
இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் களத்தில் சாதுவாகவும் பொறுமையின் சிகரமாகவும் செயல்படும் தன்மை கொண்டவர். பொதுவாகவே எப்பேர்பட்ட பந்துவீச்சாளர் எவ்வளவு தூரத்திலிருந்து வேகமாக ஓடிவந்து பந்து வீசினாலும் அப்படியே தடுத்து நிறுத்தி அவர்களை களைப்படையும் வகையில் அதிக பந்துகளை நிதானமாக எதிர்கொள்ளும் பண்புடைய அவர் நங்கூரமாக பேட்டிங் செய்து ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்தவர். அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 10000 ரன்களை குவித்து தம்மால் அதிரடியாகவும் விளையாட முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்.
ஐபிஎல் தொடரில் விளையாடி ஓய்வுக்குப் பின் 2016 முதல் அண்டர்-19 அளவில் பயிற்சியாளராக செயல்பட்டு வருங்கால இந்திய அணியை தரமானதாக கட்டமைத்த அவர் கடந்த 2021 முதல் சீனியர் அணிக்கும் தலைமை பயிற்சியாளராக தனது வாழ்வை இந்திய கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்துள்ளார் என்றே கூறலாம். அதன் காரணமாக ஏராளமான இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழும் அவருக்கு இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். அப்படிப்பட்ட மதிப்புமிக்க அவருடன் இணைந்து விளையாடிய பலரும் நிறைய தருணங்களில் அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை கூறுயுள்ளார்கள்.
4000 புலிகள்:
அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் அவருடன் இணைந்து கடந்த 2011இல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியபோது ஏற்பட்ட சுவாரசிய அனுபவங்களை நியூசிலாந்தின் முன்னாள் வீரர் ராஸ் டைலர் பகிர்ந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த மகத்தான நியூசிலாந்து ஜாம்பவானாக போற்றப்படும் அவர் கடந்த பிப்ரவரியில் ஓய்வு பெற்ற நிலையில் தனது வாழ்க்கையைப் பற்றிய சுய சரிதையை புத்தகமாக சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மாநிறமாக இருந்ததால் நியூசிலாந்து அணிக்குள்ளேயே சந்தித்த நிறவெறி கேலி கிண்டல்களை வேதனையுடன் பகிர்ந்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்காக விளையாடும் போது ஒரு போட்டியில் டக் அவுட்டானதால் அதன் உரிமையாளர் ஒருவர் 2 – 3 முறை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
அந்த நிலைமையில் அதே ராஜஸ்தான் அணிக்காக ஜாம்பவான் ராகுல் டிராவிட் உடன் விளையாடியபோது ஒருமுறை புலிகள் சரணாலயத்திற்கு சென்றிருந்ததாகவும் அப்போது காட்டிலுள்ள புலிகளை பார்ப்பதை விட்டுவிட்டு அங்கிருந்தவர்கள் தம்முடன் வந்த ராகுல் டிராவிட்டை பார்த்து புகைப்படம் எடுத்ததாகவும் நிகழ்ந்த வேடிக்கையான நிகழ்வை பகிர்ந்துள்ளார். இது பற்றி தனது புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.
“ஒருமுறை நீங்கள் எத்தனை முறை புலிகளை பார்த்துள்ளீர்கள் என்று டிராவிட்டிடம் நான் கேட்டேன். அதற்கு 21 முறை அதைப் பார்க்க சென்ற பயணத்தில் ஒன்றை கூட நான் பார்க்கவில்லை என்று என்னிடம் அவர் பதிலளித்தார். அப்போது 21 முறை பயணித்த பின்பும் எதையுமே பார்க்கவில்லையா என்று நான் நினைத்தேன். அது பற்றி தீவிரமாக தெரிந்திருந்தால் நான் அன்றைய நாளில் அவருடன் சென்றிருக்க மாட்டேன். மேலும் உங்களுடன் வர முடியாது நன்றி நான் டிஸ்கவரி சேனலில் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருப்பேன். ஜேக் ஓரம் காலையில் வெளியே வந்திருப்பார்”
“அதன்பின் ஒரு பேஸ்பால் போட்டி நடந்ததை டிவியில் பார்க்க விரும்பிய டிராவிட் அன்றைய நாளின் மதியத்தில் சரணாலயத்திற்கு பயணித்த எங்களுடன் வர விரும்பவில்லை. அப்போது டி17 என்ற பெயருடைய பிரபலமான புலி கண்டுபிடிக்கப்பட்டதாக எங்கள் டிரைவருக்கு ஒரு சக ஊழியரிடமிருந்து ரேடியோ அழைப்பு வந்தது. அதைக்கேட்டு டிராவிட் சிலிர்த்துப் போனார். 21 முறை பயணம் செய்தும் பார்க்காத புலியை அடுத்த அரை மணி நேரத்தில் 22வது பயணத்தில் பார்க்கும் முனைப்புடன் எங்களது பயணத்தில் அவர் இடம் பிடித்தார்”
“அதன்பின் லேண்ட் ரோவர் காரை விட பெரிய அளவிலான திறந்தவெளி எஸ்யூவி வாகனத்தில் நாங்கள் பயணித்தோம். அப்போது 100 மீட்டர் தொலைவில் ஒரு புலி பாறையில் நின்ற போது நாங்கள் வாகனத்தை நிறுத்தினோம். காட்டில் அந்த பெரிய புலியைப் பார்த்த நாங்கள் திகைத்துப் போனோம்”
இதையும் படிங்க: புள்ளிவிவரம் பொய் சொல்லாது, டி20 உ.கோப்பையில் விளையாடும் தகுதி ஜடேஜாவுக்கு இல்லை – ஆதாரத்துடன் பேசும் முன்னாள் வீரர்
“ஆனால் மற்ற வாகனங்களில் இருந்தவர்கள் புலியை பார்க்காமல் உடனடியாக தங்களது கேமராக்களை ராகுல் டிராவிட் பக்கம் திருப்பி குறிவைத்தனர். நாங்கள் புலியை பார்த்து உற்சாகம் அடைந்ததைப் போல் அவர்கள் ராகுல் டிராவிட்டை பார்த்து உற்சாகமடைந்தனர். அப்போது உலகம் முழுவதிலும் 4000க்கும் மேற்பட்ட புலிகள் இருக்கலாம். ஆனால் உலகில் ஒரே ஒரு ராகுல் டிராவிட் தான் இருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன்” என்று கலகலப்பாக பதிவிட்டுள்ளார்.