ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த – டாப் 4 சரவெடி பேட்ஸ்மேன்கள்

rainashot
Advertisement

ஐபிஎல் தொடரில் பெரும்பாலான தருணங்களில் கொஞ்சம் கூட கருணை காட்டாமல் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் என்ற பறக்கவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பவுலர்களின் முகம் பார்க்காமல் மிரட்டலான பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவதிலேயே குறியாக இருப்பார்கள். அதன் காரணமாகவே ஒவ்வொரு போட்டியிலும் பந்து வீச்சாளர்களின் நிலைமை படாத பாடாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அடிப்படை கிரிக்கெட் விதிமுறையிலேயே உள்ள ஒரு ரூல்ஸ் என்றால் அதுதான் பவர் பிளேயாகும்.

gayle

முதல் 6 ஓவர்களில் 2 பீல்டர்களை மட்டும் உள்வட்டத்திற்கு வெளியே நிறுத்தி பந்துவீச்சாளர்களை பந்தாடுங்கள் என்ற வகையில் ரசிகர்களை மகிழ்வித்து தங்களது அணிக்கு நல்ல தொடக்கத்தை பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் வகையிலேயே இந்த பவர்பிளே உருவாக்கப்பட்டுள்ளது. இதை எதிர் கொள்வதற்காகவே ஸ்பெஷலாக களமிறங்கும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்தி அதிரடியாக ரன்களை விளாசினால் அதுவே நல்ல தொடக்கத்தை கொடுத்து 200க்கும் மேற்பட்ட ரன்களை குவிக்க நல்ல அடித்தளமாக அமைந்து வெற்றியின் முதல் படியாகவும் அமையும்.

- Advertisement -

அதிலும் சேசிங் செய்யும்போது 200க்கும் மேற்ப்பட்ட ரன்களை துரத்தும் பட்சத்தில் இந்த பவர்பிளே ஓவர்களில் தொடக்க வீரர்கள் அதிரடியாக ரன்களை பறக்க விட வேண்டியது வெற்றிக்கு அவசியமாகும். அந்த அளவுக்கு பயனை கொடுக்கவல்ல பவர்ப்ளே ஓவர்களில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள்களை விளாசிய டாப் 4 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்:

warner 1

4. டேவிட் வார்னர் 62: ஐபிஎல் 2017 ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த 37-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். அதில் பவர்பிளே முடிவில் ஷிகர் தவான் வெறும் 13 ரன்கள் எடுக்க மறுபுறம் அனலாக பேட்டிங் செய்த டேவிட் வார்னர் கொல்கத்தா பவுலர்களை புரட்டி எடுத்து 25 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

அதோடு நிற்காமல் முதல் விக்கெட்டுக்கு மொத்தமாக 139 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் சதமடித்து 126 (59) ரன்கள் எடுக்க ஹைதராபாத் 20 ஓவர்களில் 209/3 ரன்கள் சேர்த்து பின்னர் 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ishan
ishan MI

3. இஷான் கிசான் 63: கடந்த 2021 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிராக அபுதாபியில் நடைபெற்ற 55-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பைக்கு தொடக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்களில் அவுட்டானாலும் அவருடன் களமிறங்கிய இஷான் கிசான் முரட்டுத்தனமாக எதிரணி பவுலர்களை புரட்டி எடுத்தார்.

பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் 64 ரன்கள் எடுத்த அவர் 10-வது ஓவரில் வெறும் 32 பந்துகளில் 84 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அவர் கொடுத்த அதிரடியான தொடக்கத்தை அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் பயன்படுத்தி 82 (40) ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 235/9 ரன்கள் எடுத்த மும்பை பின்னர் 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

Adam Gilchrist Deccan

2. ஆடம் கில்கிறிஸ்ட் 74: 2009 ஐபிஎல் தொடரில் அப்போதைய டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக செஞ்சூரியன் நகரில் நடந்த பிளே ஆஃப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 153/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத் துரத்தி டெக்கான் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கி பட்டாசாக வெடித்த கேப்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் முதல் 6 ஓவர்களில் 25 பந்துகளை எதிர்கொண்டு 74 ரன்களை விளாசி பவர்பிளே ஓவர்களை கச்சிதமாக பயன்படுத்தினார்.

10-வது ஓவரில் வெறும் 35 பந்துகளில் 85 ரன்களை மொத்தமாக சேர்த்த அவர் தனது அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனால் அந்த வருட இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதுடன் பைனலில் பெங்களூருவை தோற்கடித்து அந்த வருடத்தின் சாம்பியன் பட்டத்தையும் வென்று காட்டினார்.

- Advertisement -

raina

1. சுரேஷ் ரெய்னா 87: 2014 ஐபிஎல் தொடரில் நடந்த பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் வீரேந்திர சேவாக் அதிரடியாக சதமடித்து 122 ரன்கள் சேர்க்க 20 ஓவர்களில் 226/6 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய சென்னைக்கு டு பிளேஸிஸ் கோல்டன் டக் அவுட்டானாதல் ஆட்டத்தின் 3-வது பந்திலேயே களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ஒவ்வொரு பந்தியிலும் 1000 வாலா சரவெடி பட்டாசு எப்படி வெடிக்குமோ அதேபோல பஞ்சாப் பவுலர்கள் வீசிய பந்துகளை சரமாரியாக கருணையே காட்டாமல் முரட்டுத்தனமாக சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக பறக்கவிட்டார்.

ஒரு பந்தை கூட தவற விடாமல் சரவெடியாக பேட்டிங் செய்த அவர் முதல் 6 ஓவர்களின் 25 பந்துகளில் 12 பவுண்டரிகள் 6 சிக்சருடன் 87 ரன்களை 348.00 என்ற எரிமலையான ஸ்டிரைக் ரேட் விகிதத்தில் தெறிக்கவிட்டு பவர்ப்ளே ஓவர் முடிந்த முதல் பந்திலேயே துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

அதன்பின் தோனியை 42* (31) தவிர இதர சென்னை வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் அப்போட்டியில் ரெய்னா மட்டும் ரன் அவுட்டாகாமல் இருந்திருந்தால் நிச்சயம் சென்னை வெற்றி பெற்றிருக்கும் என இன்றும் கூட பல ரசிகர்கள் பேசும் அளவுக்கு ஐபிஎல் வரலாற்றில் காலத்துக்கும் மறக்க முடியாத மிகச்சிறந்த இன்னிங்சை அன்றைய நாளில் அவர் பதிவு செய்தார்.

Advertisement