31/3 என சரிந்த போது வேணும்னே சிங்கிள் எடுத்தேன்.. 360 டிகிரி சூரியகுமார் இருந்தாரு.. திலக் வர்மா பேட்டி

TIlak Varma
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மே 6ஆம் தேதி நடைபெற்ற 55வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் போராடி 173/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48, கேப்டன் பட் கமின்ஸ் 35* ரன்கள் எடுத்தனர்.

மும்பை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 3, பியூஸ் சாவ்லா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 174 ரன்கள் துரத்திய மும்பைக்கு இசான் கிசான் 9, ரோகித் சர்மா 4, நமன் திர் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 31/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய மும்பைக்கு 4வது இடத்தில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 102* (51) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

தகுதியான சதம்:
அவருடன் சேர்ந்து விளையாடிய திலக் வர்மா 37* (32) ரன்கள் எடுத்ததால் 17.2 ஓவரிலேயே 174/3 ரன்கள் எடுத்த மும்பை எளிதாக வென்றது. அதனால் லீக் சுற்றுடன் வெளியேறுவதை தற்காலிகமாக மும்பை தள்ளிவைத்தது. மறுபுறம் ஹைதராபாத் அணி 5வது தோல்வியை பதிவு செய்து பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இப்போட்டியின் ஆரம்பத்தில் தாமும் சூரியகுமாரும் தடுமாறியதாக திலக வர்மா தெரிவித்துள்ளார்.

அப்போது நேராக பேட்டை வைத்து அடிக்க முயற்சித்ததாக தெரிவிக்கும் அவர் ஒரு கட்டத்தில் சூரியகுமாரின் அதிரடியை பார்த்து சதம் அடிக்கட்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே சிங்கிள் எடுத்ததாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆரம்பத்தில் பிட்ச் மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் இருவருமே தடுமாறினோம். எனவே நாங்கள் நேரான பேட்டையை வைத்து அடிக்க முயற்சித்தோம்”

- Advertisement -

“அதன் பின் எங்களிடம் 360 டிகிரி பேட்ஸ்மேன் இருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். எதையும் நாங்கள் முடிவெடுக்கவில்லை. இந்த பெரிய சீசனில் நாங்கள் பல்வேறு பிட்ச்களை பார்த்து வருகிறோம். எனவே சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நான் விளையாட முயற்சித்தேன். ஆனால் அதிரடியை கைவிடவில்லை. அதனால் என்னுடைய பேட்டை நேராக வைத்து ரன்கள் குவிக்க முயற்சித்தேன்”

இதையும் படிங்க: டிசம்பர் 14க்கு அப்றம் முழுசா பண்ணிருக்கேன்.. ஸ்கூல் படிச்சதே வான்கடேவில் தான்.. சூரியகுமார் பேட்டி

“அந்த வகையில் நான் நன்றாக பேட்டிங் செய்ததாக நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் சூரியகுமார் பாய் நன்றாக பேட்டிங் செய்தார். எனவே அவர் சதமடிப்பதற்கு தகுதியானவர் என்று நினைத்தேன். அதனால் பெரிய ஷாட்டுகளை அடிக்காத நான் சிங்கிள் மட்டுமே எடுத்து அவருக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்க விரும்பினேன்” என்று கூறினார். இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்து மும்பை 9வது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement