ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாத்தில் பெற்ற டாப் 5 பிரம்மாண்ட வெற்றிகள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த டி20 தொடர்களில் பெரும்பாலும் ஒரு போட்டியில் வெற்றியை பெறுவதற்கு இரு அணிகளும் சரிசமமாக முழுத் திறமையை வெளிப்படுத்தி போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்றே கூறலாம். அதிலும் ஒருசில தருணங்களில் வெற்றி என்பது கடைசி ஓவரின் கடைசி பந்து வரை இரு அணிகளுக்கும் சமமாக இருக்கும் என்பதால் முழு திறமையை வெளிப்படுத்தும் அணியே இறுதியில் வெற்றி வாகை சூடுவார்கள். இருப்பினும் எப்போதாவது வெற்றிக்காக பலப்பரிட்சை நடத்தும் இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி மட்டும் தனது அசுர பலத்தால் பேட்டிங்கில் மலைபோன்ற ரன்களைக் குவித்து அதன்பின் தனது அதிரடியான பந்துவீச்சில் எதிரணியை எளிதில் சரணடைய வைத்து மிகப்பெரிய வெற்றியை சுவைக்கும். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் ரன்கள் வித்தியாசத்தில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய 5 வெற்றிகளை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

5. பெங்களூரு: கடந்த 2013 ஐபிஎல் தொடரில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் கிறிஸ் கெயில் என்னும் புயல் சூறாவளியாக வீசியதில் புனே வாரியர்ஸ் அணி மாட்டிக் கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற புனே முதலில் பந்து வீசுவதாக தெரியாத தனமாய் அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பெங்களூருவுக்கு வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் முதல் பந்திலிருந்தே சரவெடி எப்படி வெடிக்குமோ அதேபோன்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் சரமாரியாக வெளுத்து வாங்கினார்.

ஒருகட்டத்தில் சதமடித்த போதிலும் ஓயாத அவர் கடைசி வரை புனேவை வதம் செய்யும் வகையில் 13 பவுண்டரி 17 மெகா சிக்சர் உட்பட 175* (66) ரன்கள் விளாசியதால் 20 ஓவர்களில் பெங்களூரு 263/5 ரன்கள் குவித்தது. அது ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக பதிவு செய்யப்பட்ட நிலையில் அன்றைய நாளில் ருத்ரதாண்டவம் ஆடிய கிரிக்கெட் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர், அதிவேக சதம் அடித்த பேட்ஸ்மேன் போன்ற மிரட்டலான சாதனைகளைப் படைத்தார். அதை தொடர்ந்து 264 ரன்களை சேசிங் செய்த புனே 20 ஓவர்களில் எவ்வளவோ முயற்சித்தும் 133 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு இப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறது.

4. பெங்களூரு: மீண்டும் நானே வருவேன் என்பது போல் 2015-ஆம் ஆண்டு மீண்டும் அதே சின்னசாமி மைதானத்தில் சிக்கிய பஞ்சாப்பை முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு சார்பில் களமிறங்கிய கிறிஸ் கெய்ல் மீண்டும் ஒரு சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 7 பவுண்டரி 12 இமாலய சிக்சர் உட்பட 117 (57) ரன்கள் விளாச 20 ஓவர்களில் அந்த அணி 226/3 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அப்போதே பாதி உடைந்த பஞ்சாப் அதன்பின் சேசிங் செய்கையில் சீட்டுக்கட்டு சரிவது போல மளமளவென விக்கெட்டுகளை பரிசளித்து 13.4 ஓவர்களில் 88 ரன்களுக்கு சுருண்டதால் 138 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை ருசித்த பெங்களூரு இந்தப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

3. கொல்கத்தா: 2008இல் தொடங்கப்பட்ட ஐபிஎல் இன்று இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக வளரும் என்று முதல் போட்டியிலேயே ஒரு அறிகுறியாக சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றின் முதல் ஐபிஎல் போட்டியில் பெங்களூருவைத்து கொல்கத்தா எதிர்கொண்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவுக்கு கேப்டன் சவுரவ் கங்குலி 10 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

ஆனால் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கி தெறிக்கவிட்ட நியூசிலாந்தின் பிரென்டன் மெக்கலம் 10 பவுண்டரி 13 சிக்சர்களை பறக்கவிட்டு 158* (73) ரன்களை விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்ததால் அந்த அணி 222/3 ரன்களை சேர்த்தது. அதை தொடர்ந்து 223 ரன்களை துரத்திய பெங்களூரு அதிரடியான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 82 ரன்களுக்கு சுருண்டதால் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா இந்த பட்டியலில் 3-வது இடத்தை தன்னகத்தே பெற்றுள்ளது.

ABD

2. பெங்களூரு: 2016இல் உருவாக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியை மீண்டும் அதே சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு எதிர்கொண்ட நிலையில் இம்முறை கிறிஸ் கெயில் 6 ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீரர் விராட் கோலியுடன் அடுத்து ஜோடி சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ் பந்தாடினார். இணைந்த கைகளை போல் குஜராத்தை புரட்டி எடுத்த இந்த ஜோடி 229 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனை படைத்த நிலையில் விராட் கோலி 109 (55) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் அடம்பிடித்த ஏபி டிவில்லியர்ஸ் 10 பவுண்டரி 12 சிக்சர் உட்பட 129* (55) ரன்களை விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்ததால் 20 ஓவர்களில் பெங்களூரு 248/3 ரன்கள் சேர்த்தது. அதைத் தொடர்ந்து 249 ரன்களை துரத்திய குஜராத் எதிரணியின் தரமான பந்துவீச்சில் 104 ரன்களுக்கு சுருண்டதால் 144 ரன்கள் வித்தியாசத்திலான மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த பெங்களூரு இந்த பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறது.

mumbai

1. மும்பை: கடந்த 2017 ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பைக்கு லெண்டில் சிமன்ஸ் 66 (43), கைரன் பொல்லார்ட் 63* (35), ஹர்டிக் பாண்டியா 29* (14) போன்ற வீரர்கள் கூட்டு சேர்ந்து டெல்லி பவுலர்களை சரமாரியாக அடித்ததால் 20 ஓவர்களில் அந்த அணி 212/3 ரன்களை எடுத்தது.

இதையும் படிங்க : தனக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்பை அவர் தொடர்ந்து வீணடித்து வருகிறார் – இயான் பிஷப் அதிருப்தி

அதைத்தொடர்ந்து சேசிங் செய்த டெல்லி மும்பையின் அற்புதமான பந்துவீச்சில் வெறும் 66 ரன்களுக்கு சுருண்டதால் 146 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்ற மும்பை ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் ஹர்பஜன் சிங், கரண் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் லசித் மலிங்கா 2 விக்கெட்டுகளும் எடுத்து துருப்பு சீட்டாக செயல்பட்டனர்.

Advertisement