இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து விலகிய டிம் சவுதி – புதிய கேப்டன் யார்?

Southee
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 16 பேர் கொண்ட அணியும் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர் முடிந்த கையோடு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது.

நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து டிம் சவுதி விலகல் :

இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்திலும், இரண்டாவது போட்டி அக்டோபர் 24-ஆம் தேதி புனே மைதானத்திலும், கடைசி போட்டி நவம்பர் 1-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்திலும் நடைபெறவுள்ளது. இந்த நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் விளையாட இருக்கும் வீரர்களுக்கு வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோன்று இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இழந்தது.

அதனை தொடர்ந்து இந்திய அணிக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது துவங்க இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் அந்த கேப்டன் டிம் சவுதி தற்போது கேப்டன் பதிவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடியான ராஜினாமா அறிவிப்பு அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பி உள்ளது. நியூசிலாந்து அணிக்காக 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 382 விக்கெட்டுகளை வீழ்த்திய டிம் சவுதி கேன் வில்லியம்சனுக்கு அடுத்து முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

அதோடு கடந்து 2022-ஆம் ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து வில்லியம்சன் விலகியதற்கு பிறகு கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் 2 ஆண்டுகளாக கேப்டனாக இருந்து வந்தார். இந்நிலையில் இந்த இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக கேப்டன் பதவியை ராஜினாமா செய்த அவர் பேசுகையில் கூறியதாவது : டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருந்ததை பெருமையாக கருதுகிறேன். எப்போதும் நியூசிலாந்து அணியின் வெற்றியை முன்னிலைப்படுத்தியே நான் விளையாட உள்ளேன்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நான் விலக இதுதான் காரணம் – பாபர் அசாம் வெளிப்படை

தற்போதும் அணியின் நலனை கருத்தில் கொண்டு தான் கேப்டன் பதிவிலிருந்து விலகுகிறேன். ஆனாலும் தொடர்ந்து ஒரு பவுலராக செயல்பட்டு எங்களது அணிக்கு பலம் சேர்ப்பேன். இளம் வீரர்களுக்கும் உதவியாக இருப்பேன். எனக்கு பின்னர் கேப்டனாக மாறவுள்ள டாம் லேதமுக்கு எனது வாழ்த்துக்கள் என்று டிம் சவுதி கூறியுள்ளார். இதன் மூலம் நியூசிலாந்து அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் டாம் லேதம் தான் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement