
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் திலக் வர்மா 2வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். கடந்த வருடம் அறிமுகமான அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் அடுத்தடுத்த சதங்களை அடித்த அவர் தற்போதைய இங்கிலாந்து தொடரின் இரண்டாவது போட்டியிலும் 72* ரன்கள் கொடுத்தார்.
அதையும் சேர்த்து 4 போட்டிகளில் அவர் அவுட்டே ஆகாமல் மொத்தம் 318 ரன்கள் குவித்தார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 அவுட்டுக்கு மத்தியில் அவுட்டே ஆகாமல் 300+ ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் திலக் படைத்தார். அந்த வகையில் தொடர்ச்சியாக அசத்தியதால் தற்போது அவர் 2வது இடத்தைப் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சொல்லப்போனால் கடந்த 2024 நவம்பர் மாதம் அவர் இதே தரவரிசைப் பட்டியலில் 72வது இடத்தில் இருந்தார். அங்கிருந்து ராக்கெட் வேகத்தில் 22 வருடம் 82 நாட்கள் வயதில் 70 இடங்கள் முன்னேறியுள்ள திலக் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதன் காரணமாக ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் இடத்தை மிகவும் இளம் வயதில் பிடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 2018ஆம் ஆண்டில் 23 வருடம் 105 நாட்கள் வயதில் முதலிடத்தைப் பிடித்து அந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இது போக தற்போதைய தரவரிசையில் ட்ராவிஸ் 855 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். எனவே 832 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் திலக் வர்மா அவரையும் விரைவில் முந்தி முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
அவரைத் தவிர்த்து கேப்டன் சூரியகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் ஆகியோர் 3, 9வது இடங்களில் உள்ளார்கள். அதே போல கடந்த 10 போட்டிகளில் 27 விக்கெட்டுகள் எடுத்துள்ள தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி கம்பேக் கொடுத்தது முதல் அட்டகாசமாக செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாக 25 இடங்கள் முன்னேறியுள்ள அவரும் நேரடியாக ஐசிசி டாப் 10 பவுலர்கள் பட்டியலுக்குள் நுழைந்து ஐந்தாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் அதை நல்லா தான் அடிக்கிறாரு.. இந்த விஷயம் புரியாம உடனே விமர்சிக்காதீங்க.. பீட்டர்சன் ஆதரவு
அர்ஷ்தீப் சிங், ரவி பிஸ்னோய், அக்சர் பட்டேல் ஆகியோர் 9, 10, 11வது இடங்களில் பவுலர்கள் தரவரிசையில் உள்ளார்கள். ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். அணிகள் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலித்து வருகிறது.