ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் குவாலிஃபயர் 1 பிளே ஆஃப் போட்டியில் பஞ்சாப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு எளிதாக தோற்கடித்தது. முள்ளான்பூரில் மே 29ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஆரம்பத்திலேயே வெற்றியைக் கோட்டை விட்டது. அடுத்து விளையாடிய பெங்களூரு 10 ஓவரிலேயே 106/2 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
அதனால் இறுதிப்போட்டியில் விளையாட ஆர்சிபி அணி தகுதி பெற்று அசத்தியது. மறுபுறம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் போராடாமலேயே தோல்வியை சந்தித்தது. முன்னதாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப்புக்கு துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தனர். அப்போது பொறுப்புடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2 (3) ரன்னில் ஜோஸ் ஹேசல்வுட் வேகத்தில் அவுட்டானார்.
ஈகோ பிரச்சனை:
இத்தனைக்கும் அவருக்கு எதிராக ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் 4 முறை அவுட்டான ஸ்ரேயாஸ் வெறும் 2.75 என்ற மோசமான பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார். எனவே இந்த முக்கியமான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அவரை எப்படியாவது சமாளித்து விட்டு மற்ற பவுலர்களை அதிரடியாக எதிர்கொள்வார் என்று நம்பப்பட்டது. ஆனால் அப்போது ஹேசல்வுட்’க்கு எதிராக ஸ்ரேயாஸ் தம்முடைய ஈகோவை காட்டியதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
அங்கே போட்டியின் சூழ்நிலையை ஷ்ரேயாஸ் ஐயர் தவறாக படித்து விளையாடியது பஞ்சாப் நேரடியாக ஃபைனல் செல்லும் வாய்ப்பை பறித்ததாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் நீங்கள் உங்களுடைய ஈகோவை பாக்கெட்டில் போட்டு விட்டு முன்னோக்கி செல்ல வேண்டும். அதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் போட்டி சூழ்நிலையை சரியாக படிக்காதது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது”
தவறான பாடம்:
“கடந்த காலத்தில் இருளாக இருந்ததை கடக்க முயற்சிக்கும் நீங்கள் உங்கள் பெருமையைக் குவிந்து கொண்டே செல்ல வேண்டும். ஹேசல்வுட்’க்கு எதிராக நீங்கள் ஏற்கனவே தடுமாற்றமாக விளையாடுகிறீர்கள். அது போன்ற சூழ்நிலையில் அவரை நீங்கள் சமாளித்துவிட்டு மற்ற பவுலர்களை அட்டாக் செய்வதே எளிமையான வழியாக இருக்கும்”
இதையும் படிங்க: ரிசர்வ் டே கிடையாது.. எலிமினேட்டர் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? – ரூல்ஸ் கூறுவது என்ன?
“ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு எதிராக நீங்கள் முதல் பந்தை தவற விட்டீர்கள். 2வது பந்தை ஹேசல்வுட் மீண்டும் அதே போல வீசினார். அதை நீங்கள் அடிக்காமல் விட்டிருக்கலாம். பின்னர் 3வது பந்து உங்களுடைய விக்கெட்டை பறித்தது. அந்த வகையில் ஸ்ரேயாஸ் போட்டி சூழ்நிலையை முற்றிலும் தவறாகப் படித்தார். இதற்கு முன் ஹேசல்வுட்’க்கு எதிராக நாம் அவுட்டானோம் என்பதைத் தெரிந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதற்கு தகுந்தார் போல் செயல்படவில்லை” என்று கூறினார்.



