
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜஸ்ப்ரித் பும்ரா செயல்பட்டு வருகிறார். 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் அவர் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார். 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு தொடர்நாயகன் விருது வென்ற முக்கிய பங்காற்றிய அவர் சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்து அபாரமாக விளையாடினார்.
அதனால் அவரை பல முன்னாள் வீரர்களும் மனதார பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஓய்வு பெற்ற நியூசிலாந்து வீரர் டிம் சவுதி 3 வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக நன்றாக பவுலிங் செய்வது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார். அதை கச்சிதமாக செய்து அசத்தி வரும் பும்ராவை தாம் ரசிப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “காயத்திற்கு முன் இருந்ததை விட தற்போது பும்ரா கம்பேக் கொடுத்து மிகச் சிறந்த பந்து வீச்சாளராக இருக்கிறார். எனவே அவர் எப்போதும் ஒரு சிறப்பு திறமை கொண்டவர். தனித்துவமான ஆக்சனை கொண்டுள்ள அவரிடம் வேகம் மற்றும் திறன் ஆகியவையும் உள்ளன”
“நல்ல வேகத்தில் பந்தை இருபுறங்களிலும் திருப்புவது மிகவும் கடினமான ஒன்றாகும். அதைப் பெற்றுள்ள அவரிடம் நல்ல திறன் தொகுப்புகளும் தனித்துவமான பவுலிங் ஆக்சனும் இருக்கிறது. அதை வைத்து அவர் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார். 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை என்று நினைக்கிறேன்”
“ஆனால் பும்ராவை பொறுத்த வரை தற்சமயத்தில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக இருப்பது அற்புதமான சாதனையாகும். அந்த வகையில் ஏற்கனவே சொன்னது போல் காயத்தை சந்தித்தாலும் அதிலிருந்து அவர் மீண்டு வந்து சிறப்பாக விளையாடுகிறார். அவர் பவுலிங் செய்வதை நான் ரசிக்கிறேன்”
இதையும் படிங்க: இனிமே உங்க இஷ்டத்துக்கு இருக்க முடியாது.. இந்திய வீரர்களுக்கு புதிய கட்டளையை விதித்த – பி.சி.சி.ஐ
“இன்னும் சில வருடங்கள் அவர் எப்படி அசத்தப்போகிறார் என்பதையும் பார்ப்பதற்காக ஆவலுடன் உள்ளேன்” என்று கூறினார். மேலும் கடினமான இந்தியாவில் சமீபத்தில் டெஸ்ட் தொடரில் முதல் முறையாக நியூசிலாந்து பெற்ற வெற்றியில் தாமும் பங்காற்றியது ஸ்பெஷல் சாதனை என்று சௌதீ பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற பெரிய நாட்டில் நியூசிலாந்து போன்ற பெரிய நாடு வென்றது மறக்க முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.