IPL 2023 : உண்மையாவே இவர் அடுத்த ரெய்னா தான், சின்ன தல’யின் மிரட்டல் சாதனையை சமன் செய்த மும்பை வீரர் – ரசிகர்கள் பாராட்டு

Tilak Varma
- Advertisement -

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 26ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் வெற்றிகரமான மும்பையை 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் மே 28இல் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் சுப்மன் கில் 129 (60) ரன்கள் விளாசிய உதவியுடன் 234 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய மும்பை அழுத்தமான போட்டியில் பதற்றமாக பேட்டிங் செய்து 18.2 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது.

கேப்டன் ரோஹித் சர்மா 8, டிம் டேவிட் 2, நேஹல் வதேரா 4 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 61 (38) ரன்களை விளாசினார். அந்தளவுக்கு பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்டு வெற்றி பெற்ற குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து நாளை நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் சென்னையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் களமிறங்க உள்ளது.

- Advertisement -

அடுத்த ரெய்னா:
மறுபுறம் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான மும்பை ஏமாற்றத்துடன் வெளியேறியது. இருப்பினும் பும்ரா, ஆர்ச்சர் இல்லாததால் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் கடப்பாரை பேட்டிங்கை வைத்து கடந்த வருடம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்ததிலிருந்து மீண்டெழுந்து இந்தளவுக்கு போராடி வந்ததே மிகப்பெரிய சாதனையாகும். முன்னதாக மோசமான தோல்வியை சந்தித்த கடந்த வருடமே 14 போட்டிகளில் 397 ரன்களை 131.02 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த இளம் வீரர் திலக் வர்மா மட்டுமே மும்பைக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தார்.

அந்த நிலையில் இந்த சீசனில் அதிரடியாகவும் அட்டகாசமாகவும் பேட்டிங் செய்த அவர் காயத்தால் முழுமையாக வாய்ப்பு பெறாவிட்டாலும் 11 போட்டிகளில் 343 ரன்களை 164.11 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி கடந்த வருடத்தை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு மும்பையின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இப்போட்டியில் தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த பின் களமிறங்கிய அவர் குஜராத்தின் தரமான பவுலராக கருதப்படும் முகமது சமியின் 5வது ஓவரில் 4, 4, 4, 4, 2, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 24 ரன்களை தெறிக்க விட்டார்.

- Advertisement -

அதே வேகத்தில் கொஞ்சம் கூட அதிரடியை நிறுத்தாமல் வெளுத்து வாங்கிய அவர் வெறும் 14 பந்துகளிலேயே 5 பவுண்டரி 3 சிக்சருடன் 43 (14) ரன்களை 307.14 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி ரசித் கான் சுழலில் அவுட்டானார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் சுற்றில் 300க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 40+ ரன்களை அடித்த 2வது வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையையும் அவர் சமன் செய்தார். அத்துடன் ஐபிஎல் தொடரில் தோல்வியை சந்தித்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ரெய்னாவுக்கு பின் அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.

முதலிடத்தில் இதே போல் 2014 குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக எரிமலையாக வெடித்த சின்ன தல ரெய்னா 87 (25) ரன்களை 348.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்ததை யாராலுமே மறக்க முடியாது. அதனால் ஏற்கனவே ரெய்னாவை போல் இவர் விளையாடுவதாக சமீப காலங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சொல்லப்போமால் ரெய்னா தம்முடைய ரோல் மாடல் என்று ஏற்கனவே தெரிவித்த திலக் வர்மா முக்கிய போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்ற யுக்திகளை அவர் தமக்கு மெசேஜ் செய்வார் என சமீபத்தில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க:GT vs MI : மும்பை அணிக்கெதிராக நான் இப்படி பொளந்து கட்ட இதுவே காரணம்- ஆட்டநாயகன் சுப்மன் கில் பேட்டி

அந்த நிலையில் நேற்றைய போட்டியில் அடுத்த ரெய்னாவை போலவே விளையாடிய திலக் வர்மா வருங்காலங்களில் உச்சகட்ட ஃபார்மை தொட்டு தனது குருவை மிஞ்சுவார் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

Advertisement