விராட் – ரோஹித் ஓரமாய் நிற்கும் ! 2019 ஐபிஎல் முதல் ராஜாங்கம் நடத்தும் நட்சத்திர இந்திய வீரர் – விவரம் இதோ

Virat Kohli Rohit Sharma MI vs RCB
- Advertisement -

நடந்து வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 4-வது வார்த்தை கடந்து பல எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பையும் சென்னையும் தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் திண்டாடுவது அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. அதிலும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை தனது முதல் 8 போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்து வரலாற்றில் மோசமான சாதனையுடன் முதல் அணியாக வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

Virat Kohli Rohit Sharma

- Advertisement -

அதைவிட இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மாவும் விராட் கோலியும் இந்த வருடம் ரன்கள் அடிக்க முடியாமல் திணறுவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வியப்பாக உள்ளது. ஏனெனில் கடந்த பல வருடங்களாக ரன் மழை பொழிந்து பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர்களை கிங் கோலி, ஹிட்மேன் ரோகித் என ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு தங்களை நிரூபித்துள்ளார்கள்.

கலக்கல் கேஎல் ராகுல்:
கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு சதமடித்த விராட் கோலி அதன்பின் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஐபிஎல் உட்பட 101* போட்டிகளாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தவித்து வருகிறார். அதேபோல் கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்த ரோகித் சர்மா அதன்பின் அதே பழைய ஹிட்மேனாக முரட்டுத்தனமாக ரன்களை அடிப்பதில்லை. குறிப்பாக கடந்த 2019க்கு பின் நடந்த ஐபிஎல் தொடருக்கு பின் 332, 381, 153* என்ற சுமாரான ரன்களை அவர் வெறும் 25.36 என்ற மோசமான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார்.

kohli 1

அதேபோல் 466, 405, 119* என்ற ரன்களை 29.42 என்ற சுமாரான சராசரியில் 2019க்கு பின்பு நடந்த ஐபிஎல் தொடரில் எடுத்துள்ள விராட் கோலி அவரின் தரத்திற்கு இதெல்லாம் மிகவும் குறைவு என்றே கூறலாம். ஆனால் இதே காலகட்டத்தில் 670, 626, 368* என கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் ரன் மழை பொழிந்து வரும் மற்றொரு இந்திய நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 59.92 என்ற சூப்பரான சராசரி விகிதத்தில் அபாரமாக பேட்டிங் செய்து வருகிறார்.

- Advertisement -

அதிவேக அதிரடி பேட்டிங்:
இதன் காரணமாகவே இந்த வருட ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரராக 17 கோடிக்கு லக்னோ அணியின் கேப்டனாக விளையாடும் அளவுக்கு அவரின் மவுசு பல மடங்கு உயர்ந்துள்ளது. அந்த வகையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 2 சதங்கள் உட்பட 368* ரன்களை விளாசி அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 2-வது இடம் பிடித்து ஆரஞ்சு தொப்பிக்காக பட்லருடன் போட்டி போட்டு வருகிறார்.

KL Rahul Century

மேலும் வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த வருடம் பங்கேற்ற 2 போட்டிகளிலும் அற்புதமாக பேட்டிங் செய்த அவர் 103* மற்றும் 103* என அச்சில் வார்த்தது போல் அடுத்தடுத்த சதமடித்து மிரட்டலாக செயல்பட்டு வருகிறார். மொத்தம் மும்பைக்கு எதிராக 3 சதங்கள் அடித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

- Advertisement -

மேலும் ஏப்ரல் 24-ஆம் தேதி மும்பைக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் சதமடித்த அவர் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற ரோகித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்தார். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 6 சதங்களை அடித்த இந்திய பேட்ஸ்மென் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல் இதோ:

KL Rahul 103

1. கேஎல் ராகுல் : 6 சதங்கள் (167 இன்னிங்ஸ்)
2. ரோஹித் சர்மா : 6 சதங்கள் (365 இன்னிங்ஸ்)
3. விராட் கோலி : 5 சதங்கள் (317 இன்னிங்ஸ்)
4. சுரேஷ் ரெய்னா : 4 சதங்கள் (319 இன்னிங்ஸ்)

- Advertisement -

லேட்டஸ்ட் நாயகன்:
இதோடு சேர்ந்து கடந்த 2019 ஐபிஎல் தொடரிலிருந்து விராட் கோலியும் ரோகித் சர்மாவும் சேர்ந்து 4 ஆட்ட நாயகன் விருதுகளை மட்டுமே வென்றுள்ளனர். ஆனால் கேஎல் ராகுல் மட்டும் தனியாளாக இருமடங்குக்கும் அதிகமாக 10 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று பிரமிக்க வைக்கிறார்.

இதையும் படிங்க : பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியிலும் மொயின் அலி நீக்கம். காரணம் என்ன தெரியுமா? – விவரம் இதோ

அதற்காக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தரம் குறைந்து விட்டார்களா என்றால் கண்டிப்பாக கிடையாது. ஆனால் கடந்த 2019க்கு பின் அவர்கள் சரிந்துள்ள நேரத்தில் சத்தமில்லாமல் இமயமலை போன்ற எழுச்சியை கண்டுள்ள கேஎல் ராகுல் இந்தியாவின் லேட்டஸ்ட் நாயகனாக உருவெடுத்துள்ளார் என்றே கூறலாம்.

Advertisement