டி20 உலக கோப்பையில் அதிவேகமாக சதமடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல் – லிஸ்ட் உள்ளே

Gayle
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியுள்ளது. என்னதான் ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் வந்தாலும் நாட்டுக்காக கோப்பையை வென்று கௌரவத்தை சேர்ப்பதற்கு கிடைத்துள்ள இந்த பொன்னான வாய்ப்பில் அனைத்து வீரர்களும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி போராடுவார்கள் என்பதாலேயே உலக கோப்பைக்கு எப்போதுமே தனித்துவமான தரமுள்ளது. குறிப்பாக சாதாரண டி20 தொடர்களிலேயே பவுலர்களை பந்தாடும் பேட்ஸ்மேன்கள் உலகக் கோப்பையில் கொஞ்சமும் கருணை காட்டாமல் வாய்ப்பு கிடைத்தால் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்க விடுவதற்கும் தயங்காத எண்ணத்துடன் களமிறங்குவார்கள்.

பொதுவாக டி20 கிரிக்கெட்டில் 10 ரன்களாக இருந்தாலும் அதை எந்தளவுக்கு வேகமாக அடிக்கிறோமோ அந்தளவுக்கு வெற்றிகளில் பங்காற்ற முடியும். அந்த வகையில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சதமடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் டி20 கிரிக்கெட்டில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சதமடிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்திலிருந்தே அதிரடியை துவக்க நினைப்பார்கள்.

- Advertisement -

எக்ஸ்பிரஸ் வேகம்:
ஆனால் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் அதற்கு தடையாக இருப்பார்கள் என்பதால் அனைத்து போட்டிகளிலும் அனைவராலும் அதிவேகமாக சதமடிக்க முடிவதில்லை. அதனாலேயே வரலாற்றில் இதுவரை நடைபெற்றுள்ள 7 டி20 உலக கோப்பைகளில் வெறும் 8 பேட்ஸ்மேன்கள் மட்டுமே சதமடித்துள்ளனர். அப்படி உலக கோப்பையில் சாதாரணமாக சதமடிப்பதே கடினமாக பார்க்கப்படும் நிலையில் பவுலர்களை சரமாரியாக அடித்து அதிவேகமாக சதமடித்த டாப் 5 வீரர்களை பற்றி பார்ப்போம்:

5. சுரேஷ் ரெய்னா 59: இந்தியாவின் ஸ்டைலிஸ் இடது கை பேட்ஸ்மேனான இவர் கடந்த 2010இல் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் க்ராஸ் ஐஸ்லெட் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் தினேஷ் கார்த்திக் 16, முரளி விஜய் 0 என தொடக்க வீரர்கள் ஏமாற்றி நிலையில் 3வது இடத்தில் களமிறங்கி அட்டகாசமாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

போட்டியின் 3வது பந்திலேயே களமிறங்கிய அவர் 9 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 101 (60) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் 186/5 ரன்கள் குவித்த இந்தியா பின்னர் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் 59 பந்துகளில் சதமடித்த அவர் டி20 உலக கோப்பையில் அதிவேகமாக சதமடித்த இந்திய கிரிக்கெட் வீரராக சாதனை படைத்துள்ளார்.

4. அஹமத் சேசாத் 58: கடந்த 2014இல் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மிர்பூரில் வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் வெச்சு செய்த இவர் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் 10 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 111* (62) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அவரது அதிரடியால் 190/5 ரன்கள் குவித்த பாகிஸ்தான் பின்னர் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் 58 பந்துகளில் சதமடித்த அவர் டி20 உலக கோப்பையில் அதிவேகமாக சதமடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையுடன் இப்பட்டியலில் 4வது இடம் பிடிக்கிறார்.

3. பிரண்டன் மெக்கல்லம் 51: இலங்கையில் நடைபெற்ற 2012 உலக கோப்பையில் பல்லகேலே நகரில் வங்கதேச பவுலர்களை 3வது இடத்தில் களமிறங்கி சரமாரியாக அடித்து துவைத்த இவர் 11 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 123 (56) ரன்களை விளாசி டி20 உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தார்.

- Advertisement -

அதனால் இறுதியில் நியூசிலாந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்ற நிலையில் 51 பந்துகளிலேயே சதமடித்த அவர் உலக கோப்பையில் அதிவேகமாக சதமடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையுடன் இப்பட்டியலில் 3ஆம் இடம் பிடிக்கிறார்.

2. கிறிஸ் கெயில் 50: கடந்த 2007இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் பதம் பார்த்த இவர் 7 பவுண்டரியும் 10 மெகா சிக்சர்களையும் பறக்கவிட்டு சதமடித்து 117 (57) ரன்கள் குவித்தார். குறிப்பாக 50 பந்துகளில் சதமடித்த அவர் முதல் போட்டியிலேயே சாதனை படைத்த போதிலும் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 206 ரன்களை வெற்றிகரமாக எட்டிப் பிடித்து தென்னாப்பிரிக்கா வென்றது.

1. கிறிஸ் கெயில் 48: கடந்த 2016இல் இந்திய மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பையில் வான்கடே மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 182/6 ரன்களை குவித்தது.

அதை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கி சூறாவளியாக சுழன்றடித்த இவர் 48 பந்துகளில் 5 பவுண்டரி 11 மெகா சிக்ஸர்களை பறக்க விட்டு 100* ரன்களை விளாசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த பேட்ஸ்மென் என்ற தன்னுடைய சொந்த சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். அவரது அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement