ஐபிஎல் கிரிக்கெட்டில் மிஸ்டர் ஐபிஎல் சுரேஷ் ரெய்னாவின் சிறந்த 5 இன்னிங்ஸ்களின் பட்டியல்

- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2005 முதல் 2018 வரை சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இந்தியாவுக்காக நிறைய சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலக கோப்பையை வெல்வதற்கு துருப்புச் சீட்டாக செயல்பட்ட இவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர். அதேபோல் ஐபிஎல் தொடரில் ஆரம்ப காலங்களிலிருந்தே எதிரணி பவுலர்களை சரவெடியாக எதிர்கொண்ட இவர் 5000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஒரு கட்டத்தில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக ஜொலித்தார்.

அதனால் வல்லுனர்கள் இவரை மிஸ்டர் ஐபிஎல் என்று போற்றும் நிலையில் இதுவரை சென்னை வாங்கிய 4 கோப்பைகளிலும் இவரின் பங்கு அளப்பரியதாகும். அதேபோல் இவர் இல்லாமல் அந்த அணி இதுவரை ப்ளே ஆப் சுற்றுக்கு சென்றதில்லை. அந்தளவுக்கு சென்னை மற்றும் ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த முக்கிய வீரராக இருந்த இவர் லெஜெண்ட்ஸ் மற்றும் வெளிநாட்டு டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனிமேல் அவரை ஐபிஎல் தொடரில் பார்க்க முடியாது என்ற நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் அவருடைய சிறந்த 5 ஐபிஎல் இன்னிங்ஸ் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. குவாலிபயர் கிங்: கடந்த 2011இல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் அசத்தி பிளே-ஆப் சுற்றுக்கு வந்த சென்னை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பெங்களூருவுக்கு எதிரான முதல் குவாலிபயரில் களமிறங்கியது. அதில் அந்த அணி நிர்ணயித்த 176 ரன்களை துரத்திய சென்னைக்கு மைக் ஹசி 0, முரளி விஜய் 5 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

ஆனால் 3வது இடத்தில் களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் சொல்லி அடித்த ரெய்னா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 73* (50) ரன்கள் குவித்து 19.4 ஓவரில் 177/4 ரன்களை எடுக்க வைத்து ஆட்டநாயகன் விருதுடன் சென்னையை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

4. பைனல் நாயகன்: கிரிக்கெட்டில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் கூட அரையிறுதி, இறுதிப் போன்ற நாக்-அவுட் போட்டிகளில் திணறுவார்கள். ஆனால் நாக்-அவுட் சுற்றில் கொஞ்சமும் பதற்றமின்றி செயல்படும் தனித்திறமை பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா கடந்த 2010இல் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு இதர பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போதிலும் அதிகபட்சமாக 3 பவுண்டரி 3 சிக்சருடன் 57* (35) ரன்கள் குவித்து 20 ஓவர்களில் 168/5 ரன்களை எடுக்க உதவினார்.

அதை துரத்திய மும்பைக்கு சச்சின் டெண்டுல்கர் 48 (45) தவிர எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு பந்து வீச்சிலும் 1 விக்கெட் எடுத்து முக்கிய பங்காற்றி ரெய்னா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

3. முதல் சதம்: கடந்த 2013இல் சென்னையில் நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு சஹா 18, ஹசி 35 என தொடக்க வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டான நிலையில் 3வது இடத்தில் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா வழக்கம்போல அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி கடைசி வரை அவுட்டாகாமல் 7 பவுண்டரி 6 சிக்சர்களுடன் முதல் முறையாக சதமடித்து 100* (53) ரன்கள் குவித்தார்.

அதனால் சென்னை நிர்ணயித்த 187 ரன்களை துரத்திய பஞ்சாப் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் தனது முதல் மற்றும் ஒரே ஐபிஎல் சதம் வெற்றிக்கு உதவியதன் பயனாக ரெய்னா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

2. பதற்றமான 98: கடந்த 2009இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் செஞ்சூரியனில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு பார்திவ் படேல் 3, மேத்தியூ ஹெய்டன் 1 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் சென்ற நிலையில் களமிறங்கிய ரெய்னா 10 பவுண்டரி 5 சிக்சருடன் வெளுத்து வாங்கினாலும் சதத்தை நழுவ விட்டு 98 (55) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் அவரது அதிரடியால் 164/5 ரன்கள் குவித்த சென்னை இறுதியில் ராஜஸ்தானை 126 ரன்களுக்கு சுருட்டி 38 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அப்போட்டியில் 98 ரன்கள், 1 விக்கெட், 2 கேட்ச் என ஆல்-ரவுண்டராக செயல்பட்ட ரெய்னாவுக்கு ஆட்டநாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது.

1. மாஸ் இன்னிங்ஸ்: 2014இல் பஞ்சாப்புக்கு எதிராக நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 227 ரன்களை துரத்திய சென்னைக்கு டுப்லஸ்ஸிஸ் 1 ரன்னில் அவுட்டானதும் களமிறங்கி எரிமலையாக வெடித்த ரெய்னா பவர் பிளே ஓவர்களில் பஞ்சாப் பவுலர்களை கதற கதற அடித்து வெறும் 6 ஓவரில் 100 ரன்களை எட்ட வைத்து அபார தொடக்கம் கொடுத்தார்.

குறிப்பாக வெறும் 25 பந்துகளில் 12 பவுண்டரி 6 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 348.00 என்ற வரலாற்றின் உச்சபட்ச ஸ்டிரைக் ரேட்டில் பந்தாடி துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். அவருக்கு பின் வந்த பேட்ஸ்மேன்கள் அந்த தொடக்கத்தை வீணடிக்கும் வகையில் நடந்து கொண்டதால் 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்றாலும் வரலாற்றில் காலத்துக்கும் மறக்க முடியாத மாஸ் இன்னிங்ஸ்ஸை அன்றைய நாளில் ரெய்னா பதிவு செய்தார்.

Advertisement