ஐபிஎல் 2022 : மெகா சிக்ஸர் அடித்து கேமரா மேன் மண்டைய பதம் பார்த்த இளம் இந்திய வீரர் – ரவி சாஸ்திரி பாராட்டு

- Advertisement -

மும்பையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களுக்கு திரில்லர் விருந்து படைத்து வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதி கோலாகலமாக துவங்கிய இந்த தொடர் வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்துள்ள நிலையில் இந்த தொடரின் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. வரும் மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் நடைபெறும் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்க மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. இதுவரை 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள அந்த அணி இப்படி முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தது அந்த அணி ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

நம்பிக்கை தரும் திலக் வர்மா:
இந்த வருடம் டெல்லிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடிய மும்பை மோசமான பந்து வீச்சு காரணமாக கையிலிருந்த நல்ல வெற்றியை கோட்டைவிட்ட நிலையில் ராஜஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டியிலும் அதைவிட மோசமாக பந்துவீசி தோல்வியை சந்தித்தது. குறிப்பாக அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக சதம் அடித்து 100 ரன்கள் விளசினார்.

அதை தொடர்ந்து 194 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா 10 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த இளம் வீரர் அன்மொல்பிரீட்சிங் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 40/2 என தடுமாறிய மும்பையை அடுத்து களமிறங்கிய இளம் வீரர் திலக் வர்மா மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷனுடன் இணைந்து மீட்டெடுக்க போராடினார். இதில் இஷான் கிஷன் 43 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்த திலக் வர்மா வெறும் 33 பந்துகளில் 61 ரன்கள் விளாசி முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கைரன் பொல்லார்ட், டிம் டேவிட் போன்ற முக்கியமான நட்சத்திர வீரர்கள் சொதப்பியதால் இறுதியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

கேமரா மேனை பதம் பார்த்த திலக் வர்மா:
முன்னதாக இந்த போட்டியில் மும்பை தடுமாறிய போது வெறும் 33 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உட்பட 61 ரன்களை 184.85 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் பறக்கவிட்ட திலக் வர்மா அதிரடியாக விளையாடினார். குறிப்பாக அவர் அடித்த 5 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸர் லாங் ஆப் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த டிரென்ட் போல்ட்டை தாண்டி அங்கிருந்த பவுண்டரியையும் தாண்டி அந்த பகுதியில் போட்டியை படம்பிடித்துக் கொண்டிருந்த கேமராமேன் தலையில் விழுந்தது. தனது தலை மீது மறைப்பு துணியைப் போர்த்திக் கொண்டு போட்டியை மட்டும் அவர் கவனித்துக் கொண்டு இருந்ததால் பந்து வருவதை அவரால் கவனிக்க முடியவில்லை.

அந்த நிலையில் அவரின் தலையின் மீது பந்து விழுந்த காரணத்தால் ஒரு சில வினாடிகள் வலியால் துடித்த அவர் கேமராவை விட்டுவிட்டு பின் நகர்ந்தார். இருப்பினும் நேரடி போட்டி ஒளிபரப்பு தடைபட்டு விடுமே என்ற அச்சத்தில் வலியைப் பொறுத்துக்கொண்டு மண்டையை துடைத்துக் கொண்டு மீண்டும் கேமராவின் அருகில் வந்து படம் எடுக்கத் தொடங்கி தனது வேலையை செய்தார். அதை அங்கு நின்று கொண்டிருந்த ட்ரெண்ட் போல்ட் கவனிக்க நல்ல வேளையாக அவருக்கு பெரிய அளவில் எதுவும் காயமில்லை.

- Advertisement -

பாராட்டிய ரவி சாஸ்திரி:
இப்படி அடுத்தடுத்த தோல்விகளில் மும்பை தவித்து வரும் போதிலும் அந்த அணிக்காக கடந்த 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா அந்த அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். ஏனெனில் முதல் போட்டியில் 22 ரன்கள் எடுத்த அவர் 2-வது போட்டியில் 61 ரன்களை அதிரடியாக எடுத்து மிடில் ஆர்டரில் மும்பையின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் காயத்தால் விலகியிருக்கும் நிலையில் அவரின் இடத்தில் களமிறங்கிய திலக் வர்மா அவர் இல்லாத குறையை நிவர்த்தி செய்து வருகிறார்.

இப்படி அதிரடியாக விளையாடிய கவனம் ஈர்க்க தொடங்கியுள்ள திலக் வர்மாவை முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு :

இதையும் படிங்க : வீடியோ : இந்த வயசுலயும் இப்படி ஒரு சிறுத்தை வேகமா! பஞ்சாப் வீரரை ரன் அவுட் ஆக்கி – அசத்திய தல தோனி

“அவரின் பொறுமையும் நிதானமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அவர் எதிரணியில் இருக்கும் நட்சத்திர உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கண்டு அஞ்சாமல் தைரியத்துடன் விளையாடுகிறார். அதிலும் சூரியகுமார் யாதவ் இல்லாமல் மும்பை தவித்து வரும் நிலையில் அந்த குறையை தீர்த்து வரும் இவர் அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்துள்ளார்” என கூறினார்.

Advertisement