TNPL 2022 : முதல் போட்டியிலேயே சர்ச்சையுடன் ஐபிஎல்’லை மிஞ்சிய த்ரில் விருந்து – முழுவிவரம்

TNPL Nellai Royal Kings Baba Aparajith
- Advertisement -

தமிழகத்தில் உள்ள இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வாய்ப்பளித்து உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக அடையாளம் காணும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் 6-வது சீசன் ஜூன் 23-ஆம் தேதியான நேற்று திருநெல்வேலியில் துவங்கியது. மொத்தம் 8 அணிகள் 32 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரிட்சை நடத்தும் இந்த தொடரில் நேற்றைய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இரவு 7.15 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய நெல்லை 20 ஓவர்களில் 184/4 ரன்கள் சேர்த்தது.

ப்ரதோஸ் பால் 7 (9), பாபா அபாரஜித் 2 (3) பாபா இந்திரஜித் 3 (6) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 27/3 என படு மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மற்றொரு தொடக்க வீரர் சூரியபிரகாஷ் உடன் மிடில் ஆர்டரில் களமிறங்கி ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவ் நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தார். 6-வது ஓவரில் ஜோடி சேர்ந்து 18-வது ஓவரை சேப்பாக் பவுலர்களை வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை மீட்டெடுத்தது.

- Advertisement -

ஆரம்பமே சர்ச்சை:
அதில் 8 பவுண்டரியுடன் கடைசி நேரத்தில் சூரிய பிரகாஷ் 62 (50) ரன்களில் அவுட்டானாலும் 5 பவுண்டரி 6 சிக்சர்கள் பறக்கவிட்ட சஞ்சய் யாதவ் கடைசி வரை அவுட்டாகாமல் 87* (48) ரன்களை தெறிக்கவிட்டார். அவருடன் அஜிடேஷ் 16* (8) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததார். அதை தொடர்ந்து 185 என்ற இலக்கை துரத்திய சேப்பாக் 3.3 ஓவரில் 35/0 என்ற அதிரடியான தொடக்கத்தைப் பெற்று சேசிங்கை துவக்கியது.

அப்போது 4-வது ஓவரை வீசிக்கொண்டிருந்த பாபா அபராஜித் 4-வது பந்தை எதிர்கொண்ட கௌசிக் காந்திக்கு பந்துவீச வந்தபோது எதிர்ப்புறம் இருந்த பேட்ஸ்மேன் நாராயண் ஜெகதீசன் கிரீஸ் எனப்படும் வெள்ளை கோட்டை ஒருசில இன்ச்கள் தாண்டியதைப் பார்த்ததால் உடனடியாக மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். சமீபத்தில் எம்சிசி தாமாக முன்வந்து இதை அதிகாரப்பூர்வமாக ரன் அவுட் என்று அறிவித்ததால் அடிப்படை விதிமுறைப்படி அதை அம்பயரும் அவுட் என அறிவித்தார். ஆனால் அதற்காக ஆத்திரமடைந்த ஜெகதீசன் பாபா அபராஜித்துக்கு பெவிலியன் செல்லும் வரை 3 முறை நடுவிரலை காட்டிக்கொண்டே கோபத்துடன் சென்றது பார்ப்போரின் முகத்தை சுளிக்க வைத்தது.

- Advertisement -

தமிழகத்திற்காக ஒன்றாக ஒரே அணியில் சேர்ந்து விளையாடும் இவர்கள் இந்த போட்டியில் இவ்வாறு நடந்துகொண்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. அதனால் போட்டியில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அடுத்து வந்த ராதாகிருஷ்ணன் 1 (4) சசிதேவ் 15 (16) ராஜ்கோபால் சதீஷ் 5 (6) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர். அதன் காரணமாக 69/3 என தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் கவுசிக் காந்தி 7 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (43) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் அவுட்டானார்.

திரில் சூப்பர் ஓவர்:
அதனால் நெல்லை எளிதாக வென்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட போது கடைசி நேரத்தில் 3 சிக்சரை பறக்க விட்ட சோனு யாதவ் 34 (23) ரன்களில் ஆட்டமிழக்க கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட போது 4, 0, 6, 0, 4 என ஹரிஷ் குமார் 14 ரன்களை பறக்கவிட்டு மொத்தமாக 26* (12) ரன்கள் எடுத்ததால் சேப்பாக்கமும் 20 ஓவர்களில் சரியாக 184/7 ரன்கள் எடுத்ததால் போட்டி டையில் முடிந்து மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

இறுதியில் வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக்கத்திற்கு அதிசயராஜ் டேவிட்சன் 1 விக்கெட்டை எடுத்து சவாலை கொடுத்தாலும் ஜெகதீசன் 1 சிக்சர் உட்பட 7 ரன்கள் எடுக்க மொத்தமாக அந்த அணி 9/1 ரன்கள் எடுத்தது.

அதை துரத்திய நெல்லைக்கு மீண்டும் சஞ்சய் யாதவ் 2, 4, 1 என 7 ரன்களும் அஜிடேஷ் 1 ரன்னும் எடுக்க அதை வீசிய சந்திப் வாரியார் 2 ஒய்ட் போட்டுக் கொடுத்ததால் 10 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் திரில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு 87 ரன்கள் 2 விக்கெட்டுகள் சூப்பர் ஓவரில் 7 ரன்கள் என ஆல்-ரவுண்டராக மிரட்டிய சஞ்சய் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஐபிஎல்’லை மிஞ்சி:
நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2022 தொடரில் நிறைய போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று த்ரில்லாக அமைந்தாலும் ஒருமுறை கூட சூப்பர் ஓவர் வரவே இல்லை. இருப்பினும் இடுப்புக்கு மேலே வீசப்பட்ட பந்துக்கு அம்பயர் நோபால் வழங்காதது உட்பட அந்தத் தொடர் முழுவதும் பரபரப்பும் சர்ச்சைகளும் இருந்ததால் மிகவும் திரில்லாக இருந்தது. ஆனால் இந்த டிஎன்பிஎல் தொடரில் முதல் போட்டியே மன்கட் சர்ச்சைக்கு மத்தியில் கடைசி ஓவரின் கடைசி பந்து வரை சென்று முதல் போட்டியிலேயே சூப்பர் ஓவரை கொண்டுவந்து ஐபிஎல் தொடரை மிஞ்சும் அளவுக்கு ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

Advertisement