ஐபிஎல் தொடர் வெற்றிகரமான 4-வது வாரத்தை கடந்து பல திரில்லர் திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் முக்கியமான 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்க அனைத்து 10 அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அந்த வகையில் வரலாற்றின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த வருடம் சஞ்சு சாம்சன் தலைமையில் 2-வது முறையாக கோப்பையை முத்தமிடுவதற்கு முழு மூச்சுடன் போராடி வருகிறது.

இந்த வருடம் இதுவரை 8 பங்கேற்றுள்ள 6 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ள அந்த அணி ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் வாயிலாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட அந்த அணி உறுதி செய்துள்ளது.
சுமாரான சஞ்சு சாம்சன்:
அந்த அணிக்கு பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்னா, குல்தீப் சென் போன்றோருடன் சஹால் – அஷ்வின் கூட்டணி எதிரணிகளை மிரட்டும் வகையில் சுழல் பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்தி வெற்றிக்கு பங்காற்றி வருகின்றனர். அதேபோல் ஜோஸ் பட்லர் ரன் மழை பொழிந்து இதுவரை 3 சதங்களை அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்று அந்த அணியின் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக வெற்றிகளுக்கு பங்காற்றி வருகிறார். அவருடன் சிம்ரோன் ஹெட்மையர் போன்ற வீரர்கள் தேவையான ரன்களை அடித்தாலும் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக பெரிய ரன்களை அடிக்காதது அவ்வப்போது பின்னடைவை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக நேற்றைய பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் பட்லர் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் களமிறங்கிய அவர் அதிரடியாக 27 (21) ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை பெற்றாலும் திடீரென அவுட்டானார். நல்ல வேளையாக அந்த போட்டியில் இளம் வீரர் ரியான் பராக் 56* (31) ரன்கள் அடித்த காரணத்தால் தப்பிய ராஜஸ்தான் பின்பு சிறப்பான பந்துவீச்சால் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று முதலிடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டி மட்டுமல்லாது சமீப காலங்களாகவே இதுபோல் அதிரடியான தொடக்கத்தை பெறும் அவர் அதை பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் திடீரென அவுட்டாவது தொடர் கதையாகிறது.
வீணடிக்கிறார்:
பொதுவாகவே சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமை கொண்டவராக கருதப்படும் சஞ்சு சாம்சன் கடந்த பல வருடங்களாகவே இதுபோல் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் அதை பெரிய ரன்களாக மாற்றத் தெரியாமல் தவித்து வருகிறார். இடையிடையே ஒருசில போட்டிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் கால் தடம் பதிக்கும் அவர் அங்கு கிடைக்கும் ஒருசில வாய்ப்புகளிலும் கச்சிதமாய் பயன்படுத்தாமல் சொதப்புவதால் சுமார் 10 வருடங்களாக அவ்வப்போது இந்திய அணிக்குள் சென்றாலும் நிலையான நிரந்தர இடத்தை பிடிக்க முடியாமல் வெளியே வந்துவிடுகிறார்.

இந்நிலையில் இதுபோல் தொடர்ச்சியாக சுமாராக செயல்பட்டால் எப்படி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைக்க முடியும் என்று அவர் மீது முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் இயான் பிஷப் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “நான் சாம்சனின் ரசிகன். ஆனால் கடந்த பல வருடங்களாக அவர் தனது நல்ல பார்மை தவறான ஷாட் அடித்து வீணடித்து வருகிறார்.
ஒரு அணியை தலைமை தாங்கும் போது பட்லர் ரன்கள் அடிக்காத போது தம்மிடம் உள்ள நல்ல பார்மையும் நல்ல வாய்ப்புகளையும் தவறவிடும் அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்ப செல்லும் வாய்ப்பை கோட்டை விட்டு வருகிறார்” என்று கூறினார்.

ஹஸரங்கா மகுடி:
அதிலும் பெங்களூருவுக்காக விளையாடும் இலங்கை பவுலர் ஹசரங்காவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 18 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் நேற்று உட்பட 5 முறை அவுட்டாகி அவரது மகுடிக்கு பெட்டிப் பாம்பாக அடங்குவது தொடர்கதையாகிறது. இது பற்றி இயன் பிஷப் கூறியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சன் எப்போதும் பார்ம் அவுட் கிடையாது. ஹசாரங்காவை பற்றி அவர் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் லாவகமாக சாம்சனை அவுட் செய்து விடுகிறார்” என்று கூறினார்.
இதையும் படிங்க : பாதி சம்பளத்தை ரிட்டர்ன் பண்ணிட்டு இப்போவே வெளியேறுங்க – ஃபார்ம் அவுட் கோலிக்கு ஜாம்பவானின் அட்வைஸ்
அதேபோல் சஞ்சு சாம்சனின் இது மாதிரியான ஆட்டத்தை பற்றி நியூசிலாந்தின் ஜாம்பவான் டேனியல் வெட்டோரி பேசியது பின்வருமாறு. “எப்போதுமே புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து புத்தகத்தில் இருக்கும் அனைத்து ஷாட்களையும் அடிக்க அவர் முயற்சிக்கிறார். அவர் சிறப்பாக விளையாடும்போது பார்த்தால் அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் எளிதாக காட்சியளிக்கும் தருணத்தில் திடீரென அவர் அவுட்டாகி விடுகிறார்” என்று பேசினார்.



