மிரட்டும் நம்ம யார்கர் கிங் நட்டு ! டி20 உலகக்கோப்பையில் இடம் உறுதி – காரணம் இதோ

Natarajan Nattu SRH
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 15-ஆம் தேதி நடைபெற்ற 25-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் நேருக்கு நேர் சந்தித்தன. ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய கொல்கத்தாவின் தொடக்க வீரர் ஆரோன் பின்ச் 7 (5) ரன்களில் நடையை கட்ட மற்றொரு தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயரை 6 (13) ரன்களில் தமிழக யார்கிங் என அழைக்கப்படும் நடராஜன் அற்புதமான யார்க்கர் பந்தால் கிளீன் போல்ட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் அடுத்து களமிறங்கிய சுனில் நரேனையும் 6 ரன்களில் அதிரடியாக அவுட் செய்து ஆரம்பத்திலேயே போட்டியை ஹைதெராபாத் திருப்பினார்.

இதனால் 31/3 என தடுமாறிய கொல்கத்தாவை மீட்டெடுக்க களமிறங்கிய அதன் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 28 (25) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய இளம் வீரர் செல்டன் ஜாக்சன் 7 (7) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த நித்தஷ் ராணா 36 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 54 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

காப்பாற்றிய ரசல்:
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் ஆன்ரே ரசல் தனக்கே உரித்தான பாணியில் கடைசி நேரத்தில் சரவெடியாக பேட்டிங் செய்து வெறும் 25 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர் உட்பட 49* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அற்புதமான ஃபினிஷிங் கொடுத்து காப்பாற்றினார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 175/8 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 176 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா 3 (10) கேன் வில்லியம்சன் 17 (16) என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 39/2 என ஆரம்பத்திலேயே அந்த அணி தடுமாறியது. ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த ராகுல் திரிப்பாதி சக வீரர் ஐடன் மார்க்ரம் உடன் இணைந்து சரவெடியாக மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 3-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் விளாசி வெற்றியை உறுதிசெய்த இந்த ஜோடியில் வெறும் 37 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 மெகா சிக்ஸர்கள் உட்பட 71 ரன்கள் எடுத்திருந்த போது ராகுல் திரிப்பாதி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

கலக்கும் நட்டு:
இருப்பினும் மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடியாக பேட்டிங் செய்த ஐடன் மார்க்ரம் வெறும் 36 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட 68* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அபாரமான பினிஷிங் கொடுத்ததால் 17.5 ஓவர்களிலேயே 176/3 ரன்களை எடுத்த ஹைதெராபாத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பெற்றது. இந்த அபாரமான வெற்றியில் 71 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ராகுல் திரிபாதி ஆட்டநாயகன் விருதுகளை வென்றார்.

இந்த வெற்றியால் தனது முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து 10-ஆவது இடத்தில் திண்டாடிய ஹைதராபாத் அதற்கடுத்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று ஹாட்ரிக் வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் ஐதராபாத் அணியின் வெற்றியில் பந்துவீச்சில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் நடராஜன் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார்.

- Advertisement -

டி20 உலககோப்பை உறுதி:
தமிழகத்தின் யார்கர் கிங் என அழைக்கப்படும் அவர் ஜஸ்பிரித் பும்ரா போல ஒரு தரமான பவுலராக தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் அவர் பங்கேற்ற 5 போட்டிகளில் முறையே 2/43, 2/26, 2/30, 2/34, 3/37 என அதிரடியாக செயல்பட்டு ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது 2 விக்கெட்டுக்கு மேல் எடுத்து ஐதராபாத் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றி வருகிறார். இதன் வாயிலாக தற்போது அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலர்களின் பட்டியலில் அவர் 2-வது இடத்தில் ஜொலிக்கிறார். இதன் காரணமாக வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கான இடம் 99% உறுதி என்றே கூறலாம்.

ஏனெனில் ஏற்கனவே இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் துரதிஸ்டவசமாக காயம் காரணமாக விலகியதால் கடந்த வருடம் துபாயில் நடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இடம் பிடிக்க முடியவில்லை. அது பும்ராவுக்கு கைகொடுக்க ஒரு நல்ல பவுலர் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி இறுதியில் இந்தியாவுக்கு மோசமான தோல்வியை கொடுத்தது. இது பற்றி “நடராஜன் இல்லாதது டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது” என அப்போதைய பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி கூட சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அந்த நிலையில் சென்னை அணிக்காக விளையாட இருந்த மற்றொரு இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் காயம் காரணமாக ஐபிஎல் 2022 தொடர் மட்டுமல்லாது டி20 உலக கோப்பையிலும் பங்கேற்பது சந்தேகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஹர்டிக் பாண்டியா த்ரோ அடிச்சி உடைச்ச இந்த ஒரு ஸ்டம்போட விலை என்ன தெரியுமா? – பெரிய லாஸ் தான்

எனவே பும்ராவுக்கு பின் 2-வது வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியில் விளையாடுவதற்காக பிரகாசமான வாய்ப்பு நம்ம நடராஜனுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது போலவே அவர் சிறப்பாக செயல்படுவதுடன் காயம் அடையாமல் இருக்கும் பட்சத்தில் டி20 உலக கோப்பையில் 100% அவர் விளையாடுவதை நம்மால் பார்க்க முடியும்.

Advertisement