டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸ்சில் பவுண்டரிகளால் அதிக ரன்கள் தெறிக்கவிட்ட டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

Sehwag
- Advertisement -

கிரிக்கெட்டில் இருக்கும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளே அதில் விளையாடும் வீரர்களின் மன தைரியத்தையும் திறமையையும் பக்குவத்தையும் சோதிக்கும் உண்மையான போட்டியாகும். அதிலும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிப்பதற்கு முன்பாக பிட்ச் எப்படி உள்ளது, கால சூழ்நிலைகள் எவ்வாறு உள்ளது, எதிரணியின் பவுலர்கள் எவ்வாறு பந்து வீசுகிறார்கள் என்பதையெல்லாம் கணிக்க அவசரப்படாமல் நிதானத்துடன் பொறுமையாக நிறைய பந்துகளை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இருப்பினும் அதிலும் 2 வகையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். முதலில் கிரிக்கெட்டின் அடிப்படை இலக்கணத்தை பின்பற்றும் நல்ல மாணவர்களுக்கு அடையாளமாய் ராகுல் டிராவிட் போன்றவர்கள் பொறுமையின் சிகரமாய் அதிக பந்துகளை எதிர்கொண்டு சிங்கிள், டபுள் போன்ற ரன்களை அதிகமாகவும் பவுண்டரிகளை குறைவாகவும் அடித்து பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார்கள். ஆனால் கிறிஸ் கெயில் போன்ற சில பேட்ஸ்மேன்கள் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சிங்கிள், டபுள் போன்ற ரன்களுக்கு அவசரமும் அவசியமும் கிடையாது என்பதாலும் ஓடுவதற்கு சோம்பேரித்தனமாக இருந்துகொண்டு பவுண்டரிகளை சரவெடியாக பறக்கவிட்டு அதிக ரன்களைக் குவிப்பார்கள்.

- Advertisement -

பவுண்டரி நாயகர்கள்:
மேலும் சதமடித்தும் ஓயாமல் இரட்டை சதம் முச்சதம் போன்ற பெரிய இன்னிங்ஸ் பேட்டிங் செய்தாலும் சில பேட்ஸ்மேன்கள் தாமாகவே அதிக பவுண்டரிகளின் வாயிலாக ரன்களை சேர்ப்பார்கள். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பவுண்டரிகளின் வாயிலாக மட்டுமே ஒரு இன்னிங்ஸ்சில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்களைப் பற்றி பார்ப்போம்:

5. விவிஎஸ் லக்ஷ்மண் 176: இந்த இன்னிங்ஸ் பற்றி பெரிய அறிமுகம் ரசிகர்களுக்கு தேவையில்லை என்றாலும் கடந்த 2001இல் அப்போதைய வலுவான ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா வென்றே தீரவேண்டும் என்ற 2-வது போட்டியில் கொல்கத்தாவில் களமிறங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் குவித்து பின்னர் பந்துவீச்சில் அசத்திய ஆஸ்திரேலியாவின் தரமான பந்துவீச்சில் தனது முதல் இன்னிங்சில் இந்தியா 171 ரன்களுக்குள் சுருண்டது.

- Advertisement -

அதனால் பாலோ-ஆன் பெற்ற இந்தியாவுக்கு 2-வது இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் தோல்வியும் உறுதியான வேளையில் ஜோடி சேர்ந்த விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஒருநாள் முழுக்க அதே ஆஸ்திரேலிய பவுலர்களை போதுமென சொல்லும் அளவுக்கு அடித்து 376 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்ததால் 657/7 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

பின்னர் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் 171 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை சுவைத்த இந்தியா 3-வது போட்டியிலும் வென்று தொடரை வென்று சாதனை படைத்தது. வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்சில் விளையாடிய லக்ஷ்மன் குவித்த 281 ரன்களில் 176 ரன்களை அதாவது 62.6% ரன்களை 44 பவுண்டரிகளின் வாயிலாக மட்டுமே சேர்த்து இப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

4. பிரியன் லாரா 180: வெஸ்ட் இண்டீசின் மகத்தான பேட்ஸ்மேனாக போற்றப்படும் இவர் தனது ஆரம்ப காலமான 1994இல் ஆன்டிகுவாவில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 12/2 என தனது அணி தடுமாறியபோது களமிறங்கி ஒருநாள் முழுக்க நங்கூரத்தை போட்டு எதிரணி பவுலர்களை வெச்சு செய்தார். 2-வது நாளிலும் இங்கிலாந்து பவுலர்களை போதும் என்று சொல்லும் அளவுக்கு தெறிக்கவிட்டு இரட்டை சதத்தை கடந்த அவர் முச்சதத்தையும் கடந்து 375 ரன்களை விளாசி அப்போதே உலக சாதனை படைத்தார்.

இறுதியில் அப்போட்டி டிராவில் முடிந்தாலும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்சில் 48.00% ரன்களை அதாவது 180 ரன்களை 45 பவுண்டரிகளால் சேர்த்த அவர் இப்பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

3. டான் ப்ராட்மேன் 184: உலகின் முதல் ரன் மெஷின் என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் கடந்த 1930இல் இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடந்த 3-வது ஆஷஸ் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தனது அணிக்கு வரலாற்றின் மிகச் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி 334 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதனால் 566 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா இறுதியில் அப்போட்டியை டிரா செய்தது. அன்றைய நாளில் 46 பவுண்டரிகளுடன் 55.1% ரன்களை அதாவது 184 ரன்களை பவுண்டரிகளின் வாயிலாகவே குவித்த அவர் காலம் கடந்தும் இப்பட்டியலில் காவியனாக 3-வது இடம் பிடிக்கிறார்.

2. வீரேந்திர சேவாக் 194: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி எனும் வார்த்தையை அறிமுகப்படுத்தி உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் தெறிக்க விட்ட இந்தியாவின் நட்சத்திர தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் வரலாற்றில் முச்சதத்தை அடித்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்தியராக சாதனை படைத்துள்ளார். அவரின் பல மகத்தான இன்னிங்ஸ்களில் ஒன்றாக கடந்த 2006இல் லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 679/7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அதன்பின் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு நாங்களும் சளைத்தவரல்ல என்பதை காட்டுவதற்காக தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் 410 ரன்கள் வரலாற்று ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியை டிரா செய்தனர்.

அதில் வழக்கம்போல டிராவிட் பொறுமையின் சிகரமாக 128* (233) ரன்கள் எடுக்க மறுபுறம் அந்தக்காலத்திலேயே டி20 இன்னிங்ஸ் விளையாடிய சேவாக் 254 (257) ரன்களை 102.83 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்க விட்டார். அதிலும் 47 பவுண்டரி மற்றும் 1 சிக்சருடன் 194 ரன்களை அதாவது 74.0% ரன்களை பவுண்டரிகளின் வாயிலாக மட்டுமே எடுத்த அவர் இப்பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார். வரலாற்றில் வேறு எந்த பேட்ஸ்மேனும் 70% ரன்களைக் கூட இப்படி பவுண்டரிகளால் எடுத்தது கிடையாது.

1. ஜான் எட்ரிச் 290: கடந்த 1965இல் நியூசிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்துக்கு தொடக்க வீரராக களமிறங்கிய அந்த அணியின் அந்த காலத்து நட்சத்திரம் ஜான் எட்ரிச் முச்சதம் விளாசி 310* (450) ரன்கள் குவித்தார். அதனால் 546/4 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து பின்னர் இன்னிங்ஸ் மற்றும் 187 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அபோட்டியில் 52 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் உட்பட 67.1% ரன்களை அதாவது 290 ரன்களை பவுண்டரிகளின் வாயிலாக மட்டுமே குவித்த அவர் இந்த வரலாற்று பட்டியலில் இன்றும் முதலிடம் பிடிக்கிறார்.

Advertisement