
இந்தியாவில் ஜூலை 21ஆம் தேதி குரு பூர்ணிமா தினம் கொண்டாடப்பட்டது. மாதா, பிதாவுக்கு பின் மனிதர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு குரு என்பவர்கள் மிகவும் இன்றியமையாத பங்காற்றி வருகிறார்கள். எனவே இன்றைய குரு பூர்ணிமா நாளில் தங்களுக்கு அறிவையும் திறமையும் கற்றுக் கொடுத்த ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பலரும் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் துஷார் தேஷ்பாண்டே முன்னாள் கேப்டன் தோனிக்கு குரு பூர்ணிமா நாளில் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏனெனில் 2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தலைமையில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பில் 2022 சீசனில் ரன்களை வாரி வழங்கிய அவர் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.
குருவுக்கு வாழ்த்து:
அதனால் அவரை அணியிலிருந்து நீக்குமாறு சிஎஸ்கே ரசிகர்கள் பலமுறை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். ஆனாலும் தோனி தொடர்ந்து நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்புகளும் ஆதரவும் கொடுத்தார். அதை பயன்படுத்திய தேஷ்பாண்டே 2023 சீசனில் 16 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து சென்னை 5வது கோப்பையை வெல்ல உதவினார்.
இருப்பினும் 9.92 என்ற சுமாரான எக்கனாமியில் பந்து வீசிய அவர் விக்கெட்டுகளுக்கு நிகராக ரன்களைக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் அவரையும் வைத்து தோனி 5வது ஐபிஎல் கோப்பையை வென்றது வேறு கதை. அப்படி சிஎஸ்கே அணியில் ஓரளவு நன்றாக செயல்பட்டதால் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு துஷார் தேஷ்பாண்டேவுக்கு கிடைத்தது.
அந்த வாய்ப்பில் தனது அறிமுக போட்டியிலேயே விக்கெட் எடுத்து தேஷ்பாண்டே அசத்தினார். அந்த வகையில் கிரிக்கெட்டில் அவர் முன்னேறி இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பை பெறுவதற்கு தோனி முக்கிய காரணமாக திகழ்கிறார். அதனால் குரு பூர்ணிமா நாளில் இன்ஸ்டாகிராமில் தம்முடைய தந்தையுடன் தோனி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள தேஷ்பாண்டே சமஸ்கிருத மொழியில் நெகிழ்ச்சியான வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை 2024 : 201 ரன்ஸ்.. ரிச்சா வரலாற்று சாதனை.. மாபெரும் சாதனையுடன் அமீரகத்தை வீழ்த்திய இந்தியா
மேலும் ஜிம்பாப்வே தொடரின் போது சிஎஸ்கே பற்றி அவர் பேசியிருந்தது பின்வருமாறு. “நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற என்னுடைய சிறு வயது கனவுக்கு நான் மீண்டும் செல்கிறேன். இந்திய அணியில் நீல நிற ஜெர்ஸியை அணிந்துள்ளது பெருமையளிக்கிறது. இது எனக்கு மிகப்பெரியது. சிஎஸ்கே அணியில் விளையாடியது எனக்கு உதவியது. அந்த அனுபவம் கண்டிப்பாக எனக்கு சர்வதேச அளவில் உதவும்” என்று கூறினார்.