சர்வதேச கிரிக்கெட்டில் அதிக எடையுடன் விளையாடிய டாப் 10 வீரர்கள் – சுவாரஸ்யமான பதிவு

Cornwall-1
- Advertisement -

கிரிக்கெட் உட்பட எந்த விளையாட்டிலும் நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் திறமை என்பதை தாண்டி தங்களது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது இன்றியமையாத ஒன்றாகும். அதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி வேகமாக ஓடி பந்துகளை தடுத்து கேட்ச்களை பிடித்து சிறப்பாக பீல்டிங் செய்ய நல்ல பிட்னஸ் அவசியமாகிறது. குறிப்பாக 90களை விட தற்போதைய நவீன கிரிக்கெட்டில் பிட்னஸ் இருந்தால்தான் ஒரு வீரருக்கு தேசிய அணியில் இடம் என்ற நிலைமை உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ளது.

அந்தளவுக்கு உடல் கட்டுக்கோப்பு அவசியம் என்ற நிலைமையில் சில வீரர்கள் அதற்கெல்லாம் விதிவிலக்காக அதிகப்படியான எடை உடையுடன் விளையாடியுள்ளார்கள். அவர்களை பற்றி (விளையாடும் போது பதிவு செய்யப்பட்ட எடை) பார்ப்போம்:

- Advertisement -

10. இன்சமாம்-உல்-ஹக் (சராசரியாக 100 கிலோ): உடல் எடை, பிட்னஸ் என்ற வார்த்தைகளை கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்தாலே முதல் ஆளாக இவர் தான் நினைவுக்கு வருவார் எனலாம். ஏனெனில் அதிகப்படியான உடல் எடையுடன் சிங்கிள் எடுப்பதற்கு தனது கேரியரில் பலமுறை தடுமாறிய அவர் தாமும் ரன் அவுட்டாகி தனது பார்ட்னர்களையும் ரசிகர்கள் சிரிக்கும் அளவுக்கு ரன் அவுட்டாக்கிய கதைகள் ஏராளம்.

ஆனால் அதை தனது பேட்டிங்கில் எப்போதும் பிரதிபலிக்காத அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 10000+ ரன்களையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000+ ரன்களையும் குவித்து பாகிஸ்தானுக்கு கேப்டனாகவும் நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ஜாம்பவனாக தன்னை நிரூபித்தார்.

- Advertisement -

9. முகமத் ஷேசாத் (சராசரியாக 100 கிலோ): ஆப்கானிஸ்தானின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக டி20 கிரிக்கெட்டில் அந்நாட்டுக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக அசத்திய இவர் சமீப காலங்களில் பிட்னஸ் காரணமாக நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறுகிறார்.

இருப்பினும் விராட் கோலியை விட அதிக தொலைவுக்கு சிக்சர்கள் அடிக்க முடிகின்ற நான் ஏன் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற கோட்பாட்டுடன் இவர் இருந்து வருகிறார்.

- Advertisement -

8. ஜெசி ரைடர் (சராசரியாக 100கிலோ): நியூசிலாந்தின் அதிரடி தொடக்க வீரராக நம்பிக்கை கொடுத்து ரசிகர்களிடையே புகழ் பெற்ற இவர் சுமாரான ஃபிட்னஸ் காரணமாகவே காயங்களை சந்தித்து நிலையாக விளையாட தடுமாறி காணாமல் போனார்.

7. மார்க் கோஸ்கிரௌவ் (102 கிலோ): ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் 14000க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானர். அதிலும் 2005இல் சர் டான் பிராட்மேன் இளம் வீரர் விருதை வென்ற அவர் பிட்னஸ் காரணமாக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

- Advertisement -

6. மைக் கேட்டிங் (110 கிலோ): இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் தொடர்ச்சியாக உடல் எடை பற்றிய விமர்சனங்களை சந்தித்த போதிலும் ஓரளவு வெற்றிகரமாக செயல்பட்டு கேப்டனாகவும் தனது நாட்டை வழி நடத்தினார். சில ஆஷஸ் கோப்பைகளை கேப்டனாக வென்று 6000க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த அவர் உடல் எடை காரணமாக குறைவான புட் மூமெண்ட்ஸ் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

5. கோலின் மில்போர்ன் (114 கிலோ): 90களில் இங்கிலாந்து ரசிகர்களிடம் புகழ் பெற்றவராக இருந்த இவர் 1996இல் அறிமுகமாகி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதிக எடையுடன் இருந்தாலும் 654 ரன்களை 46.71 என்ற நல்ல சராசரியில் எடுத்த அவர் துரதிஷ்டவசமாக விபத்தில் ஒரு கண் பார்வை இழந்ததால் கிரிக்கெட்டிலிருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றுவிட்டார்.

4. அர்ஜுனா ரணதுங்கா (115கிலோ): 90களில் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அசத்திய இவர் கேப்டனாக 1996 உலகக்கோப்பையை வென்று இலங்கை கிரிக்கெட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். உடல் எடையை விதி விதிவிலக்காக மாற்றி ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு செயல்பட்ட இவர் 12561 ரன்களையும் 95 விக்கெட்டுக்களையும் எடுத்து அசத்தினார்.

3. ட்வயன் லெவராக் (127 கிலோ): மற்ற வீரர்களாவது அதிக உடல் எடை கொண்டிருந்தாலும் வடிவத்தில் சற்று மிடுக்குடன் இருப்பார்கள். ஆனால் பார்ப்பதற்கு தாறுமாறான தோற்றத்தைக் கொண்ட பெர்முடாவை சேர்ந்த இவர் கடந்த 2007 உலகக் கோப்பையில் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கொடுத்த கேட்சை லாவகமாக பிடித்து விட்டு ஓடி கொண்டாடியதை யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் அந்நாட்டுக்கு 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் தற்போது பெர்முடா காவல்துறையில் ஜெயிலராக இருந்து வருகிறார்.

2. வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் (133 கிலோ): ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பழம்பெரும் ஆல்ரவுண்டரான இவர் 1902இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 20 வருடங்களாக வெற்றிகரமாக விளையாடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2863 ரன்களையும் 87 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் ஆஸ்திரேலியாவின் கேப்டனாகவும் செயல்பட்டார்.

1. ரகீம் கார்ன்வால் (140 கிலோ): உலகிலேயே அதிக எடையுடன் விளையாடும் கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக தற்சமயத்தில் விளையாடி வருகிறார். இருப்பினும் நல்ல திறமை கொண்டுள்ள இவர் இதுவரை 13 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement