விடைபெற்ற ராபின் உத்தப்பா – இந்தியாவுக்காக வெளிப்படுத்திய 5 அற்புதமான செயல்பாடுகளின் பட்டியல்

Robin Uthappa
- Advertisement -

கர்நாடகாவைச் சேர்ந்த நட்சத்திர இந்திய வீரர் ராபின் உத்தப்பா அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். கடந்த 2006இல் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 2007இல் இந்தியா வென்ற முதல் டி20 உலகக் கோப்பையின் வெற்றிக்கு பேட்டிங் துறையில் முக்கிய பங்காற்றினார். ஆரம்ப காலங்களில் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேனாக தன்னை அடையாளப்படுத்திய இவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறியதால் இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வந்த அவர் 2014இல் ஆரஞ்சு தொப்பியை வென்று கொல்கத்தா 2ஆவது கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அதனால் 2014இல் இந்திய அணியில் கம்பேக் கொடுத்த இவர் அந்த வாய்ப்பை தக்க வைக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட தவறியதால் 2015க்குப்பின் மொத்தமாக வெளியேறினார். ஆனாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வந்த இவர் கடந்த 2021இல் சென்னை 4வது கோப்பையை வெல்வதற்கு பிளே ஆஃப் மற்றும் பைனலில் முக்கியமான ரன்களை சேர்த்து 2022 ஐபிஎல் தொடரிலும் விளையாடியிருந்த நிலையில் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்காக 46 ஒருநாள் போட்டிகளில் 934 ரன்களையும் 12 டி20 போட்டிகளில் 249 ரன்களையும் எடுத்த அவருடைய சிறப்பான செயல்பாடுகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. அறிமுகமே அமர்க்களம்: கடந்த 2006இல் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தூரில் நடைபெற்ற கடைசி போட்டியில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற உத்தப்பா 288 ரன்களை துரத்தும் போது கேப்டன் ராகுல் டிராவிட் உடன் தொடக்க வீரராக களமிறங்கி 86 (96) ரன்களை விளாசி அறிமுக போட்டியிலேயே வெற்றி பெற உதவினார்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக அன்றைய நாளில் அவர் படைத்திருந்த சாதனையை 10 வருடங்கள் கழித்து ஜிம்பாப்வேவுக்கு எதிராக சதமடித்து கேஎல் ராகுல் உடைத்தார்.

- Advertisement -

4. அதிரடி நடை: பொதுவாக அனைத்து பேட்ஸ்மேன்களும் சுழல்பந்து வீச்சாளர்களை தான் இறங்கி வந்து அடிப்பார்கள். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நடந்து சென்று அடிப்பதை இவர் தன்னுடைய டிரேட் மார்க் ஷாட்டாக வைத்திருந்தார்.

குறிப்பாக கடந்த 2007 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மிட்சேல் ஜான்சன் வீசிய ஓவரின் ஒரு பந்தில் அசால்ட்டாக இறங்கி வந்து பறக்கவிட்ட மெகா சிக்ஸரை யாராலும் மறக்க முடியாது. அப்போட்டியில் யுவராஜ் சிங் விளாசிய 70 (30) ரன்களும் இவர் அடித்த 34 ரன்களும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

- Advertisement -

3. சூப்பர் பினிஷ்: கடந்த 2007இல் இங்கிலாந்துக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற 6வது ஒருநாள் போட்டியில் 317 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ரன் குவிப்பையும் தாண்டி கடைசி 58 பந்துகளில் 83 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனியுடன் இணைந்து 60 ரன்கள் அதிரடியான பார்ட்னர்ஷிப் அமைத்த உத்தப்பா வெற்றி நோக்கி அழைத்து வந்தார்.

ஆனால் முக்கிய நேரத்தில் தோனி அவுட்டான நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் உத்தப்பா 2 ரன்கள் எடுக்க 2வது பந்தில் ஜாஹீர் கான் ரன் அவுட்டானார். அதனால் பரபரப்பு ஏற்பட்ட போது யாருமே எதிர்பாராத வகையில் ஸ்கூப் ஷாட் அடித்த அவர் அடுத்த பந்திலேயே தனது ஸ்டைலில் நடந்து சென்று மிட் விக்கெட் திசையில் பவுண்டரி அடித்து 47* (33) ரன்களை விளாசி இந்தியாவுக்கு 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

2. சென்னையின் ஒருநாள்: கடந்த 2007இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் அதிரடியாக களமிறங்கி 41 பந்துகளில் 70 ரன்கள் குவித்து உத்தப்பா ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் இந்தியா எடுத்த 95/2 ரன்களில் அவர் மட்டும் 70 ரன்களை விளாசினார் என்பது அவருடைய பேட்டிங் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். அப்போட்டியில் இந்தியா தோற்றாலும் 2007 டி20 உலகக் கோப்பையில் அவர் தேர்வாவதற்கு அந்த இன்னிங்ஸ் தான் முக்கிய காரணமாக அமைந்தது.

1. பவுல் அவுட்: கடந்த 2007இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கம்பீர் 0, சேவாக் 5 என தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த போது களமிறங்கிய உத்தப்பா 4 பவுண்டரி 2 சிக்சருடன் 50 ரன்கள் குவித்து 141/9 ரன்கள் எடுக்க உதவினார். அதை துரத்திய பாகிஸ்தானும் 141/7 ரன்கள் எடுத்ததால் டையில் முடிந்த அப்போட்டியின் வெற்றியாளர்களை தீர்மானிக்க வரலாற்றில் முதலும் கடைசியுமாக பவுல் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.

அதில் சாகித் அப்ரிடி, உமர் குல் போன்ற பாகிஸ்தான் பவுலர்கள் ஸ்டம்ப்பை அடிக்க தவறி நிலையில் பகுதிநேர பந்து வீச்சாளரான உத்தப்பா, ஹர்பஜன் சிங், சேவாக் ஆகியோரை போலவே ஸ்டம்ப்பை அடித்து தொப்பியை கழற்றி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதை யாராலும் மறக்க முடியாது.

Advertisement