நம்ம ஊரு நம்ம கெத்து ! மீண்டும் வரும் டிஎன்பிஎல், 2022 சீசனின் முழு அட்டவணை இதோ – ஒரே குஷிதான்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் டி20 தொடர் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி 2 மாதங்களுக்கும் மேல் ரசிகர்களை மகிழ்வித்து மே 29-ஆம் தேதியன்று நிறைவு பெற்றது. இந்த வருடம் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்திய 10 அணிகளில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளை கடந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதைத்தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை தோற்கடித்த குஜராத் தனது முதல் வருடத்திலேயே சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னியலையில் கோப்பையை வென்று அசத்தியது.

- Advertisement -

அப்படி கடந்த 2 மாதங்களாக தினந்தோறும் டி20 போட்டிகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஐபிஎல் தொடர் முடிந்துள்ளதால் பொழுதுபோக்கும் முடிந்தாற் போல் ஆகியுள்ளது. ஆனால் அவர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் குறிப்பாக தமிழக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் மீண்டும் இந்த வருடம் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரில் கலக்கிய சாய் கிஷோர், வருண் சக்ரவர்த்தி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் களமிறங்கவுள்ளனர்.

நம்ம ஊரு நம்ம கெத்து:
ஆம் வரும் ஜூன் 23-ஆம் தேதி கோலாகலமாகத் துவங்கும் இந்த தொடர் ஜூலை 31-ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு மேல் தமிழக ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இந்த தொடரில் தமிழகத்தின் தரமான இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி தங்களது அணிகளுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்று இந்தியாவிற்காக விளையாடும் முயற்சியில் ஈடுபட உள்ளனர். கடந்த 2016இல் முதல் முறையாக துவங்கப்பட்ட தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இதுவரை 5 தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 சாம்பியன் பட்டங்களை வென்று வெற்றிகரமான அணியாகவும் நடப்பு சாம்பியனாகவும் விளங்குகிறது.

tnpl 1

அதை தொடர்ந்து வரும் ஜூன் 23-ஆம் தேதி துவங்கும் 6-வது சீசனின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சேப்பாக் மற்றும் நெல்லை ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடரின் ஃபார்மட் என்பது ஐபிஎல் தொடரை போலவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் களமிறங்க இருக்கும் 8 அணிகளின் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்ற அடிப்படையில் 28 போட்டிகள் நடைபெறுகின்றன.

- Advertisement -

அதில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ஐபிஎல் போலவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அதன்பின் நடைபெறும் ப்ளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1, எலிமினேட்டர், குவாலிபயர் 2 ஆகிய போட்டிகளில் வெல்லும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உள்ளன. அதை தொடர்ந்து ஜுலை 31-ஆம் தேதி கோயம்பத்தூரில் மாபெரும் ஃபைனல் நடைபெற உள்ளது.

TNPL

இந்த தொடரில் ஐபிஎல் போலவே 6 நாட்கள் 2 போட்டிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் பகல் போட்டிகள் மதியம் 3.15 மணிக்கும் இரவு போட்டிகள் இரவு 7.15 மணிக்கும் துவங்குகின்றன. இந்த போட்டிகளை நேரிடையாக பார்ப்பதற்கு ரசிகர்கள் மைதானத்துகுள் அனுமதிக்கப் படுவார்களா என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் இந்த தொடரை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சி வாயிலாக நேரடியாக கண்டு களிக்கலாம்.

- Advertisement -

மைதானம், அணிகள்:
இந்த தொடர் இந்த வருடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறாமல் திருநெல்வேலி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதில் ஜூன் 23 முதல் ஜூலை 24 வரை நடைபெறும் 28 லீக் சுற்று போட்டிகள் திருநெல்வேலி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. அதேப்போல் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகள் சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன.

இந்த தொடரின் அதிகாரப்பூர்வ முழு அட்டவணை இதோ:

TNPL Schedule
Photo : TNPL
TNPL Schedule 2
Photo : TNPL

இதில் பங்கேற்கும் 8 அணிகள் இதோ:
1. சேப்பாக் சூப்பர் கில்லிஸ்
2. திண்டுக்கல் டிராகன்ஸ்
3. திருப்பூர் தமிழன்ஸ்
4. கோவை கிங்ஸ்
5. நெல்லை ராயல் கிங்ஸ்
6. ரூபி திருச்சி வாரியர்ஸ்
7. சேலம் ஸ்பார்டன்ஸ்
8. மதுரை பேன்தர்ஸ்

Advertisement