பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் கடந்த 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 54 டெஸ்ட் போட்டிகள், 117 ஒருநாள் போட்டிகள் மற்றும் 123 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் பாபர் அசாம் கடந்து சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார்.
கேப்டன் பதவியில் இருந்து விலகிய பாபர் அசாம் :
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக தனது கேப்டன் பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். அதனை தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையில் பாகிஸ்தான அணி டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னர் வரை தொடர்ச்சியாக தோல்விகளையே சந்தித்து வந்தது. இதன் காரணமாக டி20 உலக கோப்பைக்கு முன்னதாக மீண்டும் பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மட்டும் டி20 அணிகளுக்கான கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.
ஆனாலும் பாகிஸ்தான் அணியால் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக தற்போது பாபர் அசாம் அறிவித்துள்ளார். பணிச்சுமை அதிகமாக உள்ளதாலேயே கேப்டன் பதவியிலிருந்து விலகி தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் அவர் குறிப்பிட்டதாவது : இன்று நான் ஒரு முக்கிய முடிவை அறிவித்துள்ளேன். அதாவது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நான் விலக இருக்கிறேன். நான் பாகிஸ்தான் அணியை தலைமை தாங்கி வழிநடத்தியது எனக்கு கிடைத்த பெருமை. தற்போது அந்த பதவியில் இருந்து நான் விலகுகிறேன்.
இதையும் படிங்க : பூரானின் 91 ரன்ஸ் போராட்டத்தை.. 17 பந்தில் முடித்த மில்லர்.. பொல்லார்ட் அணியை எலிமினேட் செய்தது எப்படி?
ஏனெனில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுவது உண்மையிலேயே அதிக பணிச்சுமையை தருகிறது. எனவே என்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தை முன்னேற்றுவதற்காக நான் இந்த கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். அதோடு தற்போது நான் கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் எனது பேட்டிங்கின் மூலம் நிச்சயம் பாகிஸ்தானுக்கு வலு சேர்ப்பேன் என பாபர் அசாம் குறிப்பிட்டுள்ளார்.