விராட் கோலியை காலி செய்த இளம் ஆஸி வீரர் – வார்னே, லயன் போன்ற நட்சத்திரங்கள் படைக்காத வரலாற்று சாதனை

Todd Murphy
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலாவதாக 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. இத்தொடரில் 4 போட்டிகளை வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது. மறுபுறம் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா கடைசி 2 தொடர்களில் வரலாற்றில் முதல் முறையாக தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்கும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ளது. அந்த நிலைமையில் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 177 ரன்களுக்கு சுருண்டது.

வார்னர் 1, கவாஜா 1, மாட் ரென்ஷா 0, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 31, அலெக்ஸ் கேரி 36 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களும் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும் அஷ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 76 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடவலாக செயல்பட்ட ராகுல் இப்போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய இளம் ஸ்பின்னர் டோட் முர்ஃபியிடம் 20 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அசத்திய முர்ஃபி:
அதைத்தொடர்ந்து வந்து 23 ரன்கள் குவித்து தொல்லை கொடுத்த அஷ்வினையும் அவுட்டாக்கிய அவர் இந்தியாவின் தடுப்புச் சுவராக கருதப்படும் புஜாராவையும் 7 ரன்களில் காலி செய்தார். அதை விட 2019க்குப்பின் சதமடிக்கும் லட்சியத்துடன் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியை 2வது நாள் உணவு இடைவெளிக்கு பின் வீசிய முதல் பந்திலேயே லெக் ஸ்டம்ப் திசையில் ஒய்ட் போன்ற வலையை விரித்து 12 ரன்களில் அவுட்டாக்கி மிரட்டினார்.

அதனால் வழக்கம் போல விராட் கோலி ஏமாற்றத்துடன் சென்றாலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற கேப்டன் ரோகித் சர்மா 15 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 120 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருக்கு பின் வந்த கேஎஸ் பரத்தையும் அவருடைய அறிமுகப் போட்டியில் அசத்த விடாமல் 8 ரன்களில் காலி செய்த டோட் முர்ஃபி தனது அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்களை சாய்த்து அசத்தினார். இருப்பினும் 8வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவுக்கு தொல்லை கொடுத்த ரவீந்திர ஜடேஜா 66* ரன்களும் அக்சர் பட்டேல் 52* ரன்களும் எடுத்து விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

அதனால் 2வது நாள் முடிவில் 321/7 ரன்கள் எடுத்துள்ள இந்தியா ஆஸ்திரேலியாவை விட 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக இப்போட்டியில் இந்திய ஸ்பின்னர்களுக்கு 2.9 டிகிரி சுழன்ற நாக்பூர் பிட்ச் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு 3.4 டிகிரி அதிகமாக சுழன்றது. ஆனாலும் நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றாத நட்சத்திர ஸ்பின்னர் நேதன் லயன் இந்திய ஸ்பின்னர்களை போல் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் வெறும் 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.

ஆனால் இதற்கு முன் வெறும் 7 உள்ளூர் முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடி இப்போட்டியில் அறிமுகமான டோட் முர்ஃபி ஆரம்பம் முதலே இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்து இதுவரை 36 ஓவர்கள் வீசி 9 மெய்டன் உட்பட 5 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியுள்ளார். அவருடைய பவுலிங் வாசிம் ஜாபர் போன்ற நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. அத்துடன் டாம் ஹோகன் (1983), ஜேசன் க்ரேஜா (2008), நேதன் லயன் (2011) ஆகியோருக்கு பின் அறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் எடுத்த 4வது ஆஸ்திரேலியா ஸ்பின்னர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: இந்திய வீரராக இதுவரை யாருமே செய்யாத விசித்திரமான சாதனையை நிகழ்த்திய – சூரியகுமார் யாதவ்

அதை விட வெறும் 22 வயதிலேயே 5 விக்கெட்களை எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை எடுத்த ஆஸ்திரேலிய ஸ்பின்னர் என்ற ஷேன் வார்னே, நேதன் லயன் போன்ற நட்சத்திரங்கள் படைக்காத சாதனை படைத்துள்ளார். குறிப்பாக அறிமுகப் போட்டியிலேயே புஜாரா, விராட் கோலி போன்ற தரமான வீரர்களை அவுட் செய்துள்ள அவருக்கு வளமான வருங்காலம் காத்திருப்பதாக இந்திய ரசிகர்களே மனதார பாராட்டுகிறார்கள்.

Advertisement