வரலாற்றில் அதிமுறை ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த டாப் 4 மகத்தான பேட்ஸ்மேன்களின் பட்டியல்

- Advertisement -

கிரிக்கெட்டில் என்னதான் ஒருநாள் மற்றும் டி20 போன்ற வெள்ளை பந்து போட்டிகள் வந்து அதில் பேட்ஸ்மேன்கள் அதிரடி சரவெடியாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு ரன்களை பறக்கவிட்டாலும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உண்டான மவுசு என்றுமே குறைவதில்லை. ஏனெனில் 5 நாட்கள் நடைபெற்றாலும் முடிவு கிடைக்குமா என்பது தெரியாத நிலையில் வெற்றிக்காக தொடர்ந்து 5 நாட்களும் சிறப்பாக விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். அதில் கடைசி நாளில் கடைசி மணி நேரத்தில் தடுமாறினால் கூட வெற்றி எதிரணிக்கு சென்றுவிடும்.

வெற்றிக்காக அந்த அளவுக்கு முழு மூச்சை கொடுத்து முழு திறமையை வெளிப்படுத்தி 5 நாட்கள் விளையாடிய வேண்டிய டெஸ்ட் போட்டிதான் ஒரு வீரரின் உண்மையான திறமையையும், மதிப்பையும், மன தைரியத்தையும் முழுமையாக சோதிக்கும் கிரிக்கெட்டாகும். அதுவும் இன்றைய நவீன டி20 கிரிக்கெட்டின் வருகையால் இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் 50 பந்துகளில் 100 ரன்களை அடிப்பது சர்வசாதாரணமாகி விட்டது.

- Advertisement -

ஆனால் 5 நாட்களிலும் வெவ்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஸ்பெஷலான சிவப்பு நிற பந்துகளில் ஸ்விங், வேகம், பவுன்ஸ், ஸ்பின் என ஒவ்வொரு நாளிலும் வித்தியாசமான சவால் காத்திருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான எதிரணி பவுலர்களை எதிர்கொண்டு பெரிய அளவில் ரன்களை குவித்து நாட்டுக்கு வெற்றியை தேடித்தருபவரே உண்மையான பேட்ஸ்மேன் ஆவார்.

மகத்தான 4 பேட்ஸ்மேன்கள்:
அதனாலேயே டெஸ்ட் என்றழைக்கப்படும் அந்த வகையான போட்டிகள் பெரும்பாலும் 2, 3, 4, 5 என ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகள் கொண்ட தொடர்களாக அந்த காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது. எனவே அதில் வெற்றி பெறுவதற்கு ஒரு போட்டியில் மட்டும் சிறப்பாக செயல்படாமல் அந்த தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக செயல்பட்டால் தான் வெற்றியை சுவைக்க முடியும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த டாப் 4 ஜாம்பவான்களை பற்றி பார்ப்போம் (குறைந்தது 3 அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்களை அடிப்படையாக கொண்ட புள்ளிவிவரம்):

- Advertisement -

4. ஜாவேத் மியாண்டட் 7: 80 மற்றும் 90களில் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனாக வலம் வந்த இவர் 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8832 ரன்களை 52.57 என்ற சிறப்பான சராசரியில் குவித்து பாகிஸ்தானுக்காக அந்த காலத்தில் நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர்.

பாகிஸ்தானுக்காக இவர் விளையாடிய 33 டெஸ்ட் தொடர்களில் 7 தொடரில் அதிக ரன்கள் குவித்து பாகிஸ்தானின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். வரலாற்றில் வேறு எந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேனும் 7 தொடர்களில் அதிக ரன்களைக் குவித்ததில்லை.

- Advertisement -

3. கென் பேரிங்க்டன் 7: 1950களில் இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடிய இவர் 82 போட்டிகளில் 6806 ரன்களை 58.67 என்ற சூப்பரான சராசரியில் குவித்து அந்த காலத்து நம்பிக்கை நாயகனாக வலம் வந்தார். 20 சதங்கள் 35 அரை சதங்களையும் அடித்துள்ள இவர் தாம் விளையாடிய காலகட்டத்தில் இங்கிலாந்துக்காக 17 டெஸ்ட் தொடர்களில் களமிறங்கியுள்ளார்.

அதில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட தொடர்களில் அதாவது 7 தொடர்களில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக முதலிடம் பிடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். சமீப காலங்களில் அலஸ்டேர் குக் போன்ற இங்கிலாந்து வீரர்கள் 10000 ரன்களை அடித்த போதிலும் இவரின் பெயர் இன்னும் நின்று பேசுவதே இவரின் தரத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

- Advertisement -

2. சுனில் கவாஸ்கர் 8: 80களில் உலக கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த இவர் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முதல் மாஸ்டர் பிளாஸ்டர் என்று கூறலாம். ஏனெனில் ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங் போன்ற கொஞ்சம் தவறு செய்தால் சோளியை முடிக்கும் அந்த காலத்து வெறித்தனமான பவுலர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான இவர் அந்த சமயத்தில் இருந்த அத்தனை உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் ஹெல்மெட் போடாமலேயே வெளுத்து வாங்கி வரலாற்றில் 10000 ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தவர்.

ஆரம்ப காலத்தில் இந்திய கிரிக்கெட்டை மிகவும் புகழ்படுத்திய சிலரில் முக்கியவரான இவர் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 தொடர்களில் விளையாடியுள்ளார். அதில் 8 தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக அசத்தியுள்ளார். இவருக்குப்பின் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் வந்த போதிலும் இவரின் இன்றும் பெயரும் நின்று பேசுவது அவரின் தரத்திற்கு சான்றாகும்.

1. ரிக்கி பாண்டிங் 9: 21-ஆம் நூற்றாண்டின் மகத்தான பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராக போற்றப்படும் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தனது கேப்டன்ஷிப் திறமைக்கு நிகராக பேட்டிங்கிலும் ஏராளமான ரன்களை குவித்து அந்த அணிக்கு பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர்.

உலக கோப்பைகள், டெஸ்ட் கிரிக்கெட்டில் மெகா வெற்றிகள், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10,000+ ரன்கள் என ஏராளமான பெருமைகளுக்கு சொந்தக்காரரான இவர் தாம் விளையாடிய காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 39 டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளார். அதில் உலகிலேயே அதிகபட்சமாக 9 தொடர்களில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக முதலிடம் பிடித்து இப்பட்டியலில் முதலிடம் பிடிக்கிறார்.

Advertisement