
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலிய தொடரில் வென்றதாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது.
அந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிகளில் எதிராக இந்தியா ஏ அணி 2 பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அந்த இரண்டு போட்டிகளிலுமே இந்தியா தோல்வியை சந்தித்தாலும் முதல் போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சதமடித்து வெற்றிக்கு போராடினார். அதே போல மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் துருவ் ஜுரேல் 80, 68 என மொத்தம் 148 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு போராடினார்.
அதனால் அவருக்கு கே.எல் ராகுலுக்கு பதிலாக வாய்ப்பு கொடுக்கலாம் என்று இந்திய ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் துருவ் ஜுரேல் போன்ற வீரர் ஆஸ்திரேலியாவில் அசத்துவதற்கு திறமையான தகுதியானவர் என்று முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். எனவே இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்து அவர் விளையாட வைப்பதை பார்க்க காத்திருப்பதாகவும் பெய்ன் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக சில போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்த ஒரு பையன் உள்ளார். அவர் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் 63 சராசரியை கொண்டுள்ளார். அவருடைய பெயர் துருவ் ஜுரேல். அவர் பேட்டிங் செய்ததை பார்த்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு தேவையான பொறுமை, திறன் இருப்பது தெரிந்தது”
“விக்கெட் கீப்பராக இருந்தாலும் அவர் இந்த தொடரில் விளையாடாமல் போனால் அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். 23 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இந்த சுற்றுப்பயணத்தில் தனது அணியின் மற்ற இந்திய வீரர்களை விட அதிக தரத்தை கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்திய துணை கண்டத்தைச் சேர்ந்த நிறைய வீரர்கள் இங்குள்ள சூழ்நிலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள தடுமாறுவார்கள்”
இதையும் படிங்க: கில், விராட் கோலி கிடையாது.. இவர் தான் இந்தியாவின் புதிய கிங்.. பட்டம் சூட்டி வரவேற்ற ஆஸி பத்திரிகை
“ஆனால் ஜுரேல் அதை சரியாக செய்பவராக தெரிகிறார். மெல்போர்ன் மைதானத்தில் இருக்கும் அதிகப்படியான வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை அவர் சரியாக கையாண்டார். அந்தப் பையன் மீது கண்ணை வைத்துக் கொள்ளுங்கள். அவர் ஆஸ்திரேலிய ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்வார். அவர் நம்முடைய 3 பெரிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அசத்தக் கூடியவராகவும் தெரிகிறார்” என்று கூறினார்.