சொந்த மண்ணில் மட்டுமே புலி, வெளிநாட்டில் எலி – இந்தியா கப் வாங்க வாய்ப்பில்லை, முன்னாள் பாக் வீரர் அதிரடி

IND vs SA VIrat Kohli Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 15 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் ஆட்டத்தால் தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் நெதர்லாந்தை வீழ்த்தி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. ஆனால் 3வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்து ஹாட்ரிக் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா அரையிறுதிக்கு செல்ல எஞ்சிய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடுகிறது.

David-Miller

- Advertisement -

முன்னதாக இந்த உலகக் கோப்பையில் கடைசி நேரத்தில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதால் தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சு துறை முகமது ஷமி, அர்ஷிதீப் சிங், புவனேஸ்வர் குமார் ஆகியோரது கட்டுக்கோப்பான செயல்பாடுகளால் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. மேலும் பேட்டிங் துறையில் பார்முக்கு திரும்பிய விராட் கோலி, சூரியகுமார், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அசத்தி வருகின்றனர்.

ஆனால் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய கேப்டன் ரோஹித் சர்மா – துணை கேப்டன் கேஎல் ராகுல் தடுமாறுவதும் பினிஷிங் செய்வதில் தினேஷ் கார்த்திக் திணறுவதும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. அதே சமயம் பீல்டிங் துறையில் நிறைய தடுமாற்றம் காணப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடுகள் 70% சிறப்பாகவே உள்ளது. இருப்பினும் இது போன்ற சுமாரான செயல்பாடுகள் தான் அணியில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தும் தன்மையை கொண்டது.

David Miller Hardik Pandya IND vs SA

வீட்டில் புலி, வெளிநாட்டில் எலி:
அதனால் ஒவ்வொரு போட்டியிலும் அதிலிருந்து இந்திய அணியினர் பாடங்களை கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு இந்த உலகக் கோப்பையை வெல்வார்கள் என இந்திய ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் இந்தியா எப்போதுமே அதனுடைய சொந்த மண்ணில் மட்டுமே அசத்தலாக செயல்படும் கிரிக்கெட் அணி என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி வரலாற்றில் வெளிநாடுகளில் அதுவும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அவர்கள் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதில்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்கு பின் பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் இந்தியா விளையாடும் விதத்தை வைத்து பார்க்கும் போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் இந்தியாவுக்கு வெளியே அவர்கள் நல்ல சாதனைகளையோ அல்லது சிறந்த செயல்பாடுகளையோ வெளிப்படுத்தியதாக தெரியவில்லை. இருப்பினும் அவர்களது அணி சமநிலையுடன் இருப்பதால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என கூறினார்.

Afridi

அதாவது சொந்த மண்ணில் புலியாக இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை ஓடவிட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியுள்ள இந்தியா வெளிநாடுகளில் எலியாக தடுமாறுவதாக சாகித் அப்ரிடி கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த 2014 முதல் வெளிநாடுகளில் நடைபெற்ற அத்தனை உலகக் கோப்பைகளிலும் நாக் அவுட் போன்ற முக்கிய தருணங்களில் சொதப்பி வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ள இந்தியா இந்த உலகக் கோப்பையிலும் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கு எடுத்துக்காட்டாக கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்ற இந்தியா சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 6 அணிகள் பங்கேற்ற மினி உலக கோப்பையை போன்ற ஆசிய கோப்பையில் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் சொதப்பி பைனலுக்கு கூட செல்ல முடியாமல் வெளியேறியது. அதனால் இந்த உலக கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்வது கடினம் என்று மறைமுகமாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அனைத்து துறைகளிலும் சமநிலையை ஏற்படுத்தும் அளவுக்கு தரமான வீரர்கள் இருப்பதால் பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement