சர்வதேச கிரிக்கெட்டில் ப்ரம்மாண்ட சிக்சர்களை பறக்கவிட்ட டாப் 10 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

yuvraj
- Advertisement -

கிரிக்கெட்டில் ரசிகர்களை மகிழ்விக்க ஒரு போட்டியில் ஏராளமான அம்சங்கள் இருந்தாலும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பறக்கவிடும் சிக்சர்களுக்காகத்தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். குறிப்பாக மைதானத்திற்கு சென்று நேரில் போட்டிகளை பார்க்கும் ரசிகர்கள் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் பந்து தங்களிடம் வராதா அதை பிடித்து விட மாட்டோமா என்று ஏக்கத்துடன் மொத்த போட்டியையும் ஏக்கத்துடன் மகிழ்ச்சியாக கண்டு களிப்பார்கள். அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெரும்பாலான சமயங்களில் பவுண்டரி எல்லையைக் கடந்தால் போதும் என்ற அளவுக்கு மட்டுமே பெரும்பாலான பேட்ஸ்மென்கள் சிக்சர்கள் அடிப்பார்கள்.

ஆனால் உலகிலேயே கணிசமான பேட்ஸ்மேன்கள் மட்டுமே பவுண்டரி எல்லையையும் தாண்டி ரசிகர்களை சென்றடையும் அளவுக்கு பிரம்மாண்ட சிக்சர்களை பறக்க விடுவார்கள். அதற்கு நல்ல டைமிங் மற்றும் வலுவான உடல் பவர் போன்ற அம்சங்கள் இன்றியமையாத ஒன்றாகும். சில சமயங்களில் அதிர்ஷ்டத்துடன் பவுவர்களும் மெகா சிக்ஸர்களை பறக்க விடுவார்கள். அந்தவகையில் கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட டாப் 10 பிரமாண்ட சிக்சர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

10. கிறிஸ் கெயில் 116: உலகிலேயே தனது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களை மகிழ்வித்த முக்கியமான பேட்ஸ்மேன்களில் முதன்மையானவராக கருதப்படும் இவர் கடந்த 2010இல் சொந்த மண்ணில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் யூசுப் பதான் வீசிய ஒரு ஓவரில் மெகா சிக்சரை பறக்க விட்டு அனைவரையும் வானத்தை நோக்கி பார்க்க வைத்தார். இறுதியில் அந்த பந்து 116 மீட்டர்கள் பறந்து கிறிஸ் கெயில் பெயர் நிலைத்து நின்று பேசும் அளவுக்கு இந்தப் பட்டியலில் 10-வது இடம் பிடிக்க வைத்துள்ளது.

9. ஷாஹித் அப்ரிடி 117: பாகிஸ்தானின் சிக்ஸர் கிங் என்று அந்நாட்டு ரசிகர்களால் போற்றப்படும் சாகித் அப்ரிடி கடந்த 2005இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் ஏராளமாக பறக்க விட்ட சிக்சர்களுக்கு மத்தியில் ஒரு பந்தை மைதானத்தை தாண்டி 117 மீட்டர் பறக்கவிட்டு இந்த சாதனை பட்டியலில் 9-வது இடத்தை பிடிக்கிறார்.

- Advertisement -

8. எம்எஸ் தோனி 118: இந்தியா கண்ட மகத்தான கேப்டன் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் எம்எஸ் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக சிக்சர்களை விளாசி வெற்றிகரமாக பினிஷிங் செய்து கொடுத்த போட்டிகளை எல்லாம் எப்போதும் மறக்க முடியாது. குறிப்பாக 2011 பைனலில் சிக்ஸர் அடித்து உலக கோப்பையை அவர் வென்று கொடுத்த தருணத்தை இப்போது நினைத்தாலும் ரசிகர்களுக்கு புல்லரிக்கும் என்ற நிலைமையில் அவருடைய ஹெலிகாப்டர் சிக்ஸர்கள் மேலும் பிரபலமாகும்.

அவர் அடித்த பல சிக்ஸர்களில் கடந்த 2009ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் வீசப்பட்ட 44-வது ஓவரில் பறக்கவிட்ட ஒரு சிக்சர் 118 மீட்டர்கள் பயணித்து இந்த வரலாற்று பட்டியலில் அவருக்கு 8-வது இடத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

- Advertisement -

7. யுவராஜ் சிங் 119: என்னதான் ரோகித் சர்மா போன்றவர்கள் வந்தாலும் அன்றும் இன்றும் என்றும் இந்தியாவின் சிக்சர் கிங் என்றால் அது யுவராஜ் சிங் ஆவார். ஏனெனில் 2007 உலக கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் பறக்கவிட்டு உலக சாதனை படைத்த அவர் அதே உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 70 (30) ரன்களை வெளுத்து வாங்கிய போது ஜாம்பவான் பிரெட் லீ வீசிய ஒரு பந்தில் அசால்டாக 119 மீட்டர் சிக்சரை பறக்கவிட்டு இந்தப் பட்டியலில் 7-வது இடம் பிடிக்கிறார்.

6. ஷாஹிட் அப்ரிடி 120: அதிக டக் அவுட் சாதனைக்கு சொந்தக்காரரான இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தும் உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அதனாலேயே பாகிஸ்தான் ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் கடந்த 2013இல் ஜொகனஸ்பர்க் நகரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதன் பவுலர் ரியான் மெக்லேரன் வீசிய 35-வது ஓவரின் ஒரு பந்தை 120 மீட்டர் பிரம்மாண்ட சிக்சராக பறக்கவிட்டு இப்பட்டியலில் 6-வது இடம் பிடிக்கிறார்.

5. மார்க் வாக் 120: ஸ்டீவ் வாக் சகோதரரான மார்க் வாக் 90களின் இறுதியில் ஆஸ்திரேலியாவின் முக்கிய பேட்ஸ்மேனாக வலம் வந்தவர். கடந்த 1997இல் பெர்த் நகரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டேனியல் வெட்டோரி வீசிய பந்தை 120 மீட்டர் தொலைவுக்கு அனுப்பி வைத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய சிக்சர்களை அடிக்க முடியும் என நிரூபித்து இப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

4. கோரி ஆண்டர்சன் 122: 2014இல் சூப்பரான பார்மில் இருந்த நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் நேப்பியரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முகமது சமி வீசிய ஒரு பந்தில் 122 மீட்டர் சிக்ஸர்களை பறக்கவிட்டு இந்த பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார். அன்றைய நாளில் 68 (40) ரன்களை அடித்த அவர் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடிக்க முக்கிய பங்காற்றினார்.

3. லியம் லிவிங்ஸ்டன் 122: தற்போதைய இங்கிலாந்து அணியில் முரட்டுத்தனமான சிக்ஸர்களை பறக்க விடும் திறமை பெற்றுள்ள இவர் கடந்த 2021இல் பாகிஸ்தானுக்கு எதிராக ஹெண்டிங்க்லே நகரில் நடந்த 2-வது டி20 போட்டியில் ஹரிஷ் ரவூப் வீசிய 16-வது ஓவரின் ஒரு பந்தில் 122 மீட்டர் மெகா சிக்சரை பறக்க விட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

2. மார்ட்டின் கப்டில் 127: நியூசிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான இவர் கடந்த 2012இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒரு டி20 போட்டியில் அதன் பவுலர் லன்வுபோ சோட்சோபி வீசிய 5-வது ஓவரில் 127 மீட்டர் சிக்ஸரை அதிரடியாக தெறிக்கவிட்டு இந்த பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

1. பிரட் லீ 130: இந்த பட்டியலில் இடம்பிடிக்கும் ஒரே பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியாவின் நட்சத்திரம் பிரட் லீ கடந்த 2005இல் பிரிஸ்பேன் நகரில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதன் பந்துவீச்சாளர் டேரன் போவல் வீசிய ஒரு பந்தில் அதிர்ஷ்டம், பவர், திறமை என அனைத்தையும் கலந்து மெகா சிக்சரை மைதானத்தை தாண்டி அனுப்பி வைத்தார்.

அதனால் பந்து வெளியே சென்ற நிலைமையில் அதன் தொலைவு 130 மீட்டர் என்பதை கண்டுபிடிக்கவே ஒருசில நிமிடங்கள் டிவி ரிப்ளைக்கு தேவைப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய சிக்சராகவும் இது பார்க்கப்படுகிறது.

1. ஜேக்கப் ஓரம் 130: கடந்த 2005இல் பெர்த் நகரில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 332 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஜேக்கப் ஓரம் ஸ்டுவர்ட் க்ளார்க் வீசிய 40-வது ஓவரின் ஒரு பந்தை 130 மீட்டர் அபாரமான சிக்சராக தெறிக்கவிட்டு இந்த பட்டியலில் முதல் இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.

Advertisement