பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 தொடரின் 68வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் சென்னையை வெளியேற்றிய பெங்களூரு 4வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 47, கேப்டன் டு பிளேஸிஸ் 53 ரன்கள் எடுத்த உதவியுடன் 219 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
ஆனால் அதைச் சேசிங் செய்த சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 0, சிவம் துபே 7, மிட்சேல் 4 ரன்னில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் ரச்சின் ரவீந்தரா 61, ரகானே 33, ஜடேஜா 42*, தோனி 25 ரன்கள் எடுத்தும் சென்னை தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக கோப்பையை தக்க வைக்க முடியாமல் புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் சென்னை பரிதாபமாக வெளியேறியது.
சகாப்தம் முடிந்ததா:
முன்னதாக 42 வயதாகும் தோனி இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்தார். அத்துடன் முழங்கால் வகையால் அவதிப்படும் அவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் ஃபைனல் போட்டி சென்னையில் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. எனவே சேப்பாக்கத்தில் கோப்பையை வென்று சிஎஸ்கே ரசிகர்களுக்கு மத்தியில் தல தோனி ஓய்வு பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இப்போது சந்தித்த தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்களின் அந்த கனவு சுக்குநூறாக உடைந்துள்ளது. அதனால் 2019 உலகக் கோப்பை போல ஐபிஎல் தொடரிலும் இந்த வருடத்துடன் தோனி எனும் சகாப்தம் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தோனி ஓய்வு பெறுவாரா இல்லையா என்பது அவருக்கு தான் தெரியும் என்று சிஎஸ்கே அணியின் துணை பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் எதிர்காலத்தைப் பற்றி யூகிக்க விரும்பும் எவருக்கும் அது பைத்தியமாகி விடும். அவர் என்ன செய்யப் போகிறார் என்பது தோனிக்கு மட்டுமே தெரியும். தொடருக்கு முந்தைய முகாமில் அவர் பந்தை அடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். பல ஆண்டுகளாக அவர் பந்தை நன்றாக அடிப்பதை பார்த்து வருகிறேன். எனவே நன்றாக விளையாடும் அவர் தான் அந்த முடிவைப் பற்றி எடுப்பார்”
இதையும் படிங்க: தோனிக்கு எதிராக கடைசி ஓவரை சிறப்பாக வீசிய யாஷ் தயாளை பாராட்டி – ரிங்கு சிங் வெளியிட்ட பதிவு
“கிரிக்கெட் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய புரிதலின் அடிப்படையில் அவர் ஒரு நம்ப முடியாத அற்புதமான பையன். அவரைப் பற்றி நிறைய நினைவுகள் இருக்கிறது. அவர் எங்களுடைய வீரர்களுக்கு நிறைய தகவல் மற்றும் அறிவை பகிர்ந்து உதவி செய்து வருகிறார். அது தோனியை போல் விளையாடுவதை பற்றி கிடையாது. தோனியை போல் விளையாட்டை புரிந்து கொள்வதைப் பற்றியதாகும்” என்று கூறினார்.



