என்னாங்க பெரிய உம்ரான் மாலிக்? எங்ககிட்ட லோக்கலில் 1000 உம்ரான் மாலிக் இருக்காங்க – வம்பிழுக்கும் முன்னாள் பாக் வீரர்

- Advertisement -

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்து வீசி அனைவரது பாராட்டுகளைப் பெற்று இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். கடந்த 2021 ஐபிஎல் தொடரில் கடைசி நேரத்தில் ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு பெற்று தொடர்ந்து 145 கி.மீ வேகத்தில் பந்து வீசிய அவர் அப்போதைய கேப்டன் விராட் கோலியின் பாராட்டுகளை ஆரம்பத்திலேயே அள்ளினார். அதனால் 2022 சீசனில் ஹைதராபாத் அணியில் தக்கவைக்கப்பட்டு முழுமையான வாய்ப்பு பெற்ற அவர் தொடர்ந்து 145 – 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை தெறிக்க விட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டார்.

குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய வீரர் என்ற சாதனை படைத்த அவர் கடந்த ஜூலை மாதம் அயர்லாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் அறிமுகமாக களமிறங்கி முதல் போட்டியிலேயே இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் வேகத்தை மட்டுமே பந்து வீசியதால் நிறைய ரன்களையும் வாரி வழங்கிய அவர் 2 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்டார். அதன் காரணமாக ரன் மெசின் என்று ரசிகர்களின் கிண்டல்களுக்கும் உள்ளான அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையிலும் சேர்க்கப்படவில்லை.

- Advertisement -

1000 உம்ரான் மாலிக்:
ஆனால் அவரை 2 போட்டியுடன் கழற்றி விட்டு இந்தியா தவறு செய்து விட்டதாக பிரெட் லீ, வாசிம் அக்ரம் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று சில மாற்றங்களை செய்த உம்ரான் மாலிக் இந்தியாவுக்காக பெற்ற 2வது வாய்ப்பில் நல்ல லைன், லென்த் போன்ற விவேகங்களையும் பின்பற்றி குறைவான ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மொத்தத்தில் இதுவரை 24 விக்கெட் எடுத்துள்ள அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமான பந்து வீசிய இந்திய பவுலராகவும் குறுகிய காலத்திலேயே சாதனை படைத்துள்ளார்.

அதனால் சோயப் அக்தரின் உலக சாதனையை விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் உம்ரான் மாலிக் போல பாகிஸ்தானில் உள்ளூர் போட்டிகளிலேயே ஏராளமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக முன்னாள் வீரர் சோஹைல் கான் விமர்சித்துள்ளார். இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உம்ரான் மாலிக் நல்ல பவுலர் என்பதை நான் உணர்கிறேன். அவர் விளையாடிய ஓரிரு போட்டிகளை நான் பார்த்துள்ளேன். மிகவும் வேகமாக ஓடி வரும் அவர் மற்றவற்றிலும் சரியாக உள்ளார். ஆனால் 150 – 155 கி.மீ வேகத்தில் வீசும் பவுலரை பற்றி நீங்கள் நினைத்தால் 12 – 15 வீரர்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள் என்று என்னாள் சொல்ல முடியும்”

- Advertisement -

“குறிப்பாக உள்ளூரில் லாகூர் குவாலண்டர்ஸ் அணி நிர்வாகம் நடத்தும் ஒரு சோதனை முகாமுக்கு நீங்கள் சென்றால் உம்ரான் மாலிக் போல ஏராளமான வீரர்களை பார்க்க முடியும். அதாவது எங்களுடைய உள்ளூர் கிரிக்கெட்டில் உம்ரான் மாலிக் போன்ற ஏராளமான பவுலர்கள் நிறைந்து கிடக்கிறார்கள். அங்கிருந்து வருபவர்கள் ஹாரீஸ் ரவூப், நாசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி போன்ற நட்சத்திரங்களாகவும் உருவெடுக்கிறார்கள். அவர்களைப் போன்ற நிறைய பெயர்களை நான் சொல்ல முடியும்”

“அத்துடன் நீங்கள் சொல்வது போல் சோயப் அக்தரின் (161.3 கி.மீ) உலக சாதனையை ஒருவரால் மட்டுமே உடைக்க முடியும். அது பவுலிங் மெஷினாகும். ஏனெனில் மனிதரால் அதை உடைக்க முடியாது. காரணம் நான் ஒரு வாரத்தில் பயிற்சி எடுக்கும் 10 ஓட்டங்களை அவர் ஒரே நாளில் 32 முறை செய்தவர். அவர் வேகமாக வீச வேண்டும் என்பதற்காக மலையேற்றம் வண்டியை கட்டி இழுத்தது போன்ற நிறைய கடினமான பயிற்சிகளை செய்தார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs AUS : ஆஸ்திரேலியவை சாய்க்க 2 தமிழக வீரர்கள் உட்பட இந்திய அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு – பிசிசிஐ பதிலடி திட்டம்

அதாவது உம்ரான் மாலிக் போல பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கில் வீரர்கள் இருப்பதாக தெரிவிக்கும் அவர் சோயப் அக்தர் உலக சாதனை உடைக்கவும் முடியாது என்று கூறியுள்ளார். முன்னதாக விராட் கோலியை மகனே என்றழைத்து 2015 உலகக் கோப்பையில் பதிலடி கொடுத்ததாக சமீபத்தில் தெரிவித்திருந்த சோஹைல் கான் தற்போது உம்ரான் மாலிக்கை வம்பிழுக்கும் வகையில் பேசியுள்ளது இந்திய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

Advertisement