ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் மே 17ஆம் தேதி துவங்குகிறது. இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனையால் நிறுத்தப்பட்டிருந்த அத்தொடரில் எஞ்சியப் போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே அடுத்தடுத்த தோல்விகளால் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது.
இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த வருடத்துக்காக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் சிஎஸ்கே நிர்வாகம் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. ஆனால் 2026 புதிய அணியில் எம்.எஸ். தோனி மீண்டும் விளையாட வருவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி நிலவுகிறது.
தோனி வருவாரா:
அது பற்றி கேட்டதற்கு அடுத்தப் போட்டியில் விளையாட வருவேனா என்பது தமக்குத் தெரியவில்லை என்று தோனி ஜாலியாக பதிலளித்தார். அதே சமயம் செல்லும் இடங்களில் எல்லாம் தமக்கு பெரிய ஆதரவு கொடுக்கும் ரசிகர்களுக்கு தோனி நன்றியும் தெரிவித்தார். அவர்களுக்காக அடுத்த வருடம் விளையாடுவேனா என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் தோனி கூறியிருந்தார்.
இந்நிலையில் அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாடும் அளவுக்கு தோனியிடம் ஸ்பார்க் இல்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார். 2020 ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடிய சிஎஸ்கே தோனி தலைமையில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறாமல் வெளியேறியது. அப்போது தங்கள் வீரர்களிடம் நெருப்புப் போல் விளையாடும் ஸ்பார்க் இல்லை என்று தோனி தெரிவித்தார்.
ஸ்பார்க் இல்லை:
அப்படி சொன்ன தோனியிடம் தற்போது ஸ்பார்க் இல்லை என்பதால் அடுத்த வருடம் ஓய்வு பெறலாம் என்று டாம் மூடி கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு அணியும் தங்களுடைய கேப்டன்களின் கண்ணாடி ஆகும். தோனி ஒரு குறிப்பிடத்தக்க கேப்டன். மற்றும் நீண்ட காலமாக விளையாடிய அனுபவம் கொண்டவர்”
இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு எப்போது? – வெளியான லேட்டஸ்ட் தகவல்
“பொதுவாக நம் அனைவருக்கும் உள்ளே ஒரு நெருப்பு இருக்கும். சில நேரங்களில் அது எப்போது ஒளிரத் தொடங்கும் என்பதை நாம் அடையாளம் காண வேண்டும். இல்லையெனில் வெளியே செல்ல வேண்டும். அந்த வகையில் தோனியை பற்றி நான் பார்ப்பது சரியானதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னுடைய அவதானிப்பு என்னவெனில் அவரிடம் முந்தை ஆண்டுகளில் நான் பார்த்த ஸ்பார்க் இப்போது இல்லை” எனக் கூறினார்.



