார்.

Umesh Yadav

இருப்பினும் இந்த வருடம் கொல்கத்தா அணியில் மீண்டும் அசத்தலாக பந்து வீசி வரும் அவர் 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை எடுத்து “இன்னும் முடிந்து போகவில்லை” என்று பாராட்டும் அளவுக்கு செயல்பட்டு வருகிறார். இதுவரை 131 போட்டிகளில் 24 நோ பால்களை வீசியுள்ள அவர் இந்தப் பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

1. ஜஸ்ப்ரித் பும்ரா: மும்பை அணிக்காக 2013 முதல் இன்றுவரை அபாரமாக பந்துவீசி அதன் வாயிலாக 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை பவுலராகும் அளவுக்கு உயர்ந்துள்ள ஜஸ்பிரித் பும்ரா சவாலை கொடுக்கும் பேட்ஸ்மேன்களுக்கே சவால் கொடுக்கும் ஒரு புலவராக போற்றப்படுகிறார். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் கடைசி நேரத்தில் சிக்ஸர் அடிக்க துடிக்கும் கடைசி கட்ட ஓவர்களில் துல்லியமாக பந்துவீசும் அவர் பல வெற்றிகளை தனி ஒருவனாக பெற்றுக் கொடுத்துள்ளார். அப்படி துல்லியமும் தரமும் நிறைந்தவராக கருதப்படும் பும்ரா அதே அளவுக்கு அவ்வபோது நோ பால் வீசி சொதப்புபவராகவும் உள்ளார்.

Jasprith Bumrah vs KKR

ஏனெனில் இந்தப் பட்டியலில் மேற்குறிப்பிட்டுள்ள வீரர்களை விட இளம் வீரராக கருதப்படும் அவர் 117 போட்டிகளில் 28 நோ பால்களை வீசி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக நோ பால் பந்துகளை வீசிய பவுலராக மோசமான சாதனை படைத்துள்ளார். குறிப்பாக இந்தியாவுக்காக 2017 சம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பும்ரா வீசிய நோ பாலில் தப்பித்த ஃபக்கர் ஜமான் அதன்பின் சதமடித்தார். அதனால் அந்த சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானுக்கு பும்ரா பரிசளித்ததை ரசிகர்கள் மறக்கவே முடியாது.

Advertisement