சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தென்னிந்தியாவை கொச்சைப்படுத்திய ரோஹித், ரசிகர்கள் கோபம் – அப்படி என்ன கூறினார்?

Rohith
- Advertisement -

பிரசித்தி பெற்ற உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாகத் துவங்கியது. வரும் மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் லக்னோ, குஜராத் ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறுகின்றன. இம்முறை 65 நாட்கள் நடைபெறும் இந்த தொடர் முழுவதும் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முழுவதும் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் உள்ள 4 முக்கிய மைதானங்களில் 25% ரசிகர்களுக்கு முன்னிலையில் நடைபெற உள்ளது.

மும்பைக்கு சாதகம்:
இந்த தொடரின் 70 லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள வான்கடே, டிஒய் பாட்டில், ப்ராபோர்ன், எம்சிஏ ஆகிய 4 மைதானங்களில் மட்டும் நடைபெற உள்ளது. அதாவது ஐபிஎல் 2022 தொடரின் கிட்டத்தட்ட 95% போட்டிகள் மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது. இது இந்த தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த தொடரில் பங்கேற்கும் எஞ்சிய 9 அணிகளை காட்டிலும் அந்த அணிக்கு மட்டும்தான் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் சொந்த மண்ணில் விளையாடி கோப்பையை வெல்வதற்கான ஒரு மிகப்பெரிய பொன்னான வாய்ப்பு தாமாகவே கிடைத்துள்ளது.

- Advertisement -

இதனால் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக நடக்கும் வகையில் பிசிசிஐ ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என இந்த விஷயத்தில் இதர 9 அணிகளும் சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தன. ஏனெனில் பொதுவாகவே சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடினால் எந்த ஒரு அணிக்கும் ஒரு எக்ஸ்ட்ரா உத்வேகம் கிடைத்து வெற்றி பெறுவதற்கு ஒரு உந்துசக்தியாக அமையும். எனவே அதுபோன்ற ஒரு சாதகம் தங்களுக்கு அமையவில்லை என ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில அணிகள் வெளிப்படையாகவே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தன.

முடிஞ்சா 4 மைதானத்தை கட்டுங்க:
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் எதிரணிகளின் கேள்விக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேரடியாக பதில் அளித்துள்ளார். இதுபற்றி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான தங்களது முதல் போட்டிக்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “மும்பை எப்படி மும்பையில் விளையாடலாம் என பல எதிர் அணிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் தங்களின் நகரங்களில் 3 – 4 புதிய மைதானங்களை கட்ட முயற்சிக்க வேண்டும்” என சிரித்துக்கொண்டே அந்தக் கேள்வியைக் கேட்ட பத்திரிக்கை நிருபரை கலாய்க்கும் வகையில் பதில் அளித்தார்.

- Advertisement -

ஆனால் அவரின் இந்த பதில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தென்னிந்திய ஐபிஎல் அணிகளை சேர்ந்த ரசிகர்களையும் இதர அணிகளைச் சேர்ந்த ஐபிஎல் ரசிகர்களையும் மிகுந்த கோபமடைய வைத்துள்ளது. ஏனெனில் இந்தியாவிலேயே மும்பை என்பது கடந்த பல வருடங்களுக்கு முன்பாகவே ஒரு மிகப்பெரிய வளர்ந்த நகரமாக கருதப்படுகிறது. அதன் காரணமாக கடந்த 50 வருடங்களுக்கு முன்பாகவே அங்கு 2 – 3 மைதானங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் ஒரு சில மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டன. அந்த வகையில் தற்போது மும்பையில் முதல் தரமான 4 கிரிக்கெட் மைதானங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் அளவுக்கு உள்ளன. அதன் காரணமாகவே தற்போதைய நிலைமையை சமாளிக்கும் வகையில் அந்த நகரில் முழு ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொச்சை படுத்திவிட்டாரா:
அதற்காக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் இதர முக்கியமான நகரங்கள் முன்னேற்றம் அடையவில்லை என்று அர்த்தமல்ல. சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் மட்டும்தான் உள்ளது என்ற நிலையில் மும்பை எப்படி மும்பையில் விளையாடலாம் என கூறும் எதிரணிகள் முடிந்தால் தங்களின் சொந்த நகரங்களில் 2 – 3 மைதானங்களை கட்ட வேண்டியதுதானே என்பது போல இந்தியாவின் இதர நகரங்களை கொச்சைப் படுத்தும் வகையில் ரோஹித் சர்மா பேசியது ஒருசில ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

இது போன்ற சூழ்நிலையில் ரோகித் சர்மா போன்ற ஒரு இந்தியாவின் கேப்டன் பதவியில் இருக்கும் ஒருவர் வேறு ஏதாவது பதிலை அல்லவா அளித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எஞ்சிய நகரங்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியது சரியானது அல்ல என ரசிகர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் சென்னை சேப்பாக்கத்தில் காலம் காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் அளவுக்கு முதல் தர கிரிக்கெட் மைதானம் உள்ளது. அதை விட்டால் திண்டுக்கல் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் கிரிக்கெட் மைதானங்கள் இருந்தாலும் அது ஐபிஎல் போன்ற போட்டிகளை நடத்தும் அளவுக்கு இன்னும் தரம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement